தாய் மண்ணில்; கல்வியில் மீண்டும் எழுச்சியுறும் தமிழ் மாணவர்கள்!
தேசிய மட்டத்தில் முதல் இடம்!
- வ.சிவராஜா-யேர்மனி
தாயகத்தில் போர் அனர்த்தங்களால் நீண்டகாலம் கல்வி வளர்ச்சியில் தமிழர்பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வந்துள்ளன. இன்றைய கல்வி நிலையைப் பார்க்கும்போது தமிழர் பிரதேசங்கள் படிப்படியாக முன்னேறி வருவதாகத் தெரியவருகின்றது. மாணவர்களின் கடும் உழைப்பு, பெற்றோரின் அதிதீத கவனம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, தமிழ்ச்சமூகத்தின் விழிப்புணர்வு போன்றவையால் கல்வி எழுச்சி பெற்று வருகின்றது.
அண்மையில் வெளியான 2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்ப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சி உயர்ந்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நகரப்புறப் பாடசாலைகள் மட்டுமல்லாமல் கிராமப்புறப் பாடசாலை மாணவர்களும் கணிசமான தொகையினர் சித்திபெற்றுச் சாதனை படைத்திருக்கிறார்கள்.
தமிழ்ப் பிரதேசங்களில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளோடு, உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாக் காலத்திலும் மாணவர்களின் சாதனையானது வரலாற்றுப் புகழ்மிக்கதாகும். பல சவால்களை எதிர்கொண்டுவரும் மாணவர் சமுதாயம் அத்தனை தடைகளையும் எதிர்கொண்டு கல்வியில் சாதனை படைத்திருக்கிறார்கள் என்னும்போது அவர்களை நாம் பாராட்டி மகிழ்விக்க வேண்டும்.
சராசாலையைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி இந்துக்கல்லூரி (Hindu College)மாணவனுமாகிய செல்வன் தனராஜ் சுந்தர்பவன் கணிதம், பௌதீகத்துறையில் அனைத்துப் பாடங்களிலும் “யு” பெறுபேற்றைப்பெற்று தேசிய மட்டத்தில் 1வது இடத்தையும் யாழ் மாவட்டத்தில் 1வது இடத்தையும் பெற்று சாதனை நிலைநாட்டியிருக்கிறார். இவர் சென்ற வருடம் கல்வியியல் ஒலிம்பியா போட்டியிலும் வெளிநாடு சென்று வெற்றிவாகைசூடி நமது இனத்துக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
அடுத்து உரும்பராயைச் சேர்ந்த செல்வன் பிரசாந்த் சிறீகாந்தன் வர்த்தக வணிகப்பிரிவில் அனைத்துப் பாடங்களிலும் “A” பெறுபேற யாழ் மாவட்டத்தில் 1 வது இடம் தேசிய மட்டத்தில் 5 வது இடம் பெற்றுச் சாதனை படைத்திருக்கிறார். இவர் யாழ்-பரியோவான் கல்லூரியின் (St.Johns College) மாணவனாவர்.விளையாட்டுத்துறைகளிலும் சிறந்து விளங்கும் இவர் தனது 13 வயதிலிருந்து இற்றைவரை கல்லூரியின் துடுப்பாட்ட (Cricket Team) அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இவர்கள் மட்டுமல்ல தமிழ்ப்பிரதேச மாணவர்களின் பரீட்சை முடிவுகள் தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த பல வருடங்களாக பரீட்சை முடிவுகளில் ஆண்களை விடப் பெண்பிள்ளைகளே கூடுதலானோர் சித்தியெய்தினர். ஆனால் இந்தமுறை கூடுதலான ஆண் பிள்ளைகள் சித்தியடைந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.. எப்படியாயினும் தமிழ்ப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ மணிகள் இந்தமுறை கூடுதலான தொகையினர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகிவிட்டமை பாராட்டுக்குரியதே.
இன்னொரு மாணவி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி மகேஸ்வரன் கயலினி. இவர் உயிரியல் தொழில் நுட்பப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்றிருக்கிறார். இவர் குடும்பம் வறுமையில் போராடிவர, கல்வியைத் தொடர்ந்துகொண்டு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். வறுமையுடன் போராடினாலும் கல்வியை உயிர்மூச்சாகக் கொண்ட இந்த மாணவியைப் பாராட்டி வாழ்த்துவோம்..
இவ்வளவு துன்பங்கள், துயரங்கள் மத்தியில் தமிழ்ப்பிரதேசங்களின் கல்விநிலை படிப்படியாக உயர்ந்து வருவதைக் காணக்கூடியதாக இருப்பது சிறப்பான விடையமாகும். இன்னும்..இன்னும் வளர்ச்சிபெறவேண்டும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் நாம் தாயக மாணவர்களின் கல்வியை வளர்தெடுக்க மேலும் உதவவேண்டும்.
இப்படத்தில் காணப்படும் செல்வன் சிறீகாந்தன் பிரசாந்தின் நிழற்படத்தைப் பார்க்கும் போது ஒரு எண்ணம் தோன்றுகின்றது. நடைபெற்று முடிந்த போரின் வடுக்களிலிருந்து, அவலங்கள், நெருக்கடிகள் அனைத்தையும் தாண்டி, வெற்றிகொண்டு மீழெழுச்சிபெற்று கல்வியில் முன்னேறி வருகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகின்றது.
வீழ்ச்சியடைந்த தமிழினத்தின் கல்வியை அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற எழுச்சியையும் நம் இனத்துக்குக் கௌரவத்தையும் பெற்றுத் தந்த மாணவச் செல்வங்களைப் பாராட்டுவோம். தொடர்ந்து சாதனைகள் நிலைநாட்ட வாழ்த்துவோம்!..கல்வியே உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் தமிழ்ச்சமூகம் உலகெங்கும் வெற்றிப்படிகளில் பிரகாசிப்பார்கள் என நம்புவோம். மாணவச்செல்வங்கள் அனைவரையும் “வெற்றிமணி” வாழ்த்தி நிற்கின்றது.
1,320 total views, 3 views today