உணவே மருந்து மருந்தே உணவு

பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்-இலங்கை

தமிழர்களின் ஆதிப் பண்பாடாக உணவே மருந்து மருந்தே உணவாக இருந்தது. இதற்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
தாம் வாழ்ந்த நிலங்களுக்குரிய உணவுகளை காலநிலைகளுக்கேற்ப பிரித்து அந்தந்த காலத்திற்கேற்ப எந்த உணவு தம் உடலுக்கு ஒத்துப் போகிறதோ அதை எடுத்துக் கொண்டனர்.

இயற்கையோடு இணைந்த வாழ்வியல் ஆரோக்கியமானவர்களாகவும் மகிழ்ச்சியானவர்களாகவும் மக்களை வைத்திருந்தது.

விருந்தோம்பல் எனும் அலாதிப் பண்பு அக்காலத்தில் எல்லா மனைகளிலும் இருந்தது. உபசரிப்புகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த சமூக அமைப்பியல் இருந்தது. பண்டங்களை பண்டமாற்று செய்து தத்தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். நிறைவான பொருளாதாரப் பழக்கவழக்கம் காணப்பட்டது

நாகரிகம் வளர வளர துரித உணவுப் பண்பாடு இயல்பான வாழ்வியலுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. கட்டுக்கோப்பான உணவுப் பாரம்பரியத்திலிருந்து விலகி வேக உணவுக் கலாச்சாரத்தோடு ஓட ஆரம்பித்து விட்டனர். வேலைப்பளு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை என்ற மாற்றத்தால் இயந்திரமயமாகிப் போனார்கள் மனிதர்கள்.

வயல்வெளிகள் குளங்கள் மரங்கள் என்று பசுமையான சூழலை மறந்து பெரிய பெரிய கட்டடங்கள் ,நெரிசலான வீடுகள்,வாகனப் புகை,என்று நகர்ப்புற வாழ்வியலில் நாட்டமுற்று நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். குறிப்பாக உணவு விடயத்தில் நிறைய தவறுகளை செய்கிறோம்.

நச்சுப் பொருட்கள் கலப்பில் உருவாகும் உணவு முறைப் பழக்கத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம்.ஒவ்வாத உணவுப் பழக்கத்தால் புதிது புதிதாக பல நோய்களை தேடிக் கொள்கிறோம்.

தலைமுறை தலைமுறையாக பேணிவந்த உணவுப்பழக்கவழக்கம் மருவி புதிது புதிதாக மேற்கைத்தேய பண்புக்கு நம்மை தத்துக்கொடுக்கிறோம்.

இயற்கையாய் விளைந்த காய்கறிகள் அரிசி பருப்பு என்றிருந்த உணவுமுறை மாறி பீட்சா,பர்ஹர்,சப்மெறின் என்று உடல் எடையை அதிகரிக்க கூடிய மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உணவுகளையே பெரிதும் உட்கொள்கிறார்கள்.

கிணற்று நீரை அள்ளிக்குடித்த காலத்தில் வராத நோய்களெல்லாம் இப்பொழுது வருகிறது. போத்தலில் அடைக்கப்பட்டு அதற்கு பணம் கொடுத்து தூய நீர் என்று குடிக்கிறோம். இயற்கைக்கு விலை பேசி கூறு போடுகிறோம்.

அதனாலேயே சில சமயங்களில் இயற்கைக்கு நாம் பதில் சொல்லவேண்டியிருக்கிறது. உலகமயமாதலில் நாம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறோம்.நம் பாரம்பரியங்களை தொலைத்துக் கொண்டிருக் கிறோம்.

நாம் முற்றும் தொலையாமல் அவைகளை நம்மோடு பிணைத்துக் கொள்ள வேண்டும். நம் தலைமுறை தாண்டி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரம்பரியங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பக்குவம் எல்லோர் மனதிலும் பதிய வேண்டும்.மாற்றம் நிகழ்த்தியாக வேண்டும் வாழ்வு சிறக்க மாற்றத்தை எதிர்கொள்வோம்.

2,576 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *