எமக்கு எதுவும் புதியது அல்ல
-கௌசி-யேர்மனி
உடல் உறுப்புக்கள் மாற்று சத்திரசிகிச்சை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக இலகுவாகப் போய்விட்டது. மூக்கு மாற்று சத்திர சிகிச்சை என்றவுடன் எமக்கு ஞாபகம் வருவது நடிகை ஸ்ரீதேவி அவர்கள். தோல் சத்திர சிகிச்சை என்றவுடன் எமக்கு ஞாபகத்தில் தட்டுவது மைக்கேல் ஜக்ஸன். இவற்றை அறிந்து உலகத்தில் பணமிருந்தால் என்னதான் செய்ய முடியாது என்று சலிப்படைந்தவர்கள் அதிகம். இவ்வாறு அருமையாக பணம் அதிகமாக வைத்திருந்தவர்கள் மட்டுமே பெற்றுக் கொண்ட இந்த வசதி வாய்ப்புக்கள், இன்று இலகுவாக மாறிவிட்டன. என் கண்ணைப் பார்த்து, என் மூக்கைப் பார்த்து, என் உதடடைப் பார்த்து, நையாண்டி பண்ணுகின்றார்கள், என் மனதுக்கு வேதனையாக இருக்கின்றது என்று மருத்துவ காப்புறுதியிடம் முறையிட்டால் அல்லது எம்மிடம் வேண்டிய பணம் இருந்தால் போதும் நாங்கள் விரும்புகின்ற வடிவத்தில் எம்மை மாற்றிக் கொள்ள மருத்துவ உலகம் இடமளிக்கின்றது. ஆணாக இருக்கும் நான் பெண்ணாக மாற ஆசைப்படுகின்றேன் என்றால், தகுந்த விளக்கங்களுடன் வசதியைப் பெற்றுத்தர மருத்துவ உலகம் முன்வருகின்றது. பக்கத்து வீட்டுப் பெண்ணின் உதடு வீங்கிவிட்டது ஏதாவது நோயாக இருக்குமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது அப்படித்தான் என்று இலகுவாகச் சொல்லிவிட்டுப் போகலாம்.
எப்படி இருந்தவள் இப்படி ஆகிவிட்டாள் என்பது போல் சத்திரசிகிச்சை ஏமாற்றிய சம்பவங்களும் நடக்கின்றன. ஆனால், இவ்வாறான வசதி வாய்ப்புக்கள் நவீன உலகத்திலேதான் வாய்ப்புடையதாக இருக்கின்றது என்று நாம் பெருமை கொள்ள முடியாது. புராணங்களிலும் இலக்கியங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
காளத்தி மலையிலே அமைந்திருந்த சிவலிங்கத்தை நாள் தோறும் வழிபடும் திண்ணன் என்னும் வேடன், செய்த சத்திரசிகிச்சையே கண்மாற்று சத்திரசிகிச்சையாக இன்று நாம் அறிகின்றோம். வழமையாக இலிங்கத்திற்கு பன்றி இறைச்சியைப் படைத்தும், மலர்களால் அர்ச்சனை செய்தும் திண்ணன் சிவலிங்கத்தை வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவலிங்கத்தின் வலது கண்களில் குருதி வடிவதைக் கண்டு ஓடிச் சென்று பச்சிலை வைத்தியம் பார்த்தான். இரத்தம் வடிவது நிற்கவில்லை. உடனே தன்னுடைய ஒரு கண்ணைத் தோண்டி வலது கண்ணிலே வைத்தான். உடனே இடது கண்ணில் இருந்து குருதி வடிவதைக் கண்டு இடதுகண்ணையும் வைப்பதற்காக முயற்சித்த போது நில்லு கண்ணப்பா என்று கூறி இறைவன் தடுத்ததாக ஒரு பெரியபுராணக்கதை படித்திருக்கின்றோம்.
The Falcon and the Winter Solder என்னும் நாடகத்திலும் Marvel படங்களிலும் Winter Solder ஆக நடித்த sergeant James Buchanan என்பவர் சக்தி வாய்ந்த கையைப் பொருத்தியிருந்ததை நாம் பார்த்திருக்கின்றோம். அதாவது கைச்சத்திரசிகிச்சை. இதனைப் பழமொழி நானூறு என்னும் இலக்கியத்திலே ஒரு பாடல் எடுத்துக் காட்டுகின்றது. பொற்கைப் பாண்டியன் என்று அழைக்கப்படும் பாண்டிய மன்னன் வரலாறு செயற்கைக் கை பொருத்தும் சத்திரசிகிச்சை அக்காலத்தில் இடம் பெற்றிருந்திருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக அமைகின்றது.
நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.
கீரந்தை என்னும் வேதியன் வணிகத்தின் பொருட்டு வேறு தேசம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது திருடர் பயத்திற்காக அவன் மனைவி அஞ்சினாள். வேதியனும் நீ பயப்படத் தேவையில்லை. நல் ஆட்சி புரியும் மன்னன் உள்ள இந்த நாட்டில் உனக்கு ஏது பங்கமும் ஏற்படாது என்று சொல்லியதை நகர் வலம் வந்த மன்னன் கேட்டான். அன்றிலிருந்து நாள் தோறும் நகர் வலம் வந்து மன்னன் வேதியன் வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் கீரந்தை வீட்டில் கதைக்கும் சத்தம் கேட்டது. கதவைத் தட்டிய மன்னன் கீரந்தை என்று அறிந்து கீரந்தை சந்தேகப்படுவான் என்று கருதி எல்லோருடைய வீட்டுக் கதவையும் தட்டினான். இதனால், அடுத்தநாள் நகரத்து மக்கள் எல்லோரும் இரவு தங்களுடைய வீட்டுக் கதவுகள் எல்லாம் திருடனால் தட்டப்பட்டன என்று அரச சபையிலே முறையிட்டனர். சபையிலே அமர்ந்திருந்த புலவர்களும், அமைச்சர்களும் திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். உடனே வாளைக் கொண்டு வரச் சொல்லி மன்னன் தன்னுடைய கையை வெட்டித் தானே எல்லோருடைய கதவையும் தட்டியதாகச் சொன்னான். அதன் பின் இப்பாண்டிய மன்னன் பொன்னால் ஒரு கை செய்து வரச் சொல்லி அக் கையைப் பொருத்தி அதனோடே வாழ்ந்தான். அதனால் பொற்கை பாண்டியன் என்று பெயர் பெற்றான்.
இவ்வாறு எமக்கு எதுவும் புதியது அல்ல. பழைமை புதுமையாகக் காண்கின்றோம் என்பதே உண்மை.
1,349 total views, 3 views today