சிதையப்போகும் செம்மணி.
- சர்மிலா வினோதினி-இலங்கை
செந் நெல்மணிகள் விளைந்த வனப்புமிக்க பிரதேசமாக விளங்கிய காரணத்தினால் செம்மணி என்கின்ற காரணப்பெயரைப் பெற்ற பிரதேசம்தான் நாவற்குழிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அமைந்துள்ள செம்மணிப் பகுதி. இது சிறந்த வள வாய்ப்புக்களைக் கொண்ட நிலப்பரப்பாகும்.
பெயருக்கு ஏற்றாற்போல் வானம் பார்த்த வயல் நிலங்கள் வீதியின் இரண்டு மருங்கும் இடையிடையே பனைமர வேலிகளைக் கொண்டு பரந்திருக்கின்றன. யாழ்ப்பாண இராசதானிக் காலத்தின் வரலாற்றோடு தொடர்புபடுகின்ற இவ் வயல் நிலங்கள் வடக்கில் மாரியின் பெருமழை ஆரம்பிக்கின்ற காலத்திலிருந்து, தைமாதத்தில் சந்திக்கின்ற அறுவடைக்காலம் வரை கொடுக்கின்ற அழகும், பொருளாதார நிறைவும் அற்புதமானது.
இவ் வயல் நிலங்களுக்கு அடுத்ததாக செம்மணிக்குளம் என்று அழைக்கப்படுகின்ற சிறிய குட்டை வகைக் குளப்பகுதியும், கண்டற்தாவரப் பரம்பலைக் கொண்ட சதுப்பு நிலப்பகுதிகளும், சிறிய அளவிலான புற்தரைகளும் காணப்படுகின்றன. நாவற்குழிக் கடல் நீரேரியின் செல்வாக்கினைக் கொண்டுள்ள இச் சதுப்பு நிலங்களின் உயிர்ப்பல்வகைக் கோலங்களான கண்டல்கள், உமிரி வகைத் தாவரங்கள், நீர்க்காகங்கள் மற்றும் சிறு பட்சி இனங்கள் ஆகியவை இச் சுற்றுச் சூழலில் காணப்படுகின்ற பெறுமதிக்குரிய வளங்களாகும்.
இவற்றிற்கு அப்பால் செம்மணிச் சந்தியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்று வரவேற்கின்ற யாழ் வரவும், ஆலயச் சூழலும், அண்மையில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிவலிங்கமும், சற்றுத் தொலைவிலும், வயலிடையிலும் அமைந்துள்ள அந்திமக் கிரியை அடக்க இடங்களும் இப்பகுதியின் கலாசார முக்கியத்துவத்தினைப் பிரதிபலிக்கின்றன.
1995 இன் பின் இந்த நிலத்தில் உருவாக்கப்பட்ட இராணுவக் காவலரண்களும் அவற்றின் பின் அரங்கேறிய துயரக்கதைகளும் நீதிமன்ற வழக்குகளாக இன்னமும் நிலுவையிலுள்ளவை.
இப்படியாக, நினைவின் அடுக்குகளில் உறைந்துபோயுள்ள இந்த நிலத்தின் வளங்களும், அவை சுமந்துள்ள கதைகளும் காலத்திற்கும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் அண்மைக்காலமாக இப்பகுதியில் முறையற்ற வகையில் கொட்டப்பட்டு வருகின்ற திண்மக் கழிவுகளின் காரணமாக இப்பகுதியின் பௌதீக வளங்களின் இருப்பும், கலாசார அடையாளங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
முறையான தொடர் அவதானிப்பின் கீழ் இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட வழக்கத்தினை விளங்கிக்கொள்ளலாம். இப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்கு அருகிலும், சதுப்பு நிலச் சூழலை அண்டிய சிறிய மேட்டுப் பகுதியிலும் ஆரம்பத்தில் பொறுப்பற்ற மக்கள் சிலர் கழிவுகளை வீசி வந்தனர், முறையற்ற இச் செயலால் அப்பகுதியில் கழிவுகள் சேர்ந்து, அப்பகுதி தன்நிலை இழக்கத்தொடங்க உரிய நிறுவனங்களின் தலையீட்டினால் முறையற்ற வகையிலான அக் கழிவகற்றல் தடுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் பேணப்பட்டன. இதனால் செம்மணிச் சூழலின் நிலைத்திருப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும் இந்நிலை மாற்றமடைந்து இன்றைக்கு இப்பகுதியில் முறையற்ற வகையிலான கழிவுகள் கொட்டப்படுகின்றன. உக்கக்கூடிய காகிதங்களில் இருந்து இலகுவில் பிரிகை அடைந்து உக்கி அழியாத பொலித்தீன் கழிவுகள், பிளாஸ்ரிக் பாவனைப் பொருட்கள், கண்ணாடிப் போத்தல்கள், மற்றும் மதுபானக் கொள்கலன்கள் போன்ற பிரிக்கப்படாத அனைத்து வகையான கழிவுகளும் கொட்டப்பட்டுகின்றன.
உரிய முறையில் பிரித்து, சேகரிக்கப்பட்டு உரிய இடத்தில் முறையாக அகற்றப்பட வேண்டிய இக்கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதன் ஊடாக அருகிருக்கும் வயல் நிலங்கள் மாசுபடுவதோடு, உடையக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் ஏனைய கூரிய கழிவுகள் வயல் நிலங்களோடு சென்று சேர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவை விவசாயிகளுக்கு சிறிய காயங்களையும், விபத்துக்களையும் நாட்கள் கடந்து ஏற்படுத்த வல்லவை.
அத்தோடு கழிவுகளின்பால் ஈர்க்கப்படுகின்ற காகம் மற்றும் இன்னபிற பறவை இனங்கள் கழிவுகளை அலகுகளில் காவிக்கொண்டு வீதிக்கு மேலால் பறந்து திரிவதும், துர்நாற்றம் வீசும் கழிவுகள் அங்கும் இங்குமாக சிதறடிக்கப்பட்டுக் கிடப்பதும் பிரதேசத்தின் அழகியலை பாதிப்பதோடு, வீதியால் செல்லும் பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது.
வெளித்தெரிகின்ற இவ்வாறான பாதிப்புகளுக்கு அப்பால், இவ்வகைக் கழிவகற்றல் நடவடிக்கையானது இப்பகுதியின் அதி முக்கியத்துவம் வாய்ந்த உவர்நிலச் சூழலிலும் நீண்ட காலப் பாதிப்புக்களை உண்டு பண்ணக்கூடியது. சதுப்பு நிலச்சூழலோடு கலக்கக்கூடிய பொலித்தீன் திண்மக் கழிவுகள் நீண்ட உக்கும் காலம் கொண்டவை என்பதால் மண்ணோடு கலந்து, புதைந்து மண்ணை மாசுபடச் செய்து, மாரிகாலத்தில் நிலத்தின் உள்ளிறங்கும் நீரின் அளவைக் குறைத்து நில வளமிளத்தலைத் தூண்டக்கூடியவை.
உயிரியல் பல்வகைமைச் செறிவைப் பொறுத்தவை சதுப்பு நிலங்கள் கொண்டிருக்கின்ற வளப்பரம்பலானது கடல் கொண்டிருக்கின்ற வளங்களை விட அதிகமானது. இந்நிலையில் இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகள் இப்பகுதியின் அழகிய கண்டற் தாவரச் சூழலையும் அதனோடு இணைந்த உயிர்ச்சூழலையும் கால ஓட்டத்தில் சிதைத்து அழிக்க வல்லது.
அத்தோடு தொடர்ச்சியாக இப்பகுதில் கழிவுகள் கொட்டப்படுமாக இருந்தால் அவை மெதேன், கரியமிலவாயு போன்ற வாயுக்களின் உருவாக்கத்திற்கு காரணமாக அமையும். திறந்தவெளியில் கொட்டப்படுகின்ற குப்பைகள் உக்கி அழிவடைவதற்கு சுமார் இருபது வருடங்கள் தேவைப்படும், இந்நிலையில் இங்கு தேங்கப்போகும் கழிவுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற கசியும் திராவகங்கள் சுமார் இருபது வருடகாலத்திற்கு மேலாக தரைக்கீழ் நீரோடு கலப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன. இவை நீண்டகாலப் போக்கில் நிகழக்கூடிய செயற்பாடுகள் எனினும் மெல்ல மெல்ல தரைக்கீழ் நீர்வளத்தினையும், அருகிலுள்ள சிறு நீர்ப்பரப்பினையும் பாதிக்கக்கூடியவை. செம்மணியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்குள் முறையற்ற வகையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளும் நீண்ட காலப்போக்கில் இத்தகைய கெடுதல்களையே மண்ணுக்கும் தரைக்கீழ் நீர் வளத்திற்கும் ஏற்படுத்தக்கூடியவை. இவை சழற்சி அடிப்படையில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்காகி நோய்களை உருவாக்கக் கூடியவை.
திறந்த முறை கழிவகற்றலுக்கான இடங்களைத் தெரிவு செய்கின்ற போது காணிப்பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் முறையான கள ஆய்வுகள் மற்றும் உரிய விற்பன்னர்களின் வழிகாட்டுதலின் கீழ் மக்கள் நடமாட்டம் குறைந்த, காற்று ஒதுக்குப்புறமான, சுற்றுச்சூழல் மற்றும் கராசார முக்கியத்துவம் குறைந்த, தரைக்கீழ் நீர்ப்படுக்கைகள் ஆழத்திலுள்ள பகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டு உரிய முறையில் கழிவுகள்அகற்றப்பட்டு முகாமை செய்யப்படுவதே முறையானது.
இவை தொடர்பாக உரிய வினைத்திறன் அறிவுள்ள சுற்றுச்சூழல் அதிகாரிகள், மாநகரசபை மற்றும் பிரதேச சபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் மீறி செம்மணிப்பகுதியில் இவ்வாறான சூழல் நாசகார செயற்பாடுகள் இடம் பெறுகின்றன எனின், இவற்றின் பின் இப்பிரதேசத்தின் இயற்கை அழகியலைச் சிதைக்கின்ற, அஞ்சலிகள் மற்றும் பொது ஒன்றுகூடல்களை நிகழ்த்தக்கூடிய இணக்கமான செம்மணிச் சுற்றாடலை மறைமுகமாகச் சிதைத்து அழிக்கின்ற நிகழ்ச்சி நிரல் ஒன்று படிப்படியாக அரங்கேற்றப்படுகின்றதா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது என்கின்றனர் பொது மக்கள்.
புக்கம் 18.
யேர்மனியில் ஹம் ஸ்ரீ காமாட்சிஅம்பாள் ஆலயத்தில்
ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஓர் அற்புதத்திருக்கோவில்
யேர்மனி ஹம் ஸ்ரீp காமாட்சிஅம்பாள் ஆலயத்தில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஓர் அற்புதத்திருக்கோவிலின்; திருப்பணிவேலைகள் முடிந்துள்ளன. தமிழகத்தில் மகாபலிபுரத்தில் உள்ள சிற்பக்கலைக்கூடத்தில் திரு கவிச்சந்திரன் அவர்களால் முழுமையாக கருங்கல்லில் வடிவம் பெற்று, இங்கு வரவழைக்கப்பட்டது. ஐரோப்பாவிலே கருங்கல்லால் அமையப்பெற்ற ஸ்ரீ ஆதிசங்கர் கோவில் இதுவாகும். இக்கோவிலில் ஆதிசங்கரரை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்கான முக்கியமாக காரணம் குருவழிபாடாகும். மாத, பிதா, குரு தெய்வம். ஆகவே குருவை வழிபட்டு பின் மற்றய வழிபாடுகளைச் செய்வதற்கு இது வழிகாட்டியாக அமையப்பெற்றுள்ளது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் இந்து சனாதனத்திற்கு வந்த பல சோதனைகளை தனது ஞான வாதத்தினால் வென்று நிலைநிறுத்தியவர் ஆதிசங்கரராவார்.
ஸ்ரீ ஆதிசங்கரரின் பிதிஷ்டைநிகழ்வுகள் 17.05.2021 அன்று நடைபெறவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
படமும், செய்தியும். ஆன்மிகத்தென்றல். த.புவனேந்திரன்.
1,640 total views, 2 views today