இந்தியா என்ன செய்யப்போகின்றது?
இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா தமது அக்கறையை அண்மைக்காலமாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றது. கொழும்பில் சீனா அமைத்திருக்கும் துறைமுக நகரம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் அளவுக்கு அதிகாரங்களைப் பெற்றிருக்கும் நிலையில், இனிமேலும் மௌனமாக இருக்க முடியாது என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால், வெறுமனே கருத்துக்களை வெளியிடுவதுடன் இந்தியா நிறுத்திக்கொள்ளுமா? அல்லது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதனையாவது செய்யுமா? என்ற கேள்வியும் இங்குள்ளது.
இலங்கையில் சீனா புதிய துறைமுக நகரம் ஒன்றை அமைத்திருப்பது இந்தியாவின் நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்திருக்கும் இந்திய கடற்படை துணைத் தளபதி அட்மிரல் ஜ.அசோக் குமார், இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்தியாவின் ஏ.என்.ஐ. செய்திச் சேவைக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், “இந்தியக் கடற்படை நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு மிகவும் தயார் நிலையில் உள்ளது. அதனால், யாரும் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் எதனையும் செய்துவிட முடியாது” எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் குறித்து அண்மைக்காலம் வரையில் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்துவந்த இந்தியா முதல் தடவையாக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றது. “கொழும்பு துறை நகர திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு அடிப்படையில் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்” எனவும் அரின்டம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.
சீனாவின் பாரிய முதலீட்டுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான சட்டமூலம் சில வாரங்களுக்கு முன்னர் பலத்தை சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் துறைமுக நகரத்தை தனியான ஒரு நாடாக சீனா நிர்வகிக்கப்போகின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையில், இதன் மூலம் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக அமையலாம் என்பதும் உணர்த்தப்பட்டிருந்தது.
இலங்கையைக் கையாள்வதில் இந்தியா மிகவும் அவதானமாகவே இருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் தமக்கு எதிரான கருத்துக்கள் உருவாக்கப்படலாம் என்பதால், ஒவ்வொரு வார்த்தைகளையும், செயற்பாடுகளையும் மிகவும் அவதானமாகவே இந்தியா மேற்கொள்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு கோட்டாபய அரசு இணங்கிய போது அதற்கு எதிரான போராட்டங்களை தென்னிலங்கையில் இலகுவாக முடுக்கிவிட முடிந்தது. துறைமுக தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி. என்பன இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து அந்த உடன்படிக்கையிலிருந்து இலங்கையைப் பின்வாங்கச் செய்தார்கள்.
இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் இந்தியா திண்டாடுவதற்கு இதுபோன்ற காரணங்கள் உள்ளன. ஏற்கனவே கையைச் சுட்டுக்கொண்ட அனுபவம் இந்தியாவுக்குள்ளது. சிங்கள மக்களின் அதிருப்திக்கு மத்தியில் தம்மால் எதனையும் சாதிக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்கின்றார்கள். இருந்தாலும், இப்படியே இருந்துவிட்டால், சீனாவால் வரக்கூடிய ஆபத்தை தவிர்க்க முடியாது போகலாம் என புதுடில்லிக்கு உணர்த்தப்பட்ட நிலையில் அதன் அணுகுமுறையில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது.
“இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருகிறது” என இந்தியாவின் பிரபல தினசரியான ‘தி பிரின்ட்’ கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் கொழும்புடனான இராஜதந்திர உறவுகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு புதுடில்லி விரும்பியது. ஆனால், இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதற்குப் பதிலாக ஒரேயடியாக சீனாவின் பக்கம் சாயும் இலங்கையின் நிலைப்பாடு இந்தியாவைத் தடுமாற வைத்திருக்கின்றது. கடந்த மாதம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுகச் சட்டமூலம், இந்தியாவின் பிரதான எதிரியை இந்தியாவின் கொல்லைப் புறத்துக்கே கொண்டுவந்திருக்கும் நிலையில், இனிமேலும் உறங்கிக்கொண்டிருக்க முடியாது என்ற உண்மையை புதுடில்லிக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் ராஜபக்க்ஷ சகோதாரர்களிற்கும் இடையிலான ஆரம்ப கால நட்புறவு தற்போது மறையத்தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கு முதலிடம் என்ற இலங்கையின் கொள்கை காணாமல்போயிருக்கின்றது. அந்த இடத்துக்கு சீனா வந்திருக்கின்றது. கடந்த காலங்களில் இந்தியா விட்ட சில தவறுகளும் இதற்குக் காரணம் என்பதையும் புதுடில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில்தான் இலங்கையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து புதுடில்லி மீள்பரிசீலனை செய்வதாக த பிரின்ட் என்ற தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மீது இந்தியாவுக்கு இருந்த ஒரே பிடி 13 ஆவது திருத்தம்தான். இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பலனாகக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கொழும்பை வலியுறுத்திவந்த புதுடில்லி, ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியில் அது சாத்தியமாகாது என்பதை உணர்ந்திருப்பதாகவே தெரிகின்றது.
மாகாண சபைகளை இல்லாதொழிப்பது இல்லையெனில், அதற்குள்ள அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி அதனை ஒரு வெற்றுக்கோதாக மாற்றிவிடுவது என்ற இலக்குடன்தான் ராஜபக்ஷக்களின் அரசாங்கம் சென்றுகொண்டிருக்கின்றது.மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல், ஆளுநர்களின் கீழ் அவை நிர்வகிக்கப்பட்டு இதற்கு அதிகளவு வாய்ப்பைக் கொடுக்கின்றது. அண்மையில் மாகாண சபைகளுக்கு கீழ் இருந்த வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டமை இதற்கு ஒரு உதாரணம். இது போன்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதைக்கூட அழுத்தமாக கொழும்புக்குக் கூறக்கூடிய நிலையில் டில்லி இல்லை. இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே, “மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துங்கள்” என கூட்டமைப்புத் தலைமைக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். வழமையாக கூட்டமைப்புத் தலைமைதான் இவ்வாறான கோரிக்கைகளை இந்தியாவிடம் முன்வைக்கும். இப்போது இந்தியா இவ்வாறு கோரியிருப்பதன் மூலம், இலங்கை மீதான இந்தியாவின் பிடி தளர்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
கடந்த மாதம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் சந்திப்பை ஜனாதிபதி ரத்துச் செய்தார். தற்போதைய நிலையில் தென்பகுதியில் பாதகமான நிலையை ஏற்படுத்தும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆக, கூட்டமைப்பைச் சந்திப்பதற்கே தயாராக இல்லாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இதனை அவர்கள் எவ்வாறு வலியுறுத்த முடியும்?
990 total views, 3 views today