தனது நேரத்தை எவருக்காகவும் பகிர்ந்து கொள்ளாத ஒரு சமூகம் உருவாகிறது!

கோதுமை மணியைப் புடைப்பது போல, காலத்தின் சக்கரம் நேரத்தைப் புடைத்து பொருளாதார மணிகளாய் சேமித்துக் கொள்கிறது.

ஒரு காலத்தில் எல்லா விஷயங்களும் மிக மெதுவாக நடந்தன. அதிக நேரம் தேவைப்பட்டது. பயணங்கள் நேரம் பிடித்தன. அன்றாட பணிகளைச் செய்ய அதிக நேரம் பிடித்தது. வியப்பு என்னவெனில், அதிக நேரம் எடுத்த அந்தக் காலத்தில் தான் நேரம் அதிகமாய் மிச்சமிருந்தது !

நமது சிந்தனையின் டிரங்க் பெட்டிகளைத் திறந்தால் நமது பால்யம் அழகாய் சிறகடித்துப் பறக்கத் துவங்கும். டிஜிடல் கறைபடாத காற்றின் துகள்களில் அவற்றின் வண்ண இறக்கைகள் உற்சாகமாய் ஆடித் திரியும். மென்மையான அந்த மௌனத்தின் அலைவரிசையில் மகிழ்வின் சத்தங்கள் ஒலிக் குறிப்புகளாய் உறங்கிக் கிடக்கும்.

பாட்டி வீட்டுக்கோ, மாமா வீட்டுக்கோ, தூரத்து உறவினரின் எளிய வீட்டுக்கோ தவறாமல் செல்வதற்காகவே கோடை விடுமுறை நாட்கள் நமக்கு இருந்தன. அந்த எளிய வீடுகளின் முற்றங்கள் ஒரு மாத கால சிரிப்புகளால் நிரம்பிக் கிடக்கும். அதில் பாதங்கள் பதியும் போதெல்லாம் அந்த சிரிப்புகள் சிலிர்த்தெழுந்து நமது கால்களைக் கட்டிக் கொள்ளும். அந்த ஆனந்த விளையாட்டுகளின் பதிவுகள் நேரங்களினால் அழகாகிக் கொண்டிருந்தன.

பதின் வயதிலும் நண்பர்களோடு குளம் குட்டைகளில் குதிப்பது முதல், மீன்களோடும் அணில்களோடும் விளையாடித் திரிவது வரை எல்லாமே இயற்கையின் சட்டைப்பைக்குள் தான் நடந்து கொண்டிருந்தது. அதிகபட்ச தவறான விளையாட்டுகளாய், குளக்கரையில் விளையாடும் சீட்டுக்கட்டுகளோ, தோப்புகளுக்குள்ளே ஒளிந்து விளையாடும் தாயக்கட்டைகளோ தான் இருந்தன. பொழுதுகள் தங்களுடைய பொன் முதுகில் உற்சாகத்தை இறக்கைகளாய்க் கட்டி நம் இனிமைகளின் தாழ்வாரங்களில் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தன.

இளவயதின் காதல் காலங்களிலும் வெட்கத்தின் சன்னல் திறப்பதற்கே காலங்கள் தேவைப்பட்டன. முதல் வார்த்தையின் பிள்ளையார் சுழி போடவே பிரம்ம பிரயர்த்தனம் தேவைப்பட்டது. ஒற்றையடிப் பாதைகளில் பார்வையை எதிர்பார்த்து, காலத்தோடு மல்யுத்தம் செய்து காத்துக் கிடந்த பொழுதுகள் அவை. அப்போதும் நேரமிருந்தது. வெண்ணிலாவின் நடைபயணத்தை ஆலமர இலைகளூடே பார்க்கும் இனிய ரசனைகளும் மிச்சமிருந்தன.

மனைவியுடன் திருவிழா செல்ல நேரமிருந்தது ! தந்தையோடு வயலோரம் நடைபயில நேரமிருந்தது ! பாட்டியின் நல்ல தங்காள் கதைகளைக் கேட்க நேரமிருந்தது. எல்லாம் முடிந்தபின்னும் உபரியாய் நேரம் உறங்கிக் கிடந்தது.

இன்று, காலம் தன் கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டிக்கிறது. அவை எல்லாவற்றையும் மிக மிக விரைவாய் செய்து முடிக்கின்றன. அரை நாள் பயணம் இப்போது பத்து நிமிடமாய்ச் சுருங்கியிருக்கிறது. அரை நாள் வங்கி வேலை இப்போது அரை நிமிட தொடுதலில் முடிந்து போகிறது. எனினும் நம் கைகளில் நேரமில்லை. கழுவும் நீரில், நழும் மீனாய் அது நழுவிக் கொண்டிருக்கிறது.

நாட்கணக்கான உறவுகளின் சந்திப்புகள் இப்போது நிமிடங்களாய் நிறம் மாறியிருக்கின்றன. மணிக்கணக்கான உரையாட்கள் இப்போது குறுஞ் செய்திகளாய் குறைந்து போயிருக்கின்றன. எனினும் யாரிடமும் இப்போது நேரம் இல்லை. யாருக்காகவும் செலவிட நேரமில்லை.

கையளவு டிஜிடல் திரைக்குள் மூழ்கிக் கிடக்கும் பொழுதுகள் நமது பொழுதுகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றன. வெறுமனே சுரண்டிக் கிடக்கும் விரல்களால் மனதில் வெறுமை தான் குடிகொள்கிறது. தூரமாய் இருந்தாலும் நெருக்கமாய் இருந்தன அன்றைய உறவுகள். இன்று அருகிலே இருந்தாலும் தூரமாய் தெரிகின்றன உறவுகள்.

நமது நேரங்கள் அனைத்தையும் சுருக்கு மூட்டையில கட்டி , நம் இடையில் சொருகிக் கொள்கிறோம். பாட்டியின் வெற்றிலைப் பெட்டியைப் போல ! அதிலிருந்து எடுக்கப்படுபவை எல்லாம் நமக்கான நேரங்கள் மட்டுமே. பிறருக்கான பொழுதுகள் என்பவை துக்கம் விசாரிக்க வரும் தூரத்துச் சொந்தம் போல இல்லாமலேயே போய்விட்டது.

சுயநலம் நமது கரங்களை தனது தொழில்நுட்பக் கயிறுகளால் கட்டி வைத்திருக்கிறது. ஒருவருக்கு தேவையென்றால் ஊரே ஓடி வந்து உதவிய காலங்களெல்லாம் கதைகளாகிவிட்டன. இப்போது ஊருக்கே தேவையென்றால் கூட ஒருவரும் வருவதில்லை. வீட்டுக்குள் இருந்தால் கூட மனைவியுடன் பேசுவதில்லை. மடியிலே கிடந்தால் கூட மகனைக் கொஞ்சுவதில்லை. எல்லாரும் நேரத்தில் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

நேசம் இருக்குமிடத்தில் நேரம் இருக்கும் ! உயிருக்குயிரான ஒருவருக்கு உடல் நிலை சரியில்லையேல், இல்லாத நேரமெல்லாம் வந்து வாசலில் நிற்கும். ஏன் ? அவர் நன்றாக இருக்கும் போது அந்த நேரம் எங்கே போச்சு ? தொலைந்து போனபின் தேடலாம், அழிந்து போனபின் தேட முடியுமா ?

மனிதநேயத்தின் கரைகளில் நமது நேரங்கள் விதைக்கப்பட வேண்டாமா ? எத்தனையோ செவிகள் ஒரு ஆறுதல் வார்த்தைக்காய் காத்திருக்கின்றன. அவர்களோடு அரை மணி நேரம் செலவிடாமல் ஆறு மணி நேர வாட்சப் அரட்டையால் என்ன பயன் விளையப் போகிறது ?

முகம் பார்த்துக் கதை பேச பெற்றோர் அருகிருக்கும் போது, ஃபேஸ் தெரியா முகங்களோடு ஃபேஸ் புக்கில் குழைந்து நெளிவதில் என்ன பயன் விளையப் போகிறது. சிதறிய பணத்தைப் பொறுக்கலாம். இழந்த பணத்தை மீட்கலாம். முடிந்த நேரத்தை எடுக்க முடியுமா ?

கோவிட் தனது கோர முகத்தை ஆயிரம் பற்களோடு காட்டுகிறதே, அதன் பற்களில் சிக்கிக் கொண்டவர்களுக்காய் பரிதாபப்பட, அவர்கள் நலனுக்காய் செலவிட நம்மிடம் நேரமிருக்கிறதா ?

டிஜிடல் என்பது வசதி அல்ல, வறட்சி. அது நேரத்தை உறிஞ்சி வெறுமையை ஊற்றுகிறது. அதை கொஞ்சம் பரணில் போடுங்கள். விரல்கள் தொடுதிரையைத் தீண்டுவதற்கானது மட்டுமல்ல, மகளின் கூந்தல் கோதியும் மகிழலாம். மகனின் விரல்கள் கோர்த்தும் விளையாடலாம். ஏழையின் தோளைத் தொட்டும் சிறக்கலாம். பெற்றோரின் பாதம் வருடியும் வளரலாம்.

நேரம் நம்மிடம் இருக்கிறது, நாம் தான் நேரத்தை நேரம் காலம் அறியாமல் செலவிடுகிறோம். தொலைக்காட்சியின் முகத்தில் மூன்று மணி நேரம் விழித்திருக்கும் நம்மால், நம் வாழ்க்கைத் துணையோடு மூன்று மணி நேரம். தொடர்ந்து பேசி மகிழ முடியாதா ?

உலகத் திரைப்படத்தின் யதார்த்த இயக்கத்தைப் புகழும் நம்மால், எதிரே இருக்கும் ஏழையின் வீதிகளின் யதார்த்தத்தை ரசிக்க முடியாதா ?

நமக்கு விருப்பமில்லை. நாம் சிறைகளுக்குள் அடைபட விரும்பும் பறவைகளாய் இருக்கிறோம். நமக்கு வானம் அசௌகரியமாக இருக்கிறது. கூண்டுகளே சுகமாய் இருக்கின்றன. நமக்கு விடுதலை வெறுப்பாக இருக்கிறது, அடைபட்டுக் கிடப்பதே ஆனந்தமாய் இருக்கிறது. காரணம் நாம் இப்போது நாமாக இல்லை. நாம் இப்போது தொழில்நுட்பத்தின் தத்துப் பிள்ளை ஆகிவிட்டோம்.

காலம் நமக்கு கோவிட் எனும் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. மீண்டும் ஒரு பழைய வாழ்வுக்குள் நுழைய வேண்டிய அழைப்பை கொடுத்திருக்கிறது. நமக்கு முக்கியமானவை உறவுகளே எனும் உண்மையை உணர்த்தியிருக்கிறது. பிறருக்காய் செலவிட வேண்டியது பணத்தையல்ல, நேரத்தை எனும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

நேரம் இல்லை என்பது மடத்தனமான வாதம். !
நேரத்தைச் செலவிடத் தெரியவில்லை என்போம் !

நேரம் போதவில்லை என்பது தவறான வாதம் !
இருப்பதை சிறப்பாய் செலவிடக் கற்போம் !

நேரம் நமக்கு மட்டுமாய் தரப்பட்ட ஆறாவது விரல் அல்ல. அது பிறருக்காய் துடிக்கத் தரப்பட்டிருக்கும் நமது ஒற்றை இதயம்.

நேசம் சேமிப்போம்,
நேரம் செலவழிப்போம்.
சேவியர்

1,043 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *