முதுகுக்குப் பின்னே பேசும் முகங்கள்

விழுப்புண் கண்டவரை மதிக்கும் மரபு தமிழுக்கு உரியது. வீரத்தின் தழலில் போர்க்களத்தில் மார்பில் அம்பு பாய்ந்து இறப்பது ஆண்மையின் அடையாளமாய் போற்றப்படுகிறது. அதே போல முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்தால் அவன் பின்வாங்கி ஓடியபோது கொல்லப்பட்டவன் எனும் அவமானப் பெயர் கிடைப்பதுண்டு.

நேருக்கு நேர் என்பது வீரத்தின் அடையாளம்
முதுகுக்குப் பின் என்பது கோழைத்தனத்தின் அடையாளம்.

வில் வீசும் களம் அன்று. சொல் வீசும் களம் இன்று ! நேருக்கு நேராக வார்த்தைகள் பாயும் போது அது நேர்மையின் அடையாளமாகவோ, துணிச்சலின் அடையாளமாகவோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் முதுகுக்குப் பின்னால் வீசப்படுகின்ற வார்த்தைகளை போலித்தனத்தின் பிம்பங்களாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் இதை ரொம்ப சாதாரணமாகப் பார்க்கலாம். “யப்பா.. உனக்கு புரமோஷன் கிடைச்சதுல செம ஹேப்பி. தகுதியில்லாத எவன் எவனுக்கோ குடுத்திட்டிருந்தாங்க.. இப்போ தான் ஒரு நல்லவனுக்கு குடுத்திருக்காங்க” என சிரித்துக் கொண்டே சொல்லும் போது கேட்பவர்கள் சிலிர்த்துப் போவார்கள். நம்ம மேல எவ்வளவு பாசம் என நெகிழ்ந்து போவார்கள். அதே நபர் கொஞ்சம் அந்தப்பக்கம் போய் இன்னொருவரிடம் அதையே பகடி செய்து பேசுவார்.

“இவருக்கெல்லாம் புரமோஷனாம்… கம்பெனி உருப்பட்ட மாதிரி தான். என்னிக்கு வேலை செஞ்சிருக்கான் ? ஒரு எழவும் தெரியாது. இப்படிப்பட்டவங்களுக்கு தான் புரமோஷன் கிடைக்குது” என திரியைக் கொளுத்தி விடுவார்கள். இப்படி பேசிப் பேசி பொழுதைக் கழிப்பார்கள்.

கிசுகிசு இல்லாமல் எந்த ஒரு ஏரியாவையும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எப்படியோ நாலு பேர் கிசுகிசு பிரியர்களாகத் தான் இருப்பார்கள். ‘உங்க வேலையைப் பாத்துட்டு போங்கப்பா’ என சொல்வதற்கு பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ‘அப்படியா ? நினைச்சேன்.. அவனோட நடவடிக்கையைப் பாத்தே சந்தேகப்பட்டேன்’ என சொல்லும் மக்கள் தான் அதிகம்.

எல்லோருக்கும் மெல்வதற்கு ஏதோ ஒரு அவல் வேண்டும். அந்த அவல் நாமாக இல்லாதவரை சந்தோசம். ஆனால் அவர்களுக்குத் தெரியாது கிசு கிசு விரும்புபவர்கள் இன்னொருவரின் வாயில் மெல்லப்படுவார்கள் எனும் உண்மை.

கிசுகிசுப் பிரியர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருக்க மாட்டார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. ரொம்ப சந்தோசமா இருக்கிறவங்களுக்கு அடுத்தவர்களைப் பற்றி அவதூறு பேசுவதில் எந்த சிலாகிப்பும் இருப்பதில்லை. ஆனால் உள்ளுக்குள் கவலை இருப்பவர்களுக்கு அதை மறைப்பதற்காக இத்தகைய முகுதுக் குத்தல்கள் பயன்படுகின்றன.

தன்னைப் பற்றி நல்ல மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் கிசுகிசுக்களில் ஈடுபடுவதில்லை. தன்னம்பிக்கை மிகுந்திருக்கும் மனிதர்களிடமும் இத்தகைய கிசுகிசுக்கள் வராது. ஆனால் தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பு இல்லாதவர்கள் தான் அடுத்தவனை வார்த்தைகளால் வீழ்த்துவதில் தற்காலிக இன்பம் அடைகிறார்கள். ‘நம்மால போர்க்களத்துல வெற்றி பெற முடியாது, அப்போ வெற்றி பெற்றவனுக்கு அந்த தகுதி இல்லை என்று பேசித் திரிவோம்’ என்பதே இவர்களின் மனநிலை.

ஒருவர் மீதான கோபம் நமக்குள் இருந்தால் அது பல நேரங்களில் இத்தகைய கசப்பான உரையாடல்களில் வெளிப்படும். அந்த கோபம் ஏதோ ஒரு காரணத்துக்காக இருக்கலாம். ஒருவேளை அந்த நபர் அடைந்த வெற்றியோ, வாங்கிய ஒரு பொருளோ, அவர் பேசிய வார்த்தையோ, அல்லது பெற்ற பெருமையோ ஏதோ ஒன்றாய் இருக்கலாம். அது ஒரு கோபமாக உள்ளத்தில் வந்தமரும் பின்னர், வேறு ஏதோ ஒரு இடத்தில் வெளிப்படும்.

புயல் மையம் கொள்வதைப் பார்க்கிறோம் இல்லையா ? ஒரு இடத்தில் மையம் கொள்ளும். பின்னர் அது வலுவடையும். ஆனால் அதே இடத்தில் பெரும்பாலும் கரையைக் கடக்காது. இன்னொரு இடத்தில் ஒரு உரையாடலாய், ஒரு நக்கலாய், கிண்டலாய் கசப்பான விமர்சனமாய் மாறிவிடும்.

இன்னும் சிலர் உண்டு, அவர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தேவையான திறமை இருக்காது. அல்லது இருக்கின்ற திறமையை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, “விஷயம் கேள்விப்பட்டியா…. “ என ஆரம்பித்து இல்லாத ஒரு நபருடைய தலையை உருட்ட ஆரம்பிப்பார்கள். இருட்டின் கதைகளை வெளிச்சத்தில் பரிமாறும் ஒரு குரூர மனநிலை இது.

அவர்களுடைய பேச்சுக்கு நாலுபேர் கூட்டு சேர்வார்கள். அல்லது கிசு கிசு சொல்லாட்டா நம்மளை இந்த குரூப்ல சேத்துக்க மாட்டாங்க போல, என நினைத்தே சிலர் பேசுவதும் உண்டு.

நம்மிடமுள்ள குறைபாடுகளை பிறர் மீதான அவமானங்களைக் கொண்டு இட்டு நிரப்பவே கூடாது. அது மிகப்பெரிய பலவீனம். நாம் குறையற்றவர்களாய் இருக்க வேண்டும் என விரும்புவது நல்லது, ஆனால் குறையற்றவராய்க் காட்டிக்கொள்ள விரும்புவது தேவையற்றது.

சிலருக்கு இப்படிப்பட்ட பெரிய காரணங்களே இருக்காது. போரடிக்குது எவன் தலையையாவது உருட்டுவோம் என யாரையாவது போட்டு கடைவார்கள். அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்கள் கூட பேசப்படலாம். ஏதாச்சும் பேசு என்று சொன்னால், யாரையாச்சும் பற்றி பேசுவது ஒரு கீழ்த்தரமான பொழுதுபோக்கு.

அதுக்காக அடுத்தவங்களைப் பற்றியே பேசக்கூடாதென்றில்லை. காரணம் நாம் சமூகத்தின் பாகங்கள். அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. ஆனால் பேசுபவை உயர்வானதாக இருப்பது நல்லது. அல்லது முழுமையாகத் தெரிந்த விஷயங்களை ஒரு நன்மை நோக்கில் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு பையன் ரொம்ப மோசமான பழக்கமுடையவன் என்றால், ‘கல்யாணத்துக்கு வரன் தேடி வருபவரிடம்’ அதைச சொல்வதில் தவறில்லை. காரணம் அது நன்மையை நோக்கிய பகிர்தலே.

அல்லது ஒரு ஆலோசனை (கவுன்சிலிங்) ஒருவருக்குத் தேவைப்படுகிறதெனில் ஆலோசனை வழங்குபவரிடம் எல்லா உண்மைகளையும் மறைக்காமல் சொல்லலாம். அது நல்லதை நோக்கிய தீயற்றின் பகிர்தல் என கருதிக் கொள்ளலாம். இத்தகைய சில குறிப்பிட்ட சூழல்களைத் தாண்டி நாம் பிறருடைய பிழைகளைப் பகிர்வது நல்லதல்ல.

இப்படி முதுகுக்குப் பின் பேசும் பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிகள் உண்டு.

ஒன்று, நாம் அந்த உரையாடலை எக்காரணம் கொண்டும் ஊக்கப்படுத்தாமல் இருப்பது. ஒருவர் ஒருவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தால், அந்த தீயில் எண்ணை ஊற்றாமல் நீரை ஊற்ற வேண்டும். உதாரணமாக, “சரி.. இப்போ அவரோட பாயிண்ட் ஆஃப் வியூ ல பாப்போமே… இந்த சூழல் ஏன் உருவாச்சு, அவரோட பார்வையில எது நியாயம்ன்னு பாப்போமே “ என சிந்திக்கத் தூண்டலாம்.

ஹேராம் படத்தில் ஒரு வசனம் வரும்.
“உங்க குழந்தையை ஒரு ஓநாய் தூக்கிட்டு போனா சும்மா இருப்பீங்களா ?
“ஓநாயா இருந்து பாத்தா தான் அந்த நியாயம் புரியும்”

பல சிந்தனைகளைத் தூண்டும் ஒரு வசனம் அது. எது சரி, எது தவறு என்பதை ஒரு பக்கத்தை வைத்துக் கொண்டு நாம் தீர்ப்பிட முடியாது. பசிக்காகத் திருடும் ஒருவனையும், பொழுதுபோக்குக்காகத் திருடும் ஒருவனையும் ஒரே தராசில் வைத்து எடை போட முடியாது.

எதிர்மறையாய் பேசிக்கொண்டிருப்பவரிடம், “சரி, அதை விடுங்க. பாசிடிவ்வா இந்த உரையாடலை மாத்துவோம்” என திசை திருப்பலாம். விழலுக்கு இறைக்கின்ற நீரைப் போல, கிசுகிசுக்களால் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமே – என சொல்லலாம்.

ஒரு கூடை நல்ல ஆப்பிள்களின் நடுவே ஒரு கெட்ட ஆப்பிள் பழத்தை வைத்தால், அந்த கெட்ட ஆப்பிள் ஒட்டு மொத்த நல்ல ஆப்பிள்களையும் கெட்டுப் போக வைத்துவிடும். எனவே வேறு வழி இல்லாவிட்டால் கிசு கிசுப் பிரியரை கொஞ்சம் வெட்டி விடுவது நல்லது.

ஒரு கோப்பை நிறைய இனிப்பான பானம் இருந்தால் சிந்துவதெல்லாம் இனிப்பாகவே இருக்கும் என்பார் ஏமி கார்மைக்கேல் அவர்கள். நமது இதயத்திலும் நல்ல இனிப்பான சிந்தனைகளை நிறைத்து வைக்கப் பழக வேண்டும். அப்போது நாம் பேசுவது எல்லாமே இனிப்பானவையாகவே அமைந்து விடும். கசப்பான சிந்தனைகளை நிரப்பி நடந்தால் கசப்புகள் வழியெங்கும் சிதறும்.

“ஒருவரைப் பற்றி நல்லதா பேச நாலு வார்த்தை இல்லையேல் அவரைப்பற்றி பேசமாட்டேன்” என முடிவெடுக்கலாம். அது ரொம்ப சிம்பிள். தொடர்ந்து அத்தகைய ஒரு முடிவை எடுத்தால் கடைசியில் நாம் அந்த இயல்புக்குள் வந்து விடுவோம்.

பிறரைப் பற்றி எப்போதும் நேர்மறையாகவே பேசிப் பாருங்கள். அந்த செய்தியை அந்த நபர் கேள்விப்படும் போது மிகவும் மகிழ்வார். ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றிப் பேசுகின்ற நேர்மறை விஷயங்கள் அவருக்கு உங்களிடம் ஒரு மரியாதையையும், அன்பையும் உருவாக்கும். நாம் எப்போதும் நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களைத் தான் கேட்க விரும்புவோம் இல்லையா அதே போல தான் பிறரும் இருப்பார்கள் எனும் சிந்தனை நம்மிடம் இருக்கட்டும்.

ஒருவேளை நம்பிக்கைக்குரிய ஒருவரைப் பற்றி நீங்கள் தவறாய்ப் பேசிய விஷயம் அவருடைய காதுக்குப் போனால் அவர் மனம் உடைந்து போவார். உங்கள் மீதான நம்பிக்கை நீர்த்துப் போய்விடும். அவரிடம் சொல்லும் நபர் இன்னும் நாலு மசாலா சேர்த்து சொல்வார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இது தேவையற்ற கால விரையம் ! நம்முடைய கடமையிலிருந்து நமது பார்வையை விலக்கி விடும். எனவே அதை விடுத்து எப்போதும் உண்மையைப் பேசும் மனநிலையை உருவாக்க வேண்டும்.

ஒருவேளை உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய செய்திகள் பேசப்படுகிறதெனில் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை, அதை உதாசீனப்படுத்துவது தான். இரண்டாவது, அது எந்த வகையிலும் நம்முடைய இயல்பைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது. மூன்றாவது. நம்மிடம் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைத் திருத்துவது.

எதையும் நேருக்கு நேராய் சந்தித்தும், சிந்தித்தும், உரையாடியும் மகிழ்வோம். அதுவே ஆறறிவின் அழகு.

சேவியர்

2,031 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *