‘கண்ணாடி வார்ப்புகள்’ 1978

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ‘கண்ணாடி வார்ப்புகள்’
ஒரே நாளில் இரண்டு மேடையேற்றங்கள்! கண்டு சாதனை!!!

கடந்த இதழில் நான் நடித்த ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தின் கதையின் ஒரு பகுதியை விபரித்திருந்தேன். உடல் ஊனம் காரணமாக தாழ்வுமனப்பான்மை கொண்டு வெளியுலகைக் கண்டு அஞ்சும் இளம்பெண்ணான லோரா தனது வீட்டிற்கு தன்னைப் பெண் பார்க்க வந்திருந்த, தன்னோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்தவரும், தனது சகோதரனுடன் ஒன்றாக வேலை பார்ப்பவருமான ஜிம்முடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஜிம்மிற்கு தான் பெண் பார்க்கத்தான் போகிறேன் என்பது தெரியாது. கல்லூரி காலத்தில் ஜிம் மீது லோராவிற்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.

லோரா தனது தாழ்வுமனப்பான்மையில் இருந்து விடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்துவரும் நேரத்தில், ஜிம் தன்னுடைய காதலி தனக்காகக் காத்திருப்பார், தான் உடனே போகவேண்டும் என்று கூறிச் செல்கிறார். கண்ணாடி போன்ற லோரா உடைந்து போகிறார். அம்மாவுந்தான். ஏமாற்றமும் சோகமும் ஆத்திரமுமாக அம்மா மகன் ரொம்மோடு சண்டை போடுகிறார். தன்னில் எந்தக் குற்றமும் இல்லையென்று வாதிடும் ரொம், தனது தந்தையைப் போலவே, வீட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறுகிறார்.

‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தில் நான் ஏற்று நடித்த மகள் ‘லோரா’ பாத்திரம் எனக்கு மிகவும் சவாலான பாத்திரமாக அமைந்தது. நான் நடித்த முன்னைய நாடகங்களில் எனது பாத்திரம் மிக உறுதியான, எதையும் தைரியமாக எதிர்நோக்குகின்ற ஒரு பெண் பாத்திரம். ஒருவிதத்தில் எனது இயல்பான குணமும்தான். ஆனால் லோரா பாத்திரம் இதற்கு நேர்மாறாக இருந்தது. மிகவும் மென்மையான பேச்சு, மென்மையான அசைவுகள், தாழ்வுச்சிக்கல் என இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் க~;டப்பட்டு அதனை உள்வாங்கி நடித்தேன்.

‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தில் ஜிம் (விருந்தாளி) பாத்திரத்தில் ஜெரால்ட் ஜெயராஜா நடித்தார். அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். ஜெரால்ட் கொழும்பில் வேலை பார்;த்துக் கொண்டிருந்தார். 1978 ஜனவரி நடுப்பகுதியளவில்; நானும் ஜெரால்ட்டும் நடிக்கும் காட்சிக்கான ஒத்திகைகள் கொழும்பில் ஆரம்பமாகின. அந்த நேரங்களில்; இலங்கை வானொலி நாடக ஒலிப்பதிவுகளுக்காக நான் அடிக்கடி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வது வழக்கமா இருந்தது. அந்தக் காலத்தில் மிக இளம்பெண்ணாக தனியே கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமாக ரெயினிலும் பஸ்ஸிலும் அடிக்கடி பயணித்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது எனது தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது.

நானும் ஜெரால்ட்டும் நடிக்கும் காட்சி ஒன்று கிட்டத்தட்ட அரைமணித்தியாலம் நாடகத்தில் வரும். அந்தக் காட்சியின் ஒத்திகைகள் பெரும்பாலும் கொழும்பிலேயே நடந்தன. பாலேந்திரா மகன் ரொம் பாத்திரத்தில் நடித்தார். பாலேந்திராவும் கொழும்பிலேயே வேலை செய்து கொண்டிருந்தார்.

ஜெரால்ட் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். கலகலப்பாகப் பழகுவார். அந்த அரைமணி நேரக் காட்சியில் நாம் இருவரும் ஒரு பத்து நிமிடம் நிலத்தில் இருந்தபடி நடிக்கவேண்டும். பின்பு எழும்பும்போது மிக லாவகமாக எழும்பி நிற்கவேண்டும். ஜெரால்ட் ஆறு அடிக்கு மேல் உயரம் இருப்பார். அவர் சப்பாணி கட்டி இருப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். அது சரிவந்தால் எழும்புவது பிழைக்கும். எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கும். பாலேந்திராவும் விடமாட்டார். மிக முயற்சி எடுத்து இறுதியில் நல்ல அநாயாசமாக நடித்தார்.

நான் நடித்த ‘நட்சத்திரவாஸி’ நாடகத்தை 1978 மார்ச் மாதத்தில் கொழும்பு மற்றும் பேராதனையில் மேடையேற்றும்போது ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தில் தாய் அமென்டா பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றும் அவருடனான ஒத்திகைகளை விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாகவும் பாலேந்திரா என்னிடம் கூறினார்.
அந்த ஒத்திகையின் போதுதான் நான் முதன்;முதலாக நிர்மலாவை சந்தித்தேன். அப்போது அவர்தான் ‘நட்சத்திரவாஸி’ நாடகத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்குப் பாடியவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். நிர்மலா என்னைவிட சில வயதுதான் மூத்தவர். ஆனால் அம்மா பாத்திரத்தில் நடித்தார். நிர்மலாவுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளின் ஒத்திகைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகின. ஒத்திகைகளின்போது நடித்துப் பார்க்கையில் நாடகப்பிரதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதில் நிர்மலா பங்களிப்புச் செய்தார். நிர்மலாவிற்கு இதுதான் முதலாவது நாடகம். தாய் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்தார். அந்தப் பாத்திரம் அவருக்கு நன்றாகப் பொருந்தியது. ஒத்திகைகளின்போதும் நாடக மேடையேற்றங்களின் போதும் நன்கு ஒத்துழைத்தார்.
பாலேந்திரா ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் நாடக ஒத்திகைகளுக்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவார். ஜெரால்ட்டும் சில சனி-ஞாயிறு தினங்களில் யாழ்ப்;பாணம் வந்து ஒத்திகைகள் நடக்கும். சில வார நாட்களில் நான் கொழும்பு சென்று ஒத்திகைகள் பார்த்தேன். அப்போது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கவில்லை.
‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தில் நான் ஏற்று நடித்த லோரா பாத்திரத்திற்கான உடைகள் எப்படி இருக்கவேண்டும் என்று பாலேந்திரா சொன்னதற்கமைய நானே அந்த உடைகளைத் தைத்துக் கொண்டேன். நாடகத்தின் இரண்டாவது பகுதியில் நான் அணிந்த வெளிர் மஞ்சள் நிற நீண்ட ஆடையை இப்போதும் சிலர் நினைவில் வைத்து என்னிடம் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
நீண்ட ஒத்திகைகளுக்குப் பின்னர் 09-06-1978 அன்று ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறியது. கிட்டத்தட்ட இரண்டு மணித்தியால நாடகம் இது. நடுவில் ஒரு சிறிய இடைவேளை. பகல் காட்சி, மாலைக் காட்சி என இரண்டு மேடையேற்றங்கள் அதே தினத்தில் நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மிகுதி அடுத்த இதழில்…

1,467 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *