இலங்கை இனி யாருடைய நாடாகும்?

ஏலையா க.முருகதாசன்

இலங்கையில் இதுவரையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும் வலுவிழந்த அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பும் இலங்கையை மற்றைய நாடுகள்; கையாள்வதற்கு வழிவகுத்துவிட்டது.
வலுவிழந்த உடல் மீது நோய்க்கிருமிகள் குடிபுகுவது போல இலங்கை தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை சமாளிக்க தன்னையே இழக்கத் தயாராகிவிட்டது.

இலங்கை மீதான பார்வையைக் கொண்டிருக்கும் பலநாடுகள் இலங்கை அரசாட்சியில் காணப்படும் பலவீனம் என்ன என்பதைக் கண்டறிந்து இலங்கையுடன் பேரம் பேசுதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஆட்சியாளர்கள் விடும் அறிக்கைகளைப் பார்க்கும் போது எந்த நாட்டுக்குமே அடிபணியாத இறைமையுள்ள தனித்துவமான நாடு போல இலங்கை தென்பட்டாலும் யானை விழுங்கி வெளியே வந்த விளாம்பழம் மாதிரி உள்ளுக்குள்ளே ஒன்றமில்லாத கோது போன்ற நிலைதான் இலங்கையின் நிலை.
இராமாயணத்தில் கையறு நிலையில் இராவணன் நின்றதாக சித்திரிக்கப்படும் இடத்தில் கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வரி வருகின்றது.

இன்று அந்த தமிழ்ச் சக்கரவர்த்தி ஆண்ட நாடு அவனது நிலையாக ஆகி நிற்கின்றது.

ஒரு நாடு வாங்கும் கடன் என்பது சமகால ஆட்சியில் உள்ள அரசாங்கம் வாங்கும் கடனாகவே ஆட்சித் தலைவன் வாங்கும் கடனாகவோ கொள்ளப்பட மாட்டாது.
கடன் வாங்கிய அரசாங்கம் ஆட்சியிழந்து எதிர்கட்சிகள் ஆட்சியமைக்கும் தருணத்தில்கூட வாங்கிய கடனுக்கு பாத்திரவாளிகள் ஆட்சியிலீருந்தவர்களே என அரசாட்சியை இழந்தவர்கள்தான் கடனைக் கொடுக்க வேண்டுமென்ற விதியும் இல்லை.
ஏனெனில் ஆட்சி மாறினாலும் சரி ஆட்சித் தலைவன் மாறினாலும் சரி, வாங்கிய கடனை கடன் கொடுத்த நாடுகளுடன் கடன் பெற்றுக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த வரைமுறைகளுக்கு ஒப்ப அடுத்தடுத்த அரசாங்கங்கள் கடனைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

இவை வட்டியுடன் கூடிய கடனாகவும், வட்டியில்லாக் கடனாகவும், திருப்பித்தர வேண்டியதில்லை என்ற உதவி நிதியாகவும் இருக்கும்.
மேற்கூறிய மூன்று முறைகளுமே கடன் வாங்கிய நாடுகளை அடிமையாக்கும் நிலைதான்.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்பது போல இலங்கை சீனாவிடம் வாங்கிய கடன் வகை தொகையின்றி பெருகிக் கொண்டே இருக்கின்றது.
அபிவிருத்தியா, கடனா எதுவாக இருந்தாலும் சீனாவின் உதவிக்கரம் கர்ணனை மிஞ்சியதாகவே இருக்கிறது.கர்ணன் வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பதற்காக வலது கையால் மட்டுமே கொடுத்ததாக கதை உண்டு.
அதே போல சீனா கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்கும் கடனால் ஆளும் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் கொந்தளிப்புகளை ஏற்படுத்திய வண்ணமே கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகாயத்தில் நின்று தென்னிலங்கையைப் பார்த்தால் உயர உயர கட்டிய புத்தமத தூபிக் கட்டிடங்கள் டபோவாக்கள் என இலங்கை புத்த சமயத்தை தழுவும் நாடு என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்.
அதே இலங்கையின் வட கிழக்கை ஆகாயத்தில் நின்று பார்த்தால் ஆங்காங்கே தெரியும் சைவக் கோவில்களின் கோபுரங்களால் சைவத்தை தழுவும் நாடு என்றும் தெரியும்.இதைவிட ஆகாயத்தில் நின்று பார்த்தால் உயர்ந்த தேவாலய கட்டிடங்கள்,கொஞ்சம் உயரம் குறைவாகக் கட்டியிருந்தாலும் ஆங்காங்கே ஒலிபெருக்கிகளுடன் கூடிய பள்ளிவாசல்களைப் பார்த்தால் கிறீஸ்தவ, இஸ்லாமிய மதத்தை தழுவும் மக்கள் வாழும் நாடு என்பதையும் கண்டு பிடித்துவிடலாம்.
ஆனால் சீன மொழி வீதியால் போகிறவனுக்கு பளிச்சென்று தெரிகின்ற பரிச்சயமான மொழியாகப் போகின்றது.
இலங்கையரசாங்க ஆட்சியாளர்கள் சொல்லுகின்ற மொழி கடந்து மதம் கடந்து அனைவரும் இலங்கையர்களே என்பது கேட்பதற்கு அமிர்தமான வார்த்தைகள்தான்.
ஆனால் அது இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது.
இரண்டு மொழிகள் பிரதான மொழிகளாக இருந்த போதும் இன்னொரு மொழியான சீன மொழி மெதுவாக இலங்கைக்குள் பகிரங்கமாகத் தெரியுமளவிற்கு புகுந்துள்தை எல்லோரும் அறிவர்.
மிடுக்குடன் இருக்க வேண்டிய இலங்கை வலுவிழந்து சீனா என்ற ஊன்று தடியைப் பிடித்துக் கொண்டு நடக்கும் பரிதாப நிலையை எட்டியுள்ளது.
இலங்கை வாங்கிய கடனால், இலங்கைச் சனத்தொகையின்; ஒவ்வொரு குடிமகனும் விலை பேசப்பட்டே அரசு கடன் வாங்கியிருக்கின்றது.
இலங்கையில் உள்ள சாதாரண குடிமகனில் தொடங்கி அரசியல்வாதிகள் அனைத்துத் துறை அறிஞர்கள் என எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் ஒரு விடயம் கொழும்போடு ஒட்டி மண் போட்டு நிரப்பி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போர்ட் சிட்டி இலங்கைக்கு உரியது அல்ல அது சீனாவின் இன்னொரு குட்டித் தீவென்பது.
தமிழர் பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்று கட்டப்பட்டு முகப்பில் சீனா மொழி பொறிக்கப்பட்டிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
மூக்குப் போனாலும் சகுணம் பிழைக்கக்கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படப் போகின்றது. இலங்கையை கிட்டத்தட்ட சீனாவுக்கு விலைபேசி கடன் அபிவிருத்தி அது இதுவென சீனா அட்சவாரமும் கொடுத்துவிட்டது.இப்பொழுது எல்லோருடைய மனதிலும் இலங்கை உண்மையில் யாருடைய நாடு என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் கடற்றொழில் அமைச்சர் இந்தியாவைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக இந்திய மீனவர்கள் அனுமதியுடன் இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கலாம்; என்ற திட்டம் ஒன்றை கொண்டுவர இருப்பதாகச் செய்திகள் மூலம் அறியும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது.

இலங்கை வளமற்ற நாடல்ல.அனால் இலங்கையில் தீர்க்கப்பட விரும்பாத இனப் பிரச்சினை காரணமாக இலங்கை எடுப்பார் கைப்பிள்ளையாகவம் கிள்ளுக்கீரையாகவும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கின்:றது.
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு இராஜதந்திர மிரட்டல்களை விடுத்து வருகின்றன.தாங்கள் சீனாவின் பக்கம் சாயவில்லை என்பதைக் காட்டுவதற்கே தமிழக மீனவர்கள் அனுமதி பெற்று இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கலாம் என்ற கடற்றொழில் அமைச்சரின் திட்டம் இலங்கை மீனவர்களைப் பெரியளவில் பாதிக்கும் செயலாகும்.
இலங்கையின் ஆளுமைக்கு உட்பட்ட தீவுகள் அடங்கிய மண்ணை சீன தன்வசப்படுத்த இலங்கையின் பொருளாதார மூலவளங்களில் ஒன்றாக இருக்கும் மீன்வளமும் கடலும் இந்தியா வசமாகப் போகின்றது.
வீடு யாருக்கென அண்ணன் தம்பிகள் சண்டை பிடித்தால் வழக்கை தீர்க்கிறோம் தராசைப் பிடிக்கிறோம் என வருபவன் வீட்டை தனதாக்குவது போலத்தான் இனி இலங்கையின் நிலையாகும்.
எல்லா வளமும் அளவான சனத் தொகையும் படித்த மக்களுமாக கம்பீரமாக செல்வச் செழிப்புடன் நிமிர்ந்து நிற்க வேண்டிய இலங்கை இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளின் மிரட்டலுக்கு ஆளாகியிருப்பது ஒவ்வொரு இலங்கையனையும் கவலையடையச் செய்யும் செயலே ஆகும்.
இலங்கையின் போர்ட் சிற்றி இனிச் சீனாவின் தீவேயாகும்,சந்தேகமே தேவையில்லை.அண்டை நாடுகளுடன் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துடனும் நட்பாக இருக்கலாம்.ஆனால் உதவி என்ற பெயரில் அவர்களின் ஆளுமைக்கோ ஆக்கிரமிப்புக்கோ ஆளாகவே கூடாது.
இலங்கை மக்கள் இனி தமது நாடு என்று சொந்தம் கொண்டாட முடியாத நிலை இலங்கைக்க வரப் போகின்றது.

1,273 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *