அதிசயமும் அவலமும்
கனகசபேசன் அகிலன்-இங்கிலாந்து.
சில வருடங்களுக்கு முன் கனடாவிற்கு சென்றிருந்தேன், அங்கிருந்து போது பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கிற்காக wonderland எனப்படும் இராட்டினங்கள் (Rides) நிறைந்த ஒரு விளையாட்டிடத்திற்கு சென்றிருந்தோம். என்றும் போலவே அன்றும் அங்கு சனக்கூட்டம். பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு நான் ஒரு ஓரமாக நின்று அவர்களை பார்த்துக்கொண்டு நின்றேன். இப்படி நின்றுவிட்டு சிறிதே இடது பக்கமாக திரும்பிய பொழுது ஒரு வயது நிரம்பிய ஐயா ஒருவர் என் முன்னே நின்று கொண்டிருந்தார்.எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை, அவரே ஆரம்பித்தார் ,அவர் கேட்ட முதல் கேள்வி “தம்பி நீர் இலங்கையிலை எவடம்?” என்பதாகும். அதற்கு பதிலாக “ஐயா, என்ரை நெற்றியிலை தமிழன் என்று ஒட்டியே வைச்சிருக்கிறன்?” என்று நான் அவரை கேட்டேன். அதற்கு அவர் “நான் உம்மை சில நிமிடங்களாய் அவதானிச்சு கொண்டிருந்தனான், நீர் உம்மோடே வந்தவையோடை தமிழிலை பேசுறதை கேட்டனான், அது தான் எங்கடை ஆட்கள் தான் என்று மனம் விட்டு கொஞ்சம் கதைப்பமென்று வந்தனான்…” என்று கூறி முடித்தார்.
நான் எனது ஊரையும் இடத்தையும் அவரிடம் சொல்ல…”ஆ, நீர் அப்ப முருகேசு வாத்தியாற்றை பேரனே? எனக்கு அவரை நல்லாய் தெரியும், அவற்றை வீட்டை பல தடவை வந்திருக்கிறன், நீர் எந்த மகன்றை மகன்? என என்னைப்பற்றி எல்லாவற்றையும் அறிந்தபின். “தம்பி, என்றையிடம் விசுவமடு, நான் கனகாலம் உரும்பிராயிலையிருந்து படிப்பிச்சனான், ஆசிரியர்மாருக்கும் நான் பரிசோதகராய் இருந்தனான், எனக்கு இப்ப 74 வயது, இப்ப சில வருடங்களாய் பிள்ளையள் என்னை கூப்பிட்டு கனடாவிலை விட்டிருக்கினம், ஆனால் நான் அவையோடையில்லை, நான் தனிய இருந்து உழைச்சு சாப்பிடுகிறன் என்று கூறி ஒருபக்கம் கையை நீட்டி , அங்க பாரும், அதிலேயிருக்கிற பள்ளிக்கூடத்திலைதான் வேலை செய்யிறன். நான் போய் வேலை கேட்க்கேகை அவையள் ‘இந்த வயசிலை வேலை செய்யப்போறியளே, ஓய்வெடுக்கலாமே?’ என்று கேட்டவை. நான் சொன்னன் “நான் தமிழன், எங்களுக்கு உள்ளங்கையை காட்டி வாங்கி பழக்கம் இல்லை, புறங்கையை காட்டி வேலைசெய்து தான் பழக்கம்” என்று. அதை கேட்டிட்டு பகுதி நேரமாய் ஒரு வேலை போட்டு தந்தவையள்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு , அது சரியையா ஏன் இலங்கேலை இருக்காமல் வந்து இஞ்சை இந்த குளிருக்கை கஷ்டப்படுறியள் என்று கேட்டேன், அதற்கு அவர் ” தம்பி, எனக்கும் அங்கை தான் இருக்க விருப்பம், நானும் என்ற மனுசியும் முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்கையில்லே அம்பிட்டனாங்கள், உயிர் பிழைச்சு வந்ததே பெரும்பாடு. ஒரு சின்ன இடதுக்குள்ளை நாங்கள் எல்லோரும் பட்ட கஷ்டம் சொல்லிலடங்காது, என்பவரை நான் இடைமறித்து “ஐயா, நானும் இஞ்சை வரேக்கை அங்கை பிரச்னை தான், எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் வந்தனான்” என்று கூற. என்னை சிலவினாடிகள் அப்படியே உற்றுப் பார்த்துவிட்டு ” உமக்கு நான் சொல்லுறது வடிவாக விளங்கேல்லை என்று நினைக்கிறன், நீர் பிரேதங்களுக்கு பக்கத்திலை படுத்திருக்கீறீரே? கை,கால்கள் இல்லாமை இரத்தம் ஒழுக ஒழுக சனங்கள் ஒப்பாரி வைச்சதை நேரிலை பார்த்திருக்கிறீரே? நான் எல்லாத்தையும் பக்கத்திலையிருந்து அனுபவிச்சனான், இன்னும் அதிலையிருந்து என்னாலை முழுதாய் மீள முடியேல்லை…” என்று கூறியவரின் கண்களில் கண்ணீர் சிறிதாக நிரம்ப ஆரம்பித்தது, எனக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் வாயடைத்துவிட்டது.
நான் பேச்சை மாற்றுவதற்காக “ஐயா, கொஞ்சம் பொறுங்கோ, பிள்ளையள் எங்கையென்று தெரியேல்லை” என்று அங்கும் இங்குமாக பார்த்தேன். பின்பு அவரிடம் “யாரோடை வந்தனீங்கள், பேரப்பிள்ளையளை கூட்டிக்கொண்டு வந்தனீங்களே?” என்று வினவினேன். அதற்கு அவர் “தம்பி , நான் தனியாக சைக்கிள்ளை வந்தனான், இஞ்சை நான் இப்ப மூன்று வருடமாய் வாறன், வருட அனுமதி (yearly pass ) எடுத்து வச்சிருக்கிறன். உந்த எல்லா ரைடுகளிலயும் பல தரம் ஏறிட்டேன். நான் இஞ்சை வாறது எனக்கிருந்த மனபயத்தை போக்க, முதல்ல உதுகளிலை ஏறேக்கை கொஞ்சம் பயந்தான், பேந்து மற்ற ஆட்களை பார்த்து எனக்கும் துணிவு வந்திட்டுது” என்றார். அதற்கு நான் “ஐயா, முள்ளிவாய்க்காலில் நீக்காத பயத்தையா இங்கே நீக்கப் போகிறீர்கள்?” என்று நான் சொல்லிமுடிக்கமுன் என்னை நோக்கி ஓடிவந்த பிள்ளைகள் “அப்பா, இந்த தாத்தாவோடை கதைக்கிறதை விட்டுட்டு கெதியாய் வாங்கோ, இருளப்போகுது, இன்னும் கனக்க பயங்கரமான ரைடுகளிலை எற வேணும்” என்று என் கைகளை இழுத்தார்கள். நான் அவர்களை ஒருபுறம் அழைத்து, இரகசியமாக “ஆட்களோடை கதைக்கேக்கை இப்படி குறுக்கிடக்கூடாது, இந்த தாத்தா இது எல்லாத்தையும் விட பயங்கரமான ரைடிலை போட்டு வந்திருக்கிறார், அவற்றை கதையை நான் கட்டாயம் கேட்க வேண்டும், நீங்கள் போய் வரிசையிலை நில்லுங்கோ நான் மெல்லமாய் தாத்தாவோடை நடந்து வாறன்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு அந்த ஐயாவின் மிகுதி அனுபவத்தையும் அவரிடம் கேட்டறிந்துகொண்டேன்.
எங்களை சுற்றியிருந்த உலகம் இன்பத்தில் ஆனால் நாங்கள் இருவரும்…
அன்று, என்னால் அவர் சொன்னதை கேட்கத்தான் முடிந்தது, அவருக்கும் அதுதான் தேவைப்பட்டது; தான் அடக்கி வைத்திருந்த துக்கத்தையும், ஆதங்கத்தையும் புரிதலுடன் செவிமடுக்க ஒருவன்! இதைத்தான் பலர் எதிர்பார்க்கிறார்கள்; உங்கள் நேரத்தையும் புரிந்துணர்வையும்…வேறெதையும் அல்ல! எனவே இப்படி மனிதர்களை காணும் போது, அவர்களுக்காக உங்கள் நேரத்தை சிறிது ஒதுக்கி அவர்கள் துயரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படி எத்தனை பேர், பாதியை அனுபவித்த என்போன்றவர்கள், மீதியையும் அனுபவித்து தவித்துக் கொண்டிருக்கும் அந்த ஐயா போன்றவர்கள், எதையும் அறியாத என் பிள்ளைகள் போன்ற வளர்ந்து வரும் இளம் சமுதாயம்………இப்படியாக, தமிழன் தன்னுள்ளே தாங்கித்திரியும் தவிப்புகள் தான் எத்தனை? உள்ளத்திலும், உடலிலும் ஆறாத வடுக்களை சுமந்தபடி, தான் வாழும் உலகத்திற்காய், சமூகத்திற்காய் எல்லா அவலங்களையும் தம்முள் புதைத்து வைத்துவிட்டு, உதடுகளில் நிறைந்த புன்னகையுடன்………….தமிழா, நீ ஒரு புரியாத புதிர்!
972 total views, 3 views today