வாகனேரி குளம் இல்லையேல் எங்களது வாழ்க்கையே இல்லை!
வாழையூர் ந.குகதர்சன்-இலங்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சனை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். தற்போது கிராம மக்களுக்கு குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு நீர் இன்மையால் வாகனேரி குளத்தினை நாடி வருகின்றனர். ஆனால் குளத்திலும் நீர் குறைவாகவே காணப்படுவதுடன், இந்த நீர் வேளான்மை செய்கைக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
இதனால் மக்கள் குளத்தில் அருகில் பூவல் மூலம் தண்ணீரை வடித்து எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவிப்பதுடன், குளத்தில் நீர் எடுக்கும் போது யானைகள் வருவதால் பயத்தில் தண்ணீர் எடுக்கமால் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.யானையின் வருகையால் எங்களது உறவுகளின் சிலரை ஒவ்வொரு வருடமும் இழந்து வருகின்றோம்.
வாகனேரி குளத்தினை நம்பி 2500 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றார்கள். 8500 ஏக்கர் வேளான்மையினை தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகளால் செய்யப்படுகின்றது. அவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக காணப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான கால் நடைகள், உயிரினங்களும் இக்குளத்துக்கு பகலிலும், இரவிலும் நீர் பருக வருகின்றது. இக் குளத்தை நம்பி வாழும் விவசாயிகள் வரட்சியால் ஒரு போதும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் இக்குளத்தை புனரமைப்பு செய்வதாக தெரிவித்தார்கள். இன்னும் அதுவும் இடம்பெறவில்லை.
வாகனேரி குளத்தினை நம்பியே நாங்கள் எங்களது ஜீவனோபாய தொழிலை மேற்கொண்டு வருகின்றோம். வாகனேரி குளம் இல்லையேல் எங்களது வாழ்க்கையே இல்லை என்ற நிலைமையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1,409 total views, 3 views today