தமிழக அரசியலில் வாக்குகளும், வாக்குறுதிகளும்


-சேவியர்.

உழைப்புக்கான வேலை தருவேன் என்பவர்களை நிராகரிப்பார்கள்,
உழைக்காமல் உண்ண அரிசி தருவேன் என்றால் தலையாட்டுவார்கள்.

முதல் முறை ஏமாந்தால்
ஏமாற்றியவன் புத்திசாலி,
இரண்டாம் முறையும் ஏமாந்தால்
ஏமாந்தவன் முட்டாள் !

வாக்குறுதிகள் ஒன்றும் புதிதல்ல. ஒவ்வோர் நிகழ்விலும், ஒவ்வோர் உடன்படிக்கையிலும், ஒவ்வோர் ஒப்பந்தத்திலும், ஒவ்வோர் சந்திப்பிலும் வாக்குறுதிகள் பரிமாறப்படுகின்றன. காதல் வாக்குறுதிகள் முதல், தேர்தல் வாக்குறுதிகள் வரை நாம் தினமும் வாக்குறுதிகளைச் சந்திக்கிறோம். சில வாக்குறுதிகள் காலைப் பனித்துளியைப் போல கதிரவன் வந்ததும் காணாமல் போய்விடுகின்றன. சில வாக்குறுதிகள் கால்வாய் போல, கோடைக்காலம் வரை தாக்குப்பிடித்து வற்றிப் போகின்றன. சில வாக்குறுதிகள் தான் கடைசி வரை கனிதந்து வாக்குறுதிக்கு வாய்மை சேர்க்கின்றன.

அதிலும் குறிப்பாக தேர்தல் நேர வாக்குறுதிகள் வாக்குகளை நோக்கிய வாய்க்கரிசி தான். எந்த கட்சியும், தான் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாய் நினைவில்லை. குறைத்த பட்சமேனும் நிறைவேற்றுகின்ற கட்சிகள் கண்ணியத்துக்குரியவையாய் கவனிக்கப்படுகின்றன.

வாக்குறுதி என்பது செயல்திட்டமாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் வல்லமை அதற்கு இருக்கும். அவை தற்காலிக தலைவலித் தைலங்களாக இருக்கும்போது நீண்ட காலப் பலனை சமூகம் பெறுவதில்லை. மாறாக அவை சுயநலவாதிகளின் கையில் விழுந்து காலாவதியாகிப் போகின்றன.

வாக்குகளைக் குறிவைத்து எறியப்படுகின்ற வாக்குறுதிகள், மாம்பழத்தை நோக்கி எறிகின்ற கற்களைப் போன்றவை. பழம் கீழே விழுந்தபின் அந்த மரத்தை யாரும் கவனிப்பதில்லை. வேர்களுக்கு நீர் தருவேன், நிலத்துக்கு உரம் தருவேன், காற்றோட்டமான தோட்டம் தருவேன் எனும் வாக்குறுதிகளெல்லாம் கனிகளைப் பிடுங்கியபின் காணாமல் போய்விடும். வாக்குறுதிகள் வாக்குகளின் எண்ணிக்கைக்காக இல்லாமல், வாக்காளனின் வாழ்வுக்காக என மாறும்போது தான் அரசியல் பணி தூய்மையானதாக மாறும்.

நமது வாக்காளர்களை அப்பாவிகள் என்பதா ? ஏமாளிகள் என்பதா ? அல்லது கோமாளிகள் என்பதா எனத் தெரியவில்லை. உழைப்புக்கான வேலை தருவேன் என்பவர்களை நிராகரிப்பார்கள், உழைக்காமல் உண்ண அரிசி தருவேன் என்றால் தலையாட்டுவார்கள். கல்வியை இலவசமாய்த் தருவேன் என்றால் கண்டு கொள்ள மாட்டார்கள், காலாட்டிக் கொண்டே குடிக்க பிரியாக காபி தருவேன் என்றால் தலையாட்டுவார்கள். மக்களுக்கு எது எதிர்காலத் தேவைக்கானது, எது தற்காலிகத் தப்பித்தலுக்கானது என்பது தெரியவில்லை.

வானவில்லை வளைத்து வாசல்படியில் கட்டுவேன் என்றால், “ஓ.. அப்படியா ?” என கொஞ்சமும் மூளையை பயன்படுத்தாமல் ஒத்துக் கொள்வார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்தபின், இருக்கும் வாசலையும் கழற்றிக் கொண்டு போய் விடுவார்கள். அதே ஆட்கள் அடுத்ததடவை வந்து, ‘நான் வானவில் தராததுக்குக் காரணம் பாகிஸ்தான் தான், அடுத்த முறை கண்டிப்பாக தருவேன்’ என்றால் மீண்டும் தலையாட்டிப் பொம்மைகள் ஆகிவிடுவார்கள்.

எது சாத்தியம் ? எது சாத்தியமில்லை ? எது தேவையானது ? எது தேவையற்றது போன்ற சிந்தனைகள் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருந்தால் சரியான தேர்வுகளை எடுக்க அது உதவியாக இருக்கும்.

வாக்காளர்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். வெறுப்பு அரசியலை வெறுக்க வேண்டும். வெறுப்பு அரசியலை யாரெல்லாம் பரப்புகிறார்களோ அவர்களை வேரறுக்க வேண்டும். அந்த வெறுப்பு அரசியல் எது சார்ந்ததாய் வேண்டுமானாலும் இருக்கலாம். என் இனம் சார்ந்ததாக, என் மதம் சார்ந்ததாக, என் சாதி சார்ந்ததாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நாம் நிராகரித்தே ஆகவேண்டும்.

மானுடம் வெறுப்பின் வழிகளில் நடக்க வேண்டியதல்ல. அது அன்பின் பாதையில் நடக்க வேண்டியது. அந்த அன்பின் அடித்தளத்தின் மீது கோடரி வைக்கும் எந்தக் கொள்கையையும் மனித நேயம் மிக்க மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இவை பிரித்தாளும் அரசியல். குளத்தைக் கலக்கினால் தான் மீன் பிடிக்க முடியும் என்பார்கள். அழகாக ஒரு குளம் இருக்கும். அதில் மகிழ்ச்சியாக மீன்கள் நீந்திக் கொண்டிருக்கும். மலர்களும், இலைகளும் அந்த நீர்நிலையை வெப்பம் தாக்காமல் பாதுகாக்கும். திடீரென ஒருவன் வந்து குளத்தைக் கலக்குவான். மீன்கள் மூச்சுத் திணறி மிதக்கத் துவங்கும். அப்போது மீன்களை அள்ளி எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு போய்விடுவான்.

குளம் எனும் சமூகம் கலங்கும்போது அரசியல் வாதி வாக்கு அறுவடை செய்கிறான். அவன் போனபின் அமைதியாய் இருந்த குளம் கலங்கிப் போய் களையிழந்து, வாழ்விழந்து நிற்கும். அரசியல் சுயநலத்துக்காக பிரித்தாளும் நகர்த்தல்களைச் செய்தால், மானுடம் விழித்துக் கொண்டு அவர்களை விரட்ட வேண்டும். அது வெறும் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், நமது வாழ்வின் அடி நாதத்தையே உடைத்துவிடும்.

வாக்குறுதிகளின் நம்பகத் தன்மையைப் பார்ப்பது போலவே, வாக்குறுதிகளைத் தருபவர்களின் நம்பகத் தன்மையையும் பார்க்க வேண்டும். நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும் என்பார்கள். நரியை நம்பி கோழியை அதனிடம் விட்டுச் செல்ல முடியாது. நமக்கு வாக்குறுதி கொடுப்பவர்கள் நரியைப் போல தந்திரமாய் நம்மை ஏமாற்ற முயல்கிறார்களா என்பதைக் கண்டறிவது வாக்களிக்க வேண்டியது காலத்தில் மிக முக்கியம்.

ஆட்டு மந்தையைப் போல ஏதோ ஒன்றைப் பிந்தொடர்ந்து ஓடுபவர்களால் தான் அரசியல் வியாபாரம் களை கட்டுகிறது. ஆட்டுவித்தால் ஆடுகின்ற கூட்டமாக நாம் இருக்கக் கூடாது வாருங்கள் நாமெல்லாம் இவர்களை எதிர்ப்போம்’ என்று ஒரு குரல் கேட்டால் உடனே வெகுண்டெழுந்து ஒன்றன் பின் ஒன்றாக ஓடுகின்ற கூட்டம் தான் அரசியல்வாதிகளின் ஆதாயம். அப்படி ஒரு மந்தையை உருவாக்கத் தான் அவர்கள் வெறுப்பு அரசியலையோ, மத அரசியலையோ, பிரிவினை அரசியலையோ கையிலெடுக்கிறார்கள். வாக்காளனின் தேவை, ஏதோ ஒருவரை பிந்தொடர்வதல்ல. ஒரு கொள்கையைப் பிந்தொடர்வது.

ஒரு தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய வலிமை வாக்குக்கு உண்டு. ஒரு வாக்காளனின் கையிலிருக்கும் அதிகபட்ச கண்ணியமான ஒரு விஷயம் வாக்கு. ஒரு வாக்காளனின் கையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய ஆயுதம் வாக்கு. ஒருவருடைய கற்பைப் போல அது தூய்மையானது. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். நம்மிடம் விலைமதிப்பற்ற ஒரு வைரக்கல் இருந்தால் அதை ஏனோ தானோ என வீச மாட்டோம். அதே போல தான் நமது வாக்கும் காக்கப்பட வேண்டும். காரணம், வாக்கு நம்மை மட்டும் காப்பதல்ல, தேசத்தையும் காப்பது என்பதை மறந்து விடக் கூடாது.

சில தற்காலிக எலும்புத் துண்டுகளுக்காக நமது தன்மானத்தையே விற்று விடுவது எவ்வளவு கீழான செயல் அல்லவா ? என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் வாக்காளர்கள் செயல்படலாம். வாக்குக்கான பணம் வாங்கினால் கூட, அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்பதில்லை. பணம் கொடுப்பது அவர்கள் செய்த தண்டனைகளின் பிராயச்சித்தம். நாம் வாக்களிக்கப் போவது தேசத்தை உயர்த்துவதற்கான உரிமைச் சத்தம். அதை நினைவில் கொள்வோம். ‘ஐயோ காசு வாங்கிட்டேனே.. அவனுக்கு ஓட்டு போடணுமே’ என்றெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. இந்த விஷயத்தில் மனசாட்சியை கொஞ்சம் ஓரமாய் உட்கார வையுங்கள், தப்பில்லை.

தலைமைப் பண்பு இல்லாதவர்களுக்கோ, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கோ வாக்களிக்காமல் இருப்பது நல்லது. ஒருவருடைய வாழ்க்கையின் பின்னணியை இப்போது மிக எளிதில் கண்டுணர முடியும். இணையம் அதற்குக் கைகொடுக்கும். அதை அலசி ஆராய்ந்து பின்னர் வாக்களிக்க வேண்டும். வெறும் வாயால் வடை சுடுபவர்களை வாக்கால் சுட்டு வீழ்த்த வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மதவாதியாக, தேச பக்தனாக, ஆலய ஆர்வலராக, சாதிப் பாதுகாவலனாக மாறும் மக்களை இனம் காண வேண்டும். எல்லையை விட்டே விரட்டவேண்டும்.

தனிவாழ்வில் தூய்மையைப் பேணாத மனிதர்கள் பொதுவாழ்வில் தூய்மையைப் பேண முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒரு தலைவரை அவரது வார்த்தைகளை வைத்தோ, அவரது வாக்குறுதியை வைத்தோ நம்பிவிடுவது ஆபத்தானது. தனிமனித வாழ்வில் நேர்மையையும், கண்ணியத்தையும், பணிவையும் கடைபிடிக்காதவர்களை ஆதரிப்பது மடமையன்றி வேறில்லை. சக மனிதனுக்கு ஒரு துயரம் வரும்போதும் சுயநல சிந்தனை கொண்டிருப்பவனை எக்காரணம் கொண்டும் மக்கள் மன்னிக்கவே கூடாது. அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவே கூடாது.

அரசியல் என்றால் வாக்குறுதிகளின் களம் என்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. அதில் இலவசங்கள் இலவசங்கள் இலவசங்கள் எனும் முழக்கத்தை நோக்கி ஓடுவது நம்மையே நாம் அழித்துக் கொள்வதற்குச் சமம்.

பிரபலமான கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. அவன் ஒரு பட்டு வேட்டி பட்டிய கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

வாக்குறுதிகள் வெறும் நாக்குறுதிகளாய் மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், வாக்காளன் எதிர்கால நோக்காளனாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். சிந்திப்போம், செயல்படுவோம்

1,502 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *