கொழும்பில் தன்னாதிக்கத்துடன் உருவாகியிருக்கும் சீன நகரம்!
இலங்கையின் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்ததும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதுமான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
ஆக, இலங்கையில் தன்னாதிக்கத்தைக் கொண்ட சீனாவின் தீவு ஒன்று உருவாகப் போவது உறுதியாகியிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அமெரிக்கா வெளிப்படையாகவே தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது. அண்டை நாடான இந்தியா வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், மறைமுகமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
இவை அனைத்தையும் தாண்டி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் விவாதத்தின் பின்னர் கடந்த வியாழக்கிழமை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, சீனாவுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிரந்தரமான ஒரு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பல விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தன. முக்கியமாக, தனி நாட்டுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டதாக கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள் உள்ளன. இது இலங்கையின் இறைமைக்கு ஆபத்து என்பதை அவை சுட்டிக்காட்டியிருந்தன.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதையும், பிரதான கட்சிகள் எவ்வாறான தமது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருந்தன என்பதையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
பாராளுமன்றத்தில் சட்டமூலம் மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் இரண்டாவதுவாசிப்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இடம்பெற்ற குழு நிலையில் அரசாங்கத்தினால் திருத்தங்கள்முன்வைக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு ஆளும்கட்சி இணங்கவில்லை. இதனால் மூன்று சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன. இதன்பின்னர் நடத்தப்பட்ட மூன்றாவது வாசிப்பிலேயே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல்மாதம் 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பலதரப்புக்களினால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இச் சட்டமூலம் தொடர்பான தனது வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்த நிலையில் அதனை சபாநாயகர் கடந்த 18 ஆம் திகதி சபைக்கு அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் சட்டமூலத்தில் சில சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிரூபிக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தது. அத்துடன் திருத்தங்களையும் முன்வைத்திருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றுக்கொவதாக அறிவித்த அரசு சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களாக பாராளுமன்றத்தில் நடத்தியது. இவ்வாறான நிலையிலேயே விவாதத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை அதனை நிறைவேற்ற அரசு முயன்றபோது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பைக் கோராது தமது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரினார்.
இதற்கிடையில் எழுந்த ஜே .வி.பி.எம்.பி விஜித ஹேரத் சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்கடுப்பைக்கோரினார்.இதனையடுத்து இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரசதரப்பும் அரசின் பங்காளிக்கட்சிகளும் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன . எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக்கட்சிகளும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே .வி.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிசாத் பதியுதீன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதேவேளை ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் வாக்கையெடுப்பில் பங்கேற்காத அதேவேளை எதிர்க்கட்சிப்பக்கத்தில் உள்ள முஸ்லிம் கூட்டமைப்பு எம்.பி.யான அலிசப்ரி ரகீம் மற்றும் சுயாதீன எம்.பி.யான அத்துரலிய இரத்தின தேரர் ஆகியோர் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது போலவே எதிர்க்கட்சியை சேர்ந்த அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான், டயானா கமகே ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் பின்னர் சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்புக்களைக் கோரியதுடன் பல சரத்துக்களுக்கு திருத்தங்களையும் முன்வைத்தனர். இந்த திருத்தங்களில் பெருமளவானவை அரசினால் நிராகரிக்கப்பட்டு குறித்த சரத்துக்கள் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டன.
எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்துரைத்தார். “கொழும்பு துறைமுக ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கு உள்ள நிதி அதிகாரத்துக்கு ஒரு துளியளவேனும் பாதிப்பு ஏற்படாது. அத்து டன், துறைமுக நகரின் முழுமையான நிதி அதிகாரமு ம் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்” என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். “நாட்டுக்கு அந்நிய செலாவணி அத்தியாவசியமாகும் என்பதை அனைவரும் அறிவோம். நாட்டின் கடன் சுமையை மேலும் மேலும் அதிகரிக்காது அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வது அவசிய ம். நாம் மிகவும் போட்டியானதொரு உலகத்தில்தான் வாழ்கிறோம். அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள வெளிநாட்டு முதலீடுகள் அவசிய ம். முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். புதிய உபாய மார்க்கங்கள் அவசியம். கொழும்பு துறைமுக நகரம் அவ்வாறானதொரு நிறுவனம்” என்பது அமைச்சர் பீரிஸின் கருத்தாக இருந்தது.
இருந்த போதிலும், எதிர்க்கட்சிகள் இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. “தற்போதைய துறைமுக நகர சட்டமூலமானது 1815 இல் கைச்சாத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தத்தைவிடவும் மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது இந்நாட்டின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதுடன் மரண அடியாகவும் அமைந்துள்ளது. அரசியலமைப்பை மீறியே குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டமூலமொன்றை உருவாக்குவதற்கான நடைமுறை இருக்கின்றது. அதனையும்மீறி வெளிநாட்டு நிறுவனமொன்றின் சட்டத்தரணியே இச்சட்ட மூலத்தை தயாரித்துள்ளார். சட்டமூலத்திலுள்ள சரத்துகளில் 34.6 வீதம் அரசமைப்புக்கு முரணானது என்பது உயர்நீதிமன்ற தீர்ப்பு மூலம் உறுதியாகின்றது” என்பதையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இச்சட்டமூலத்தின்படி துறைமுக நகருக்குச் செல்வதற்கு விஷேட அனுமதி பெறப்பட வேண்டும். அங்கு அமெரிக்க டாலர்தான் பயன்படுத்தப்படும். இலங்கையின் வழமையான சட்டங்கள் அங்கு செல்லுபடியற்றதாக இருக்கும். இலங்கையின் வரிச்சட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்படாது என்பது உட்பட ஒரு தனிநாட்டுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு கொண்டிருக்கும்.
பல ஆயிரம் கோடி டாலர்களைச் செலவிட்டு இலங்கைத் தீவின் வரைபடத்தையே மாற்றும் வகையில் தனியான ஒரு பாரிய நகரத்தை கடலுக்குள் அமைத்துள்ள சீனா, அதனை நிர்வகிக்கும் அதிகாரத்தை இலங்கைக்கோ மற்றொருவருக்கோ கொடுத்துவிட்டுச் செல்லும் என்பது எதிர்பார்க்கக்கூடியல்ல. அதற்குத் தேவையான சட்டமூலங்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான அழுத்தங்களை சீனா நிச்சயமாக ராஜபக்ஷக்களுக்குக் கொடுத்திருக்கும்.
விரும்பியோ விரும்பாமலோ கொழும்புக்கு அருகே சீனாவின் பாரிய நகரம் ஒன்று உருவாகிவிட்டது. இங்கிருந்துகொண்டு கொழும்புத் துறைமுகத்தை முழுமையாக உளவு பார்க்க முடியும். அதனைவிட, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கும் இது பெரும் சவாலாகப் போகின்றது!
1,484 total views, 2 views today