அறிவான தனிச் சுடர் நான் கண்டேன் அதை ஆடலுலகென நான் கண்டேன்!

காண்பதும், கருதுவதும், நித்தம் சிந்திப்பதும், வந்தனை செய்வதும், வாக்கும் , செயலும் யாவும் நடனம் நடனம் நடனம் என்று ஊனும் உளமும் கலை வாசம் வீச வாழ்ந்துகொண்டிருப்பவர் “பத்மபூஷன் “ பேராசிரியர் C.V சந்திரசேகர் அவர்கள்.
நிருத்தத்தின் வன்மை இவர் புறம். அபிநயத்தின் மென்மை இவர் அகம். உண்மை, திண்மை, ஒண்மை , உயர் வண்மை இவரது அணிகலன்கள். கலை விரும்பிகளின் கவனத்தை ஈர்க்கவல்ல வல்லமை நிறைந்த கலைஞனாக திகழும் இவரது உத்தமோத்தம கலைப் பயணம் என்பது நடனத்தை பயில்வோர்க்கு உத்வேகத்தை தரவல்லது.
மந்தமாருதம் வீசும் மலையோர ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லா என்னும் ஊரில் 1935 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி வைதீகம் மாறாத தமிழ் பிராமண குடும்பத்தில் ஏழாவது குழந்தையாகப் பிறந்து சிம்லாவிலும், டெல்லியிலுமாக பாலனாய் காலம் கழித்தார்.
1945 ஆம் ஆண்டு கலாக்ஷேத்ரா எண்ணும் புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைத்து மறவோனாய் திறம் வளர்த்தார். 9 வருடங்களாக ஓயாது பதமாடி , இசைபாடி இசை , நடனம் இரண்டிலும் ஒரே மேடையில் பட்டம் பெற்று கலாக்ஷேத்ராவில் முக்கிய இடம் வகித்தது மட்டும் இன்றி கலைக் காதல் கொண்ட காளை, தாவரவியலில் முனைவர் படிப்பினையும் தொடர்ந்தார்.
டெல்லியில் குரு லலிதா அவர்களிடமும் பிர்ஜு மகாராஜ் அவர்களிடமும் நாட்டியம் கற்றுக்கொண்ட கலைமகளை சந்திரசேகர் அவர்களின் வாழ்வின் துணையாக்கி கொள்ளும் அழகியலை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்தனர். 1962 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த கலைத் தம்பதிகளுக்கு சித்திரா (1963 ) , மஞ்சரி ( 1967 ) என இரு பெண் குழந்தைகள் கலை வாரிசுகளாக வரமானது.
நாட்டியம் ஜீவ பயணம் என உணர்ந்து பரோடா பல்கலைக் கழகத்திலும், பனாரஸ் இந்து பல்கலை கழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றி ,ஆற்றுகைப் பீடத் தலைவராகவும் பணியாற்றினார். பயிற்சி பட்டறைகள் , கருத்தரங்குகள், விரிவுரைகள் என்பன மட்டும் அன்றி , இளங்கலைஞர்களும் வெட்கப்படும் அளவு அனைவரும் வியந்திடும் ஆற்றுகைக் கலைஞராக தனது 80 வயதுகளிலும் இருபது போல் ஆடினார். அரங்கில் அரனே வந்து ஆடுகிறானோ என அவையோர் சொக்கிட எண்ணற்ற ஆற்றுகைகளை வழங்க, ஜெயா அவர்கள் நட்டுவாங்கம் இசைத்தார்கள். 7 தசாப்தங்களாக ஆற்றுகைக் கலைஞராக இருந்த சிறப்புக்கு உரியவர் எனில் மறைமுகமாக அவரது வாழ்வியல் நன்னெறியைக் காணலாம்.
ஐரோப்பிய, அமெரிக்கா, சீனா, ஜப்பான்,ஹாங் காங்,சிங்கப்பூர்,இலங்கை,மலேசியா,தாய்லாந்த், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,கம்போடியா ,லாஸ், குவைத்,மொரிசியஸ்,ரீயூனியன்,அவுஸ்திரேலியா, சுவிசலாந்து போன்ற பல நாடுகளுக்கு பயணித்துள்ளார். குறிப்பாக இப்பயணங்கள் அவரது எழுபதுகளில் தான் பெரும்பாலும் அமைந்தன.
1978 – உத்தர பிரதேச சங்கீத நாடக அகாடமி விருது, 1982 – குஜராத் சங்கீத நாடக அகாடமி விருது,1993 – சங்கீத நாடக அகாடமி விருது, 2003 – தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் , 2008 – காளிதாஸ் சமன் – மத்திய பிரதேச அரச விருது, 2011 – இந்திய குடியரசின் உயர் விருதான பத்ம பூஷன், 2016 – சங்கீத நாடக அகாடமி விருது, பரத முனி – நாலந்தா மஹா வித்யாலயா மும்பாய், நிருத்ய சூடாமணி – கிருஷ்ணா கான சபா, நாத ப்ரஹ்மம் – நாரத கான சபா, நிருத்ய ரத்னாகர – பைரவி நுண்கலைமன்றம் கிளீவ்லாந்து, நிருத்ய கலா ரத்னா – மைசூர். பரத கலா சாகர – நிருத்யாலயா, நிருத்யோதயா விருது இன்னும் பல பல என இவர் பெற்ற பட்டங்கள் பட்டியல் நீளும்.
உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் நடனம் பயில ஆர்வம் கொண்டு சென்னை வந்தடைந்தாலும் , தன்னிடம் கற்க வேண்டும் எனில் அதற்கேற்ற தரத்தினையும் எதிர்பார்ப்பார். ஸ்வர ஞானமும், லய ஞானமும் அடிப்படையாக இருக்கு வேண்டும் அவரது இல்லத்தில் குடும்பத்தினரிடம் மட்டும் அல்ல மாணவர்களிடத்தும் பண்பாடு கலாச்சாரம் காக்கப்படுகிறது.
நடனம் பயில்வதற்கு உரித்தான ஆடை (சேலை,வேஷ்டி) அணிந்தே பயிற்சி பெற வேண்டும் என்பது அங்கு கட்டாயமானது. கோலத்தை மிதிக்காமல் உள்ளே நுழைய வேண்டும், வாசல் கதவு மணி அடிப்பதிலும் நயம் வேண்டும், ஆடை கசங்காமல் அழகாக கட்டப்ப பட வேண்டும். பெண்களாயின் தலை வாரிப் பூச்சூடிப் பொட்டு வைத்து வளையல் கழுத்தணி போட்டு லக்ஷணமாக வகுப்பிற்கு வர வேண்டும். மாணவர்களின் நலனில் அதி அக்கறை கொண்டிருப்பார்.
எப்பிறவிப் பயனோ அம்மகானின் காலடியைப் போற்றிடும் வரம் பெற்றேன். பல்லுயிர்களிடத்தேயும் அன்பு செலுத்தும் நுண்ணியர், எந்த பேதமும் இன்றி ஆற்றுகை கலைஞர்களுக்கு ஆதரவு கொடுத்து, இளங் கலைஞர்களை தட்டி கொடுத்து ஊக்கம் கொடுப்பவர். விமர்சனங்கள் எவ்வாறு வழங்க வேண்டும் என்ற இங்கிதமும் இவரிடமே கண்டு ரசித்தேன். பேச்சினியில் இசையும், மூச்சினில் நடமும் என வாழும் இலக்கிய காதலன். சக கலைஞர்களிடத்தே கொண்டிருக்கும் நட்பின் சுவாரசியம்,காண்போரையும் காதல் கொள்ள வைக்கும். நாட்டியத்தை தவிர, ஒரு நடனக் கலைஞராக வேண்டுமெனில் பட்டை தீட்டப் பட வேண்டிய விடயங்கள் பலவென உணர்ந்தேன்.
இவ் இயற்க்கையோடும், மக்களோடும், அனைத்து உயிர்களோடும் ஆனந்தம் தரவல்ல தொடர்ப்பினை ஏற்படுத்தவல்ல ஒரே சாதனம் நாட்டியம் என்ற குருநாதரின் திண்ணிய எண்ணத்தினை மனத்திருத்தி அவரது 85 ஆவது அகவை தினத்தில் உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தினை ஆர்மபித்தோம்.
நாட்டியம், இசை, இலக்கியம், தொழில்நுட்பம் என அறிவினைப் பெருக்கக் கூடிய விடயங்களை,ஆய்ந்து அறிந்த விற்பன்னர்களிடம் இருந்து பெற்று தரும் களமாகவும், இலங்கையின் இளம் ஆற்றுகை கலைஞர்களின் சிறப்பினை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் தளமாகவும், உலகளாவிய ரீதியில் உள்ள இலங்கை நடன கலைஞர்களை ஒன்றிணைக்கும் கூடமாகவும், இலங்கையின் நாட்டிய வரலாற்றினை ஆவணப்படுத்தும் நூலகமாகவும் செயற்பட்டு வருகிறது.150 இற்கு மேற்பட்ட நடன ஆசிரியர்கள் உலகளாவிய ரீதியில் இருந்து இணைந்துள்ளனர். ஓராண்டினை பூர்த்தி செய்யும் இக்குழுவினூடு பயணிக்க விரும்பியவர்களை ஆரத்தழுவி வரவேற்க காத்திருக்கிறோம்.
இப்பணியினை ஆற்ற என்னைத் தேர்ந்தெடுத்த படைப்பிற்கு நன்றி கூறுவதோடு, இப்ப பணியே என் குருநாதருக்கு ஆற்றும் காணிக்கை என்று கருதி , குருநாதரின் பொன்னர் திருவடிகளை மேவிப் பணிகிறேன். எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!
ஆட்டுவித்து ஆடி அகம் புகுந்தாண்டு
தேட்டம் கெடுத்த அற்புதம் அறியேனே!

1,179 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *