நான் வில்லனாக இருந்த சில கணங்கள்.
சுகம் கேட்டு சுகம் கெட்டது.
-மாதவி.யேர்மனி
சில மாதங்களாக எனது தேடல்கள் நான் வாழும் நாட்டையும்தாண்டி தமிழ்வாழும் இடம் எங்கும் வியாபித்து உள்ளது. இந்தத் தேடல் முன்பும் இருந்ததுதான். ஆனால் தற்போது எனது தளம் தாய்மண்ணில் ஆழவேர் ஊன்றி உள்ளதால் என் வீட்டு முற்றத்தில் இருந்து நிலவைப்பார்க்கும் அழகையும் மகிழ்வை அது தருகின்றது.
எதனைத்தேடுகிறோமோ அது நம் கண்ணுக்கு தெரிவதுபோல. ஒரு சிறப்பான கட்டுரை என் கண்ணுக்குள் சிக்கியது. முதல் பந்தி வாசிக்கும்போதே எனக்கும், வார்த்தைகளுக்கும் ஒரு நெருக்கம் வந்தது. அலங்காரமோ அலாரிப்புகளோ எதுவும் இல்லை, அந்நியப்படதா ஒரு எழுத்து. அப்படியான எழுத்துக் குரியவர்களைத் தேடுவது என் பணி.
தேடினால் கிடைக்கும்.கிடைக்காது என்று முடிவுக்கு வந்தாலும் மனம் முடிவுக்கு வரவில்லை என்றால் நிச்சயம் கிடைக்கும். எனக்கு படைப்பாளியின் பெயர் முகவரி யாவும் கிடைத்தது.
ஒரு ஒத்த கோட்டில் பயணிக்கும் எழுத்தாளனின் படைப்புக்குள் மூழ்கும்போது, காதலுக்கு மட்டும்தான் அந்த மகிழ்ச்சி தரும் சக்தி உண்டு என்ற எண்ணம் தவிடுபொடியாகிவிடும். படைப்பாளிகள் யாவரும் காதலர்கள் அல்ல, ஆனால் தமிழின் காதலுக்குரியவர்கள். இப்போது படைப்பாளி ஆணோ அல்லது பெண்ணோ என்ற பால்நிலை கடந்த நிலையில் இருந்தேன். எனக்கு வட்சப் வசப்பட்டது.
உங்கள் எழுத்தை வாசித்தேன். யதார்த்தமான மொழிப்பிரயோகம்,ஒரு தாயின் கடிதத்தில் எப்படி செயற்கை வாசம் எதுவும் இல்லையோ, அதுபோல் உங்கள் கட்டுரைகள் அமைந்து இருந்தது. சிலவற்றைப்படித்தேன் சிலவற்றை சுவாசித்தேன். ( இன்று சுத்தமான காற்று கிடைப்பது அரிது எனவே நன்றாகவே சுவாசித்தேன்.)
எனது பத்திரிகையில் உங்கள் படைப்புகளை வரவேற்கின்றேன். முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.
2 நீலக்கோடுகள் பக்கென்று படர்ந்தது. பலர் பார்த்ததிற்கான அந்த வெளிப்பாடு தெரியாமல் மறைத்தும் வைத்திருப்பார்கள். அனால் நான் தேடிய படைப்பாளி திறந்தமனதுக்குரியவர்.
எனக்கு ஒரு அவசர புத்தி. அது எனக்கு தெரியும், இருந்தாலும் பாரத்தேன். கடைசியாக பார்த்த நேரம் மேலே 10.18 என்று இருந்தது. அடுத்து ஒரு வரி எழுதினேன். ஒரு வரியில் எழுத விருப்பமா? இல்லையா? ஒரு பதில் தரவும் என்று குறிப்பிட்டேன். 4 மணிநேரம் ஆகிவிட்டது பதில் இல்லை. இது காதலுக்கான தூதோ! துரத்தலோ! இல்லை. ஒரு படைப்பாளியை என் இலக்கியப் பயணத்துடன் இணைத்துக்கொள்வதற்கான மிரட்டல் அல்லாத ஒருவகை விரட்டல்.
துணிச்சலான யதார்தமான எழுத்துக்கு சொந்தக்காரார் அந்த படைப்பாளி, இது எனது கணிப்பு. ஆனால் அது இப்போ கரையத்தொடங்கியது. என்ன வேலையோ அவசரமோ! நான் பொறுமை காத்திருக்கலாம். நேரம் ஆக ஆக, நான் சதாரண மனிதனின் நிலையில் இருந்து கீழ்நோக்கி சென்று கொண்டு இருந்தேன்.
ஒருவரை பாராட்டுவது இன்று மிக அரிது. அதிலும் அவர்களை உள்வாங்கி பிறருக்கும் இனங்காட்ட முயல்வது இன்று முயல்கொம்பான காலம். நான் ஒரு பைத்தியக்காரன். எனது கலை, எனது படைப்பு, என்று என்நேரத்தை செலவு செய்யாமல், பிறருக்காக எனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவு செய்துவிட்N;டன். திரும்பி பார்த்தால் எனக்கான நாட்கள் எண்ணபடும் நேரம் நெருகிவிட்டதை உணர்கின்றேன்.
நான் வில்லங்கமான வில்லனா! இல்லை நல்லவனா? என்ற கேள்விக்கே இடமின்றி வில்லனாகிவிடுகின்றேன்.
தொலைபேசியை தூக்கி ஒரு இடத்தில் வைத்துவிட்டு என் வேலையைத் தொடங்கினேன்.
இருந்தாலும் இவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள். பகுதிநேர படைப்பாளிகள். நேரம் காலம் பார்த்துதான் அவர்களுடன் உரையாடவேண்டும். ஒரு வரி எழுத நேரம் இல்லை! என்பவர்களை நான் நம்பமாட்டேன். அவர்களுக்கு அதில்; அக்கறை இல்லை, என்றே எடுத்தக்கொள்வேன். என் கோபமும் சாபமும் என்னுள் தணியவில்லை.
டிங் என்று ஒரு ஒலி! இந்த வில்லனுக்கு கேட்டது. நான்கு மணி நேரத்தின்பின் நான் விரும்பிய படைப்பாளியிடம் இருந்து வொஸ் மசேச் வந்திருந்தது.
எனக்கு எழுத்து சுவாசம் போன்றது. எழுத்துக்குபின்தான் எனக்கு உணவு உறக்கம் எல்லாம். எனக்கு திருமணமாகி 6 வருடங்கள் 3 குழந்தைகள். ஐந்து வருடங்களின் பின்பு இப்போது மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளேன். என் எழுத்தும் செயலும் ஒன்று. உங்கள் வேண்டுதலைக் கேட்டு பூரித்துப்போனேன்.
இந்த மகிழ்வான தருணத்தை பகிர்ந்து கொள்ள, முதலில் எனது மாமியிடம் ஓடினேன். கால் படியில் தடக்குப்பட்டு வீழ்ந்துவிட்டேன். தலையில் பலத்த அடி. நான்கு இழை போட்டுக்கொண்டு இப்போதான் வீடு வந்து இளைக்க இளைக்ககதைக்கிறேன். என் மாமி காலில் இறக்கை முழைத்ததுபோல் கண்டபடி பறந்து இருப்பாய் படி கிடி எதுவும் தெரிந்திருக்காது. உனக்கு எழுத்து மீது உள்ள காதல், எதிலும் இல்லை. ஓய்வு எடு என்கிறா. மண்டை எனக்கு உடைந்தாலும், மாமிக்கு மனதுக்குள் ஒரு வித புழுகம், தனக்கு சொல்ல பறந்து வந்தே மருமகள் விழுந்தாள் என்று..
எனக்கு எழுத்தாளரின் குரலில் இருந்த மகிழ்ச்சி என்னையும் என் நினைப்பையும் ஓங்கி அறைந்துகொண்டு இருந்தது. ஒருவரின் நேரம் எவ்வளவு முக்கியம், அதனை அவர்கள் எதற்கு, எதற்கு, ஒதுக்குவது என்பதனை இன்னொருவர் தீர்மானிக்க கூடாது. என்ற உண்மை புரிந்தது. இந்தப் புரிதல் நிலைக்கும், என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இப்போது புரிந்ததே நான் மீண்டும் மனிதனாக வைத்தது.
ஒருவரை சுகம் கேட்க தொலைபேசியில் அழைத்தால், பதில் இல்லை என்றால் குறைந்தது பத்து நிமிடங்களின் பின் எடுத்துப் பாரர்க்வேண்டும். அடித்துக்கொண்டே இருத்தல் கூடாது. முதல் அடித்தது ஒரு சிக்கனல் போல் அவர்களை தயார்படுத்த உதவும். இல்லையேல் சுகம் கேட்டு சுகம் கெடுப்பதாகமுடியும்..
1,059 total views, 3 views today