கண்டால் வரச்சொல்லுங்கள்.
செய்திகள் பல இன்று செய்திக்காகவே செய்தியாகின்றன. காலம் நேரம் பார்த்து பல சமூக ஊடகங்களில் வெற்று ஊசிகளை ஏற்றி மக்களை ஒருவித மயக்கநிலையில் வைத்திருப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். தங்களை திரும்பி பார்க்கவைப்பதற்கான தகவல்களை திரட்டி வட்சப் பேஸ்புக் டுவிட்டர் என பல சமூக ஊடகங்களில் உண்மையை உரசிப் பார்க்காது பதிவிடுகின்றார்கள்.
வட்டுக்கோட்டையில் ஐந்து தலைப் பாம்பு.
காலை வணக்கம் அதனைத் தொடர்ந்து கொஞ்சக்காலம் வட்சப் பேஸ்புக் எல்லாம் இந்த ஐந்து தலைப் பாம்பு படமெடுத்த வண்ணமே இருந்தன. உற்று நோக்கினால் ஐந்து தலைப் பாம்புக்கு, நிழல் ஒரு தலைமட்டமே தரையில் விழுகிறது. போட்டோசொப் காதல் விளையாட்டுக்கு மட்டுமல்ல இப்படியான அதிசயங்களை உருவாக்கவும் பயன்படுகின்றது.
கடவுள் மீது பக்தி கொண்டவர்களை குறிவைத்து, அவரவர் சமயங்களை மகிழ்ச்சிப்படுத்த சில செய்திகளை பரப்புவார்கள். அமெரிக்க விமானப்படை வானத்தில் திரிசூலம் போல் புகைகோலம் போட்டது என்று போட்டோ சொப்பில் செய்த படம் படம்காட்டியது. மற்றும் மேல் இருந்து பார்த்தால் வத்திக்கான் சிவலிங்கம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது, என படங்களும் போட்டும் ஒரு மாதத்திற்கு ஓட்டுவார்கள். அதனை மேடைகளில் அப்படியே ஒப்புவித்து மக்களை மாக்களாக்கு பவர்களும் உண்டு. வானத்தை படம் எடுத்து, ஆட்டுக் குட்டியுடன் கர்த்தர் உள்ளார் என்று படம் போடுவார்கள். இந்த இயற்கையே அவன் படைப்புத்தானே!
தென்னை மரத்தில் பிள்ளையார். கடவுளின் கண்களில் இரத்தம் வழிந்தது, என பல அதிசயங்களை சமூக ஊடகங்களை எப்போதும் உசுப்பேத்தித்திகொண்டே இருப்பார்கள். அந்தக்காலத்திலும் இப்படிச் செய்திகள் வாய்மொழியாகப் பரவியது. பால் ஊற்றியவர்கள் அன்றும் உண்டு. இந்த விநோதங்களை செய்தித்தாள்களிலும் பார்க்கமுடிந்தது.
தென்னை மரத்தின் உச்சியில் உள்ள தேங்காயினுள் இளநீர் எப்படி வந்தது? வானத்தில் பறவை எப்படி பறக்கிறது
இவை எல்லாம் அதிசயம் இல்லையா? இயற்கை நமக்கு தினம் காட்டும் அதிசயங்களை விட வேறு என்ன உங்கள் கற்பனையில் உதித்திட முடியும். ஒரு முறை உங்கள் ஒவ்வொரு உறுப்பையும் உற்று யோசியுங்கள். அசந்துபோவீர்கள். அந்த உடம்பை இவ்வளவு கச்சிதமாக படைத்தவனை எண்ணிவியந்து போவீர்கள். (பானை ஒன்று இருந்தால் அதனை வனைந்த குயவனும் இருப்பான் என்றால், நம்மை வரைந்த ஆண்டவன் அல்லது ஒரு சக்தியும் இருக்கும் என்பது உண்மையல்லவா!)
இன்று Covid19 காலம்! எந்த ஊசி சிறந்தது பட்டிமன்றமே தினம் நடக்கிறது. எதனைச் சொன்னாலும் நம்பும் நேரம்.விடுவார்களா தினமும் ஒரு வைத்தியம் வட்சப் வழியாக வழிந்தோடும். Covid19 தடுப்பு ஊசி. இப்போ இதுதான் சீசன்.
எந்த ஊசி சிறந்தது பட்டிமன்றம் நடக்கிறது. இந்த ஊசி நல்லது என்று ஒருவர் வட்சப்பில் பதிவிட்டு இருந்தால், மறுகணம் அவருக்கு தொலைபேசி எடுத்து கேட்டால், நான் அதுதான் போட்டேன் என்பார். தான் போட்ட ஊசியே சிறந்தது என்று எண்ணுவதும், ஒரு வகையில் மனோபலத்தை அவருக்கு கொடுக்கட்டுமே என்று விட்டு, உங்கு இப்ப மழையோ என்று கதையை மாற்றினாலும் விடமாட்டார்கள். அஸ்டாசெனிக்கா இரத்தம் உறையும் என்று உரக்கச் சொல்வார்கள். தற்போது ஒரு செய்தி உலாவருகிறது. Covid19 காலம் ஆரம்பித்த நாள் முதலாய் அது இயற்கையா செயற்கையா என்று ஆதாரம் நிறுவியும் நிறுவாமலும், செய்திகள் வந்தவண்ணமே உள்ளன. அவற்றை நம்பகமானதாக காட்ட பல்கலைக்கழகம் அல்லது விஞ்ஞானிகள் பெயரில் போட்டு உலாவ விடுவார்கள். அப்படி ஒரு செய்தி இதோ.
2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்ற ஜப்பானிய மருத்துவர், விஞ்ஞானி மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ, கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்று கூறி இன்று ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.(செய்தியை செய்தியாக மட்டும் பாருங்கள்….) அது இயற்கையானதாக இருந்தால், அது முழு உலகத்தையும் அப்படி பாதிக்காது. ஏனெனில், இயற்கையைப் பொறுத்து, வெவ்வேறு நாடுகளில் வெப்பநிலை வேறுபட்டது. இது இயற்கையாக இருந்தால், அது சீனாவைப் போன்ற வெப்பநிலையைக் கொண்ட நாடுகளை மட்டுமே பாதித்திருக்கும். அதற்கு பதிலாக, அது சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டிலும் பரவுகிறது, அது பாலைவன பகுதிகளுக்கும் பரவுகிறது. அதேசமயம் அது இயற்கையாக இருந்தால், அது குளிர்ந்த இடங்களில் பரவியிருக்கும், ஆனால் வெப்பமான இடங்களில் இறந்திருக்கும். விலங்குகள் மற்றும் வைரஸ்கள் குறித்து 40 வருட ஆராய்ச்சி செய்துள்ளேன். இது இயற்கையானது அல்ல. இது தயாரிக்கப்பட்டு வைரஸ் முற்றிலும் செயற்கையானது.
நான் சீனாவில் வுஹான் ஆய்வகத்தில் 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த ஆய்வகத்தின் அனைத்து ஊழியர்களையும் நான் நன்கு அறிவேன். கொரோனா விபத்துக்குப் பிறகு நான் அனைவரையும் அழைத்தேன், ஆனால், அவர்களின் தொலைபேசிகள்; 3 மாதங்களாக இல்லை. இந்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பது இப்போது புரிகிறது. இன்றுவரை எனது அறிவு மற்றும் ஆராய்ச்சி அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கொரோனா இயற்கையானது அல்ல என்று 100மூ நம்பிக்கையுடன் இதைச் சொல்ல முடியும். இது வெளவால்களிலிருந்து வரவில்லை. சீனா அதை உருவாக்கியது. இன்று நான் சொல்வது பொய்யாக இருந்தால்! நான் இறந்த பிறகும், அரசாங்கம் எனது நோபல் பரிசை திரும்பப் பெறலாம்.இப்படி உண்மை, பொய் கலந்த ஒரு செய்தியை நம்பக்கூடியவர் பெயரில் பரப்புகிறது. இந்த செய்தியை நோபல் பரிசு பெற்ற தாசுகு ஹொன்ஜோ நாவல் மேலே தனது பெயரில் வெளிவந்த செய்தியை மறுக்கிறார். இந்த மறுப்பும் உண்மையா என்பது அவனுக்குதான் தெரியும்.
அவனைக் கண்டால் வரச்சொல்லுங்கள். நேரில் கதைப்பதுபோலா வருமா? இந்த வட்சப்பும் டுவிட்டரும். பி.குறிப்பு: தடுப்பூசி போட்டுக்கொண்டு வரச்சொல்லுங்கள்..
-மாதவி.
1,536 total views, 3 views today