ஏன் இந்தப்பறவை தொலைவிற்குப் பறந்து போகிறது
-கவிதா லட்சுமி- நோர்வே
வானத்தின் திசை மருங்கில்
என்னதான் இருக்கக்கூடும்
முற்றத்து மரங்களும்
தொங்கும் கிளையில் மரக்கூடும்
தானியம், காற்று, நீர்,
பூக்குமிந்த அழகிய தோட்டம்
கண்டுமகிழ மனம் கொடுத்தும்
தொலைவிற்குப் போகிறதே
செவ்வான உச்சி
வெட்டவெளிப் பாதை
கிழக்குமலைத் தொடர்கள்
சாம்பலிட்ட மேகங்கள்
இறகு உதிர் எதிர்க்காற்று
கைக்கெட்டாச் சூரியன்
எதைத் தேடியோ போகிற பறவை!
எங்கு போனால் என்ன?
ம்…
கூடின்றிப் பறவைகொள்ளும்
கலை செய்வேன்
இலைகள் உரசிக்கொள்ளும்
தருணங்களைக்கூட
கவனிக்கமறந்த இருத்தல் உனது!
உன் வாழ்வனுபவத்தில்
நீ காணாத கடவுள்கள்
வானையும் காற்றையும் மண்ணையும்
உராய்ந்து,
ஆத்மாவைத் தணலாக்கி,
உயிர்களை எரிக்கிறது!
நீ காணாத கடவுளை
சூரியனுக்கு அப்பால் கண்டெடுக்கும்
உன் தேடல்தான்
நிரந்தர அமைதியைத் தரும் எனும் அனுமானம்
இயல்பான உணர்வுகளையும்
மரணிக்கச் செய்கிறது!
பெருங்கடவுள்களைக் காணும்
பயணங்கள்
சிறுதெய்வங்களைக்
கொல்கிறது.
1,403 total views, 3 views today