திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழல்

Living Together

பிரியா இராமநாதன் -இலங்கை

சில வருடங்களுக்கு வெளியாகி இளைஞர்களின் மனதை பெரிதும் கொள்ளை கொண்ட திரைப்படம்தான் மணிரத்தினத்தின் “ஓகே காதல் கண்மணி ” . திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழல்” என்ற எங்களுடைய கலாசாரத்திற்க்கு அவ்வளவாய் நெருக்கமில்லாத ஓர் விடயம் பற்றி சொல்ல முயன்ற திரைப்படம் .கற்கால மனிதர்கள் “நாகரீகத்தின் அடையாளமில்லை ” என்று துறந்த லிவிங் டுகெதர் ” (சேர்ந்து வாழல்) கலாசாரம்,இன்று நாகரீகவளர்ச்சியின் அடையாளமாக இளைய தலைமுறையினரால் பெரிதும் விரும்பப்படுவதுதான் வேதனைக்குறிய விடயம் .ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும், மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான் திருமணம். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று, மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர். இன்று திருமணம் என்றாலே நீண்டகால மகிழ்ச்சி தரும் விடயம் என்பதைவிட , பயங்கரமாக செலவு வைத்து நீண்டகால கடனுக்காக உழைக்க வைக்கும் நிகழ்ச்சி என்றே பார்க்கப்படுகிறது .

திருமணம் செய்து கொண்டவர்களும், “உனக்கு என்னப்பா நீ சுதந்திரப் பறவை, நான் குடும்பஸ்தன்” என்று சலிப்புடன் வசனம் பேசுகிறார்கள். இளம் பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இன்றையகாலகடத்தில் அதிகமாக இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாகவும் கருதும் எண் ணம் அவர்களிடம் உள்ளது என்பதுதான் மறுக்கவியலாத உண்மை. எந்தொவொரு விடயத்திலும் பொறுப்பேற்றுக் கொள்வதற்க்கான அச்சம் இன்று சிலரிடம். திருமணம் செய்து குடும்பம் நடத்த ஆகும் செலவுகள் மட்டுமல்ல, அப்படி ஒரு பொறுப்பை மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணமே ஒரு பதற்றத்தை கிலியைத் தூண்டுகிறது. இது எப்படி வெளிப்படுகிறது என்றால் பலகாதல் ஜோடியினர் தம்மிடம் போதுமான சேமிப்பு இல்லை என்று சாக்கு சொல்லியே திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். திருமணத்தை ஏதோ கோடிக்கணக்காய்முதலீடு செய்து ஒரு தொழிற்சாலை நிறுவுவது போல் பார்க்கிறார்கள். இதன்விளைவாக நமக்கு எதிலும் ஒட்டாமல் ஒட்டியிருக்கத் தோன்றுகிறது. சேர்ந்துவாழும் உறவு இந்த அணுகுமுறையின் ஒரு நோய்க்குறி என்றும்பார்க்கலாம். இப்படி திருமணத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் பலர் “லிவிங் இன் டுகெதர்” உறவுக்கு சம்மதிக்கிறார்களாம். குடும்பம் குறித்த சுமைகள் ஏதுமற்று, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமன்று,இருவரின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு தேவைப்படாவிட்டால் பிரிந்துவிடலாம் என்ற மனோபாவத்துக்கு மேலைத்தேயர்களைப் போன்றே எம்மவர்களும் வந்துவிட்டார்கள் என்றால் அதுதான் உண்மை .

நிம்மதியில்லாத மணவாழ்க்கை மற்ற விடயங்களிலும் கவனத்தை கெடுத்துவிடும் என்ற மனோபாவத்துடனேயே மேலை நாடுகளில் லிவிங் டுகெதர் முறைமை கடைபிடிக்கப்படுகிறது . ஒரு ஆணும் பெண்ணுமாய் சந்தித்துப் பழகியதில் இருவருக்கும் ஒத்த அலைவரிசை இருப்பதாக கருதினால் , சிறந்த “கம்பானியனாக” இருப்பார் என்று ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை ஏற்ப்பட்டால் அங்கே அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள் . இன்று ஒத்த கருத்துடையவர்களாக,ஒரே ரசனை கொண்டவர்களாக இருக்கும் அவர்களது சிந்தனை பின்னாளில் மாற்றமடைந்தால் இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கு திருமணம் என்ற கமிட்மென்ட் தடையாக இருக்ககூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் . ஆனால் … நாம் ?! அநேகமாக வீட்டில் சிறந்த வாழ்க்கைத் துணை ஒன்றினைத் தேடித்தரும் வரையில் தங்கள் உடற் பசியை தீர்த்துக்கொள்ளும் பொருட்டும் இணைந்து வாழ ஆரம்பித்து விடுகின்றனர் எங்களில் பலர் . இதற்க்குப் பெயர் “லிவிங் டுகேதரா ” அல்லது “ஸ்லீப்பிங் டுகேதரா ” என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம் .

மேலை நாடுகளில், குழந்தைகளுக்கு 13 வயதிலிருந்து செக்ஸ் கல்வி கற்றுத் தரப்படுகிறது. அந்தச் சூழலில் இன்னொருவருடன் வாழத் துவங்குமுன் எதிர்காலத்தைப் பற்றி சரியான ஒப்பந்தத்துக்கு வந்த பின்பே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். அதே போல அங்கே your children and my children are playing with our children என்பது சகஜம். இந்த அளவுக்கு குழந்தை வளர்ப்பும் பக்குவமும் நம் நாட்டில் வந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

திருமணம் செய்துகொள்ளாமல் , கணவன் மனைவியாகவும் இல்லாமல் மனதுக்குப் பிடித்த ஆணும் பெண்ணும் ஒரு வீட்டுக்குள் சேர்ந்துவாழும் முறை இன்று இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் மெல்ல மெல்ல ஊடுருவி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது எனலாம்.

கால மாற்றத்துக்கு ஏற்ப கலாசார மாற்றமும் ஏற்ப்படுவதால் லிவ்விங் டுகேதரில் சிக்கி வெளிவர இயலாது தவிப்பதென்னவோ அதிகம் பெண்களாய்த்தான் இருக்கமுடியும் . நம்பியவன் ஏமாற்றிவிட்டான் என்ற நிலையில் அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாது சம்பாதிக்கும் பெண்களே விரக்தியடைந்து தற்கொலையும் செய்துகொள்கிறார்கள். காதல்,பாலுறவு ,திருமணம் போன்றவற்றில் ஏமாறும்போது சமூக ரீதியாக ஆண்களைவிட அதிகம் பாதிப்படைவது பெண்கள்தான்! மாவட்டத்துக்கு ஓன்று,மாகாணத்துக்கு ஓன்று என்ற ரீதியில் பெண்களோடு பழகி மைனராக சுற்றிய ஒரு ஆண், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் (கூச்சமும் இல்லாமல்) ஊரார் மெச்ச முறைப்படி ஒரு திருமணத்தை செய்துகொள்ள முடியும்! ஆனால், பெண்களின் நிலை அப்படியல்ல … ஒரு பெண் ஒரு காதலில் தோல்வியடைந்தாலே, அவளை ஏற்றுகொள்ள இன்னொரு குடும்பம் நிறைய யோசிக்கும். முதல் காதல் முறிந்து இன்னொரு காதலை.. மற்றுமொரு காதலைத் தேடினாலேயே சில சமயங்களில் அவளுக்கு ஆட்டக்காரி ஃ நடத்தை சரியில்லாதவள் என்று பட்டம் கட்டிவிடும் ! எனவேதான் பெண்களைப் பாதுகாக்கும்வகையில் எங்களுடைய மேன்மையான திருமண ஒப்பந்தங்களும் சட்டங்களும் தேவைப்படுகின்றன. ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்கவேண்டும் , ஆனால் அந்த ஒருவனுக்கு எத்தனை ஒருத்தி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகலாம் என்ற சமூக மனோநிலையில் , சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக காதல் என்ற பெயரில் அதீத நம்பிக்கயுடம் ஒரு ஆணுடன் பழகுவதை ஏற்றுகொள்வதில் ஏன் மூத்த தலைமுறை அதிகம் தடுமாறுகிறது ஃ புத்திசொல்ல எத்தனிக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது …(நட்புக்கும் காதலுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல் “காய்” நகர்த்தும் இளையவர்கள் அதிகரித்திருக்கும் நிலையில் ) பரஸ்பர நம்பிக்கை என்ற ஒன்றின் அடிப்படையிலேயே எல்லா உறவுகளும் கட்டியெழுப்பப்படுகிறது இல்லையா ? இந்த நம்பிக்கையில் குலைவு ஏற்படுகையில் பட்டென்று கைவிடுதல் என்ற முறையினை அத்தனை சுலபத்தில் பெண்களால் எடுக்க இயலுமாய் இருக்குமா ? இந்த உறவில் இருந்து ஒரு ஆண் பிரிந்துசெல்லும்பட்சத்தில் , குழந்தையை முன்னிறுத்தி குறிப்பிட்ட அந்த ஆண்மீது உரிமைகோரவோ, சொத்துரிமை கோரவோ சட்டரீதியில் இதுவரை (இலங்கையில் ) இடமில்லை.

“வயதுக்கு வந்து ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது ,அவர்களின் உரிமை . அதை சட்டப்படி குற்றம் என்று ஏற்றுக்கொள்ள இயலாது.புராணத்தில் கிருஷ்ணனுக்கும் ராதாவுக்கும் இருந்த உறவுமுறை ஏறக்குறைய இதேபோன்றதுதான் , அதற்க்காக அவர்களை நாம் குற்றம் புரிந்தவர்களாக கூறிவிட முடியுமா ?” இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியொருவரது கூற்று இது … கலாசாரப் பின்னணியுடன்,நிறுவன மயப்படுத்தப்பட்ட குடும்பம் என்ற அமைப்புக்குள் வாழும் கீழைத்தேய நாடுகளில் , யதார்த்தத்தில் இது எந்த அளவு சாத்தியப்படும் ? குறைகளுக்காக மனிதர்களை விட்டுப் பிரிவதென்றால் , யாரும் யாருடனும் நட்புடன்கூட இருக்கவியலாது,.

எங்கள் நாட்டினது ஆணிவேரே , எங்களது பாரம்பரியமும் , கலாசாரமும் , குறிப்பாக குடும்பம் என்கிற அழகான அர்த்தமுடைய கட்டமைப்பும்தான்.நமுடைய மாண்பை அடுத்த தலைமுறையினருக்கு பொறுப்புடன் கடத்திகொண்டிருக்கும் அமைப்புதான் குடும்பம் ! எங்களுடைய வாழ்வியலைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிதான் வலுவான குடும்ப அமைப்புகள். இந்த அமைப்பு இருவர் ஒப்புக்கொண்டு, உறவுகளின் துணையோடு திருமணம் செய்துகொள்ளும்போதுதான் அது தழைக்கும். ஆனால் , எங்கள் இருவருக்கும் சில காரணங்களால் சேர்ந்துவாழப் பிடித்திருக்கிறது , அதனால் சேர்ந்து வாழ்கிறோம் ” என்கிற இந்த லிவிங் இன் டுகேதரில் ஒருவருக்கொருவர் நேர்மையாக , நம்பிக்கையாக இருப்பதற்க்கான வாய்ப்புக்கள் எந்த அளவு சாத்தியப்படகூடும் ? “என்றைக்காவது ஒருநாள் பிரிந்துவிடப் போகிறவர்கள்தானே நாம் ” என்கிற உறவில் , ஆழமான அன்பு , காதல் எப்படி வரும் ? பிணைப்பும் நேர்மையும் இல்லாத உறவில் ஆண்கள் வரம்பின்றி எந்த எல்லைக்கும் போகக்கூடுமே..ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நம்முடையதாக இருக்கும்போதே , இரண்டு மூன்று மனைவிகளை , சின்ன வீடுகளை , கள்ள உறவுகளை வைத்துக்கொள்ளும்போது , வரையறை ஏதுமற்ற இந்த லிவிங் டுகெதர் கலாசாரம் நமக்குள் சரிப்படுமா ? பாட்டி , தாத்தா , சித்தப்பா , பெரியப்பா , மாமா , மாமி என்று உறவுகள் சூழ வாழ்வதுதான் எங்கள் கலாசாரத்தின் பெருமையல்லவா ? ஆனால்,”சேர்ந்து வாழும் ” கலாசாரத்தில் அவள் அவனுக்கு மனைவியுமில்லை , அவன் அவளுக்கு கணவனும் இல்லை என்ற நிலையில், மற்ற உறவுகள் அங்கே எப்படி சாத்தியப்படும் ?

இந்த முறைமையினால் ஆண்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்ககூடும் .

ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தலாம்.ஆனால்,பெண்களின் நிலை ? இரண்டாவதாக ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள் . அதுவும் தோல்வியடைந்தால் ,தனியாக வாழத் தொடங்கி விடுவார்கள் . போதாக்குறைக்கு குழந்தைகள் எழுதப்படா விதியாக தாயிடமே விடப்படும். அவர்களும் குழந்தைகளை வளர்த்துக்கொண்டு தம்முடைய மிச்ச காலத்தையும் ஒட்டிவிடுவார்கள் .
எனவேதான் சட்ட ரீதியிலான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது கீழைத்தேய நாடுகளில் அவசியமாக இருக்கிறது. மேலைத் தேயவர்களிடம் இருந்து நேரம்தவறாமை , கடமை தவறாமை , கடமையைச் செய்ய லஞ்சம் வாங்காமை என்று எத்தனையோ நல்ல விடயங்களை பெற்றுக்கொள்ள முன்வராத நாம், அவர்களிடமிருந்து இந்த “லிவிங் இன் டுகெதர் ” முறைமையினை மட்டும் பின்பற்ற நினைப்பது அப்பட்டமான சுயநலத்தைத்தான் குறிக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொள்ள எத்தனிக்கின்றோம் என்றால் அது மிகையில்லை!

1,133 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *