பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் உடல்நிறை!

Dr. எம்.கே.முருகானந்தன் – பருத்தித்துறை – இலங்கை
குடும்ப மருத்துவர்
பொதுவாக கர்ப்பகாலத்தில்தான் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின்னர் சற்று எடை குறையவே செய்யும். ஆனாலும் குழந்தைப் பராமரிப்பிலும் தாய்ப்பால் ஊட்டுவதிலும் தமது பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் தாய்மாரின் எடையானது அதிகரிப்பது அவதானிக்கப்படுகிறது.
பிரசவத்துக்குப் பின்னான இந்த எடை அதிகரிப்பானது பொதுவாகக் காணப்பட்டாலும், இளவயதுடைய தாய்மாரைவிட சற்று வயது கூடிய தாய்மாரிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த எடை அதிகரிப்பானது கர்ப்பம் தரித்ததாலும் குழந்தை பிறந்ததாலும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுவது அல்ல, மாறாக மகப்பேற்றினால் அந்த பெண்ணின் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கர்ப்பம் தரித்தல், மகப்பேறு, பாலூட்டல், குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ஒருவர் அந்த காலகட்டத்தில் தனது வாழ்வின் 2-3 வருடங்களை இழந்திருப்பதை மறந்துவிடுகிறார். இந்த வயது அதிகரித்தலும் பெண்களின் எடை அதிகரிப்புக்கு மற்றொரு மறைமுக காரணமாக அமைகிறது.
பொதுவாகத் தாய்மார் தங்கள் குழந்தைகளின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களே அன்றி தங்களைப் பற்றிச் சிந்திப்பது குறைவு. இதனால் சமையல், தனது உணவு மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றில் அக்கறை செலுத்துவதில்லை. இவையே அடிப்படைக் காரணங்களாகக் கருதப்படுகிறது.
இவற்றில், தவறான உணவுப் பழக்கங்களே முக்கிய காரணம் எனச் சொல்லலாம். உதாரணத்திற்கு சொல்வதானால் குழந்தையின் கோப்பையில் மிஞ்சும் உணவை வீணாக எறியாமல் தனது வாயில் போட்டுவிடும் தாய்மார் அதிகம். இதனால் மேலதிக கலோரிகள் உடலில் சேர்ந்து கொழுப்பாக மாறி எடை அதிகரிக்கும். வேலைக் களைப்பினாலும் நேர நெருக்கடிகளாலும் நேரத்திற்கு உணவை உட்கொள்வது தப்பிவிடுகிறது. பசியையும் களைப்பையும் போக்க அடிக்கடி தேநீர், சத்துமாவைகள் அல்லது இனிப்பான பானங்களை குடிக்கிறார்கள். இவை கலோரிக் குண்டுகள். ஏடையை அதிகரிக்கும்.
அத்துடன் தனக்கென போசாக்கான உணவைத் தயாரிப்பதற்கு நேரமின்றி கடைகளில் வாங்கும் தீனிகளை உண்பதும் காரணமாகலாம். பொதுவாக அத்தகைய கடைத் தீனிகள் ஆரோக்கியமற்றதாக, இனிப்பும் கொழும்பும் கூடியதாக இருப்பதால் எடை அதிகரிப்பு நேர்கிறது.
குழந்தை பராமரிப்பிற்காக நீண்ட நேரங்களுக்கு குழந்தையுடன் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க நேர்வதால் உடல் உழைப்போ உடற் பயிற்சியோ அற்றுப்போகிறது. இதனால் கலோரிகள் எரியாமல் உடலில் தேங்கி நிற்பதும் எடையை அதிகரிக்கச் செய்கின்றன.
மகப்பேற்றின் பின் குழந்தையைப் பராமரிப்பதால் தாய்மாரின் தூக்கம் குறைகிறது. உடலியல் ரீதியாக தினமும் தனது உடலுக்கு தேவையான தூக்கத்தைப் பெறுவது முடியாமற் போய்விடுகிறது. தூக்கம் குறைவதும் எடை அதிகரிப்பிற்கு காரணமாகிறது என தரவுகள் கூறுகின்றன. இரவில் ஐந்து மணிநேரம் அல்லது அதற்கு குறைவாகவே தூங்கும் மகப்பேற்றுக்குப் பின்னான பெண்களின் எடை அதிகரிப்பதற்கான சாத்தியமானது ஏனைய பெண்களை விட மூன்று மடங்கு அதிகம் என ஒரு ஆய்வு கூறுவது இதற்குச் சான்றாகிறது.
எடை அதிகரிப்பால் அவர்களின் உடல் வனப்பு குறைகிறது என்பதற்கு அப்பால் அவர்களது ஆரோக்கியமும் குறைகிறது என்பதால் நிச்சயம் அக்கறை எடுக்க வேண்டிய விடயமாகிறது. ஏடை அதிகரிப்பானது ஏதிர்காலத்தில் நீரிழிவு, கொலஸ்டரோல், பிரஸர், முழங்கால் உட்பட மூட்டு தேய்வுகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.
கர்ப்ப காலத்திலும் மகப்பேற்றிற்கு பின்னான காலங்களிலும் தைரொயிட் சுரப்பியின் செயற்பாட்டில் சிலருக்கு குறைபாடு ஏற்படுவதுண்டு. அவ்வாறு தைரொயிட் ஹோர்மோன் அளவு குறைந்தாலும் எடை அதிகரிக்கலாம். மருத்துவ ஆலோசனையுடன் வுளுர் என்ற கருதிப் பரிசோதனை செய்வதன் மூலம் அது காரணமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
எனவே மகப் பேற்றின் பின்னர் பெண்கள் தனது குழந்தையை பராமரிப்பதற்கு நேரம் ஒதுக்குவது போலவே தனது ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது அவசியமாகிறது. இதற்கு கணவரும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களும் அவருக்கு ஒத்தாசை செய்து அவரது வேலைப் பளுவைக் குறைப்பது அவசியமாகிறது.