இக்கணத்தில் வாழ்ந்துவிடு!
கரிணி-யேர்மனி
……………………………………
காலம் பொன் போன்றது. கடந்து விட்ட நொடித்துளிகளை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு யாரும் இவ்வுலகில் செல்வந்தர்கள் இல்லை. உயிர்வாழ்தலின் ஒவ்வொரு மணித்துளியுமே கடந்து கொண்டிருக்கும் எம் வாழ்நாட்கள்.
கடந்துவிட்ட பொழுதுகளை மாற்றி அமைக்க முடியாது. இனி வரப்போகும் பொழுதுகளையும் இக்கணமே உணர்ந்து பார்க்க இயலாது. இதோ இப்போது தோன்றுவதே வாழ்வு. அடுத்தடுத்த பொழுதுகளில் ஏற்படுகின்ற சுவாரசியமே அந்த வாழ்வின் சுவை. இறக்கப்போகும் நாள் எதுவென தெரிந்துவிட்டால் வாழ்கின்ற நாட்கள் நரகமாகிவிடும். மனம் இறக்க இருக்கும் நாட்களுக்கு இன்னும் எத்தனை நாட்கள் நெருங்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை கணக்கு பார்க்க தொடங்கிவிடும். இனிமையாக கொண்டாடப்படும் பிறந்ததினம் காலாவதியான திகதியை நெருங்கும் பயத்தை ஏற்படுத்தும். இவையெல்லாமே எதிர்காலத்தை பற்றிய நிகழ்கால பயம்.
மனக்குப்பைகள் முதற்கொண்டு உடல் உழைப்புக்கள் பலவற்றையும் சேகரித்து அதனை பாதுகாக்கவென இருக்கின்ற பொழுதுகளையும் வீணடிக்க கூடாது. அனுபவித்தல் அந்தந்த தருணங்களில் நிகழ வேண்டும். வியர்வை சிந்தி உழைத்து தானும் உண்ணாமல் அனுபவிக்காமல், தான தருமங்களும் செய்யாமல் பிற்காலத்துக்கு என சேர்த்து வைக்கும் செல்வம் பல தருணங்களில் மருத்துவ செலவுக்கே சென்றுவிடுகின்றன. அதனதனை அன்றே அனுபவிப்பதால் உடல்நிலை மற்றும் மனநிலையாவது பாதுகாக்கபடும். திருடர்கள் செல்வத்தை திருடலாமே தவிர உடல் உள நலனை திருட முடியாது. கிடைக்கின்ற சூழலில் உருவாகின்ற மனநிலை மற்றும், மணித்துளிகள் அடுத்த நிமிடமே மாறிவிடும். அவ்வப்போது கிடைக்கும் அனுபவங்களே அந்தப் பொழுதுகளுக்கான சிறப்பு.
மனிதனை தவிர்த்து உலகம் பிரபஞ்சம் பால்வெளி என அனைத்தும் நிகழும் கணத்திலே நகர்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் உடலியல் இன்பத்தை நிலையெனக்கருதி இன்பத்தை பற்றாகவும் பற்றை அகங்காரமாகவும் மாற்றி எதிர்பார்ப்பு, தேவை, இலக்கு, வெற்றி என தனது அகங்காரத்தை திருப்திபடுத்தும் நோக்கில் நிகழும் கணத்தை(நிகழ்கின்ற காலத்தை) இறந்த காலமாகவும் எதிர்காலமாகவும் தனது மனவிம்பத்தை உருவாக்கி அதிலிருந்து வெளியேற முடியாதபடி ஒரு சிறையை உண்டாக்கி பிறவி பிறவியாக மீளாத் துன்பத்தில் அமிழ்ந்தவாறு காலவெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றான்.
மனதிற்கு ஒரு பழக்கம் இருக்கின்றது எதிலாவது உடனே பற்றிக்கொள்வது. நிகழ்காலத்தில் நிகழ்கின்ற அனைத்து அதிர்வுகளினையும் மனம் பற்றிப்பிடிப்பதால் இறந்த காலம் உண்டாகின்றது. எப்போது மனம் பற்றிப் பிடித்தவாறு இறந்த காலத்திற்குள் நகர்கின்றதோ அப்போழுதே அந்த கண வாழ்க்கையும் மரணமடைந்து விடுகிறது. உண்மையான வாழ்க்கையானது எதையும் பற்றாது இருப்பதிலிருந்தே ஆரம்பமாகின்றது. அதாவது எதையும் பற்றாது இருந்தால் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி வாழ முடியும்.
வாழ்வில் தினமும் புதுபுது விடயங்களை சந்திக்கிறோம். எம்மை நாம் நம்புவதன் மூலமும், எம் செயலை நாம் விரும்புவதன் மூலமும் சூழ்நிலைகளை எமதாக்கி கொள்ள முடியும். சூழ்நிலைகள் எமதாகும்போது சுவாரசியமாக அடுத்து வருகின்ற பொழுதுகளை எதிர்கொள்ள முடியும். நிகழ்காலம்தான் உயிரோட்டமிக்க வாழ்வாக இருக்கின்றது. கணத்திற்கு கணம் எம்மை புத்துணர்ச்சி மிக்கவர்களாக மாற்றி புதுமைமிக்க மனிதராக மாற்றுகின்றது. நிகழ்காலத்தின் வாழும் மனிதன் ஒவ்வொரு கணமும் இந்த பேரண்டத்தின் சக்தி தன்னை ஆட்கொள்வதை உணர்ந்து எதையும் பற்றாது பேரானந்தவெளியில் மிதந்தவாறு இருப்பான். இயற்கையின் கட்டமைப்பை கணத்துக்கு கணம் அனுபவிப்பான்.
கடந்துவந்த அனுபவச் சேர்க்கைகள் விழிப்புணர்வை விட எதிர்காலம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் போது நிகழ்காலம் குறித்த கவனம் இன்றிப் போய்விடும். கற்பனையில் பயம் என்பது ஒரு உணர்வுதான் அது நிஜமல்ல. எண்ணத்தை கவனித்தாலே போதும். நிஜமான சம்பவங்களை விட அவை சார்ந்த பயமே அதிக சோர்வைத் தரும்.
தீராத ஆசை எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போது எதிர்கால கற்பனைகள் அதிகம் தோன்றும், அவை நிகழ்காலத்தை அதிகளவில் கரைத்துவிடும். எந்த நிபந்தனையுமின்றி கணமுன் விரிவடைந்து செல்லும் வாழ்வை நிதானத்துடன் அனுபவிப்பதே திறமை. வாழ்வில் அமைதியும், நிதானமும் மிக முக்கியம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் முக்கியம். தன்னைத்தானே முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதால் அமைதி இலகுவாக ஏற்படும். அமைதியான மனநிலையில் தான் கிரகித்தலும் அனுபவித்தலும் சாத்தியம்.
நிலையான மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது தான் வாழ்க்கை. எல்லாம் கலந்தே வாழ்வு அரவணைக்கும். அதில் தேவையானவற்றை மட்டும் வாழ்வில் அனுமதிக்க வேண்டும். எதிலும் பற்றாது அனுபவிக்க வேண்டும். ஒரு பிளாஸ்டிக் போத்தல் கடலின் அலைகளுக்கு மேலாக மிதப்பதைப்போல அதாவது அலைகளில் உயர்ந்து தாழ்ந்தாலும் அது கடலினுள் அமிழாது. அதேபோல வாழ்க்கை எம்மை எங்கு கொண்டு சென்றாலும் பற்றற்ற நிலையில் நிகழ்காலத்தின் துணையுடன் மிதந்து வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
1,512 total views, 3 views today