தமிழ்நாட்டில் தமிழினுடைய நிலை!
மம்மி, டாடி, அங்கிள்
முனைவர் ஜெ.ரஞ்சனி,
உதவி பேராசிரியர்,தமிழ்த்துறை,
திருச்சி.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என பரிமேலழகர் கூறுவார். மொழி நம் பண்பாட்டின் விழுமியம். மொழியில்லாத வாழ்க்கை ஒளி இல்லாதது போன்றது. திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாகத் திகழ்வது தமிழ்தான் தமிழில் இருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின.
தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவுகளை கொண்டது. பண்டைய தமிழர்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைசங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர். இதன் மூலம் பல தமிழ் நூல்கள் நமக்கு கிடைத்தன.
இன்று பல்கலைக்கழகங்களும், ஆதினங்களும். தமிழ் மன்றங்களும் தமிழ் மொழியை பேணுவதில் அக்கறை காட்டி வருகின்றன.
பாரதி காலத்திலிருந்து இன்று மொழி வளர்ச்சியில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. தமிழ் பத்திரிக்கைகள் அதிகமான அளவில் மாத இதழ்கள் வார இதழ்கள் நாளிதழ்கள் அவைகளின் பதிப்புகளும் விற்பனைகளும் அதிகரித்து வருகின்றன. எழுத்தாளர்கள், கவிஞர்ககள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தமிழ் உரைநடை வளர்ச்சி விரிவடைந்துள்ளன. தமிழுக்கென தனி பல்கலைக்கழகம் உள்ளது. இவையெல்லாம் நன்கு பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகல்வாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழின் தொன்மையை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்துச் சென்ற இந்த ஆய்வு முடிவுகள் குறித்த பேச்சு இன்றைய தமிழகத்தில் அனைத்து தளங்களையும் ஆக்கிரமித்தன.
தமிழின் பழங்காலம் குறித்த தகவல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு எதிர்காலத்தில் தமிழ் மொழியின் இருப்பு பயன்பாடு வளர்ச்சி பரிமாண மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றுவது முக்கியம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் தரப்படுகின்றது. இது தமிழக அரசு விருதாகும். ஆண்டுதோறும் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு விருது தொகையாக ஒரு இலட்சம் ஒரு சவரன் தங்கபதக்கம் வழங்கப்படுகிறது.
இதுபோன்று திருவிக விருது, பாரதியார் விருது, கி.ஆ.பே விஸ்வநாதம் விருது, பாரதியார் விருது போன்ற விருதுகள் தமிழ் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அளிக்கப்படுகிறது.
பண்பாடு தெரியாத நிலைக்கு இன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். நம் வீட்டில் இருக்கின்ற பெரியவர்களின் பெருமை தெரியாத நிலையில் அவர்களை புறக்கணிப்பது போல நம் நாட்டில் இருக்கின்ற மொழியின் பெருமையை அலட்சியம் செய்கின்றார்கள்.
தமிழில் பேசினால் கௌரவக் குறைச்சல் என்றும் நுனி நாக்கு ஆங்கிலம்;தான் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பது ஆழமாகப் பதியப்பட்டு வருகிறது. தமிழில் படிப்பதாலோ, பேசுவதாலோ என்ன வளர்ந்து விடப்போகிறது என்ற எண்ணத்தில்தான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழிப் பற்றை கற்று தருவதில்லை தனியார் பள்ளிகளில் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்து வருகின்றன. காசை கொட்டி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அந்த பணத்தை தன் பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்த்து இல்லை சொந்த ஊரிலோ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பேச்சு வழக்கில் கூட இன்று தமிழ் ஆங்கிலம் கலந்துதான் பேசுகின்றார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கடைகளில் ஆங்கிலப் பெயரை வைக்கின்றார்கள்.
வேற்று நாட்டை சார்ந்தவர்களுக்கு மொழி பற்று இருக்கின்றது. பல நாடுகளில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கின்றது.
தமிழ் மொழியின் அவசியத்தை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.15 மொழிகள் கற்றுத்தெர்ந்த பாரதி
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழியைப் போல்
இனிதாவது எங்கும் காணோம்
என்று குறிப்பிட்டார்.
தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவு கோலாக இருக்கிறது. எந்த மொழியைக் கற்றாலும் எத்தனை மொழிகளை கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய் மொழியில் தான்.
கையொப்பம் சிலர் தமிழில் இடுவதில்லை ஆங்கிலத்தில் பழகிவிட்டது மாற்ற முடியவில்லை என்கிறார்கள்.
உறவுகளை அழைக்கும்போது மம்மி, டாடி, அங்கிள் என்றுதான் அழைக்கிறார்கள். முன்னோர்கள் சொல்லிய உறவு பெயர்களை வைத்து கூப்பிட சிறு வயதிலிருந்தே குழந்தைக்கு பழக்க வேண்டும்.
குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருப்பதை தேர்ந்தெடுக்காமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை இன்றைய இளைஞர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்றைய இளைய தலைமுறையினரிடம் தமிழ் பேசும் வழக்கம், தமிழ் படிக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துள்ளது.
தமிழ் மொழியை நம் குழந்தைகளுக்கு சிறப்பாக கற்று கொடுக்கும் கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. குழந்தை பருவத்திலேயே மொழி பாடங்களை கற்கும் போதுதான் அவர்கள் அம் மொழியில் வல்லவர்களாகவும் மொழி பற்றாளராகவும் உருவாக முடியும் என்பதில் ஐயமில்லை.
1,198 total views, 3 views today