பேசிப் பேசிப் போவோம் கண்ணே!

-மாதவி
இப்ப எல்லாம் தெருவில் மனித நடமாட்டம் அருகிபோச்சு.அப்படி நடமாடினாலும் நாயோடு நடப்பதும் அதோடு நயமாய் பேசுவோரையும் தான் காணமுடிகிறது.
covid 19, காலம் வாயைக்கட்டிக்கொண்டு நடக்கிறததுதானே, பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு என்று என்னைக் கடிப்பது தெரியும். இருந்தாலும் அப்போ பாடசாலைக்கு என்றால் என்ன , சந்தைக்கு என்றால் என்ன, பேசிப் பேசியே நடந்த காலம் மலையேறிப்போச்சு.
வீட்டுக்குள் தொடர்ந்து இருந்தால் தொந்தரவு உடம்புக்கு என்று, வெளியே நடப்போம் என்றால்,வெளியே ஒரு நாயையும் காணோம். அப்படி என்றால் மனிதனையும் காணமுடியாது தானே!
இருந்தாலும் எனக்குள் பேசுவது எனக்கு கைவந்த கலை.மற்றவர்களுக்கு கேட்டாலும் இந்தக் காலத்தில் எவரும் பிழையாக நினைக்கமாட்டினம். தனிய போனிலை கதைக்கிறேன் எண்டு தானே நினைப்பினம். வாய் காது எல்லாம் முகக் கவசம் மறைக்குது அல்வா!
துரத்தில் ஒருவர் என் மனக்குமுறலை போக்க சமாதானக் கொடி பிடித்து வருகிறார். என் வாழ்வில் இப்படி ஒருத்தியை இப்போதுதான் காண்கின்றேன். என்னை மிகவிரைவாக அண்மித்து விட்டாள். என்னைக் கண்டதும் நின்று விட்டாள்.
காரணம் அவள் பாதையில் நான் குறுக்கிட்டு நிற்கிறேன். நான் விலக அவள் மீண்டும் விரைகிறாள்.
அவள் வேறுயாரும் அல்ல. இப்போது இங்கிலாந்தில் பரீட்சாத்திமாக விடப்பட்டுள்ள (Starship) டிலிவறி ரோபோ. அவளை சென்ற மாதம் இங்கிலாந்தில் Milton Keynes நகரில் சந்தித்தேன்
வீட்டில் இருந்து ஓடர்பண்ணினால் ஓடிவந்து தருவாள். மருந்து, உணவு, மளிகை பொருட்கள், என்பவற்றை காவிக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலுக்கு வருவாள். வந்ததும் உங்கள் போனுக்கு மசேச் பண்ணுவா. நீங்கள் அவள் முதுகில் உள்ள கோட்வேட்டில் ஸ்கேன் பண்ண பொருட்கள் உள்ள பெட்டி திறக்கும்.நீங்கள் எடுக்கலாம்.
இந்த ரோபோவின் பெயர் Starship. சரி என்கதைக்கு வருகிறேன். நான் வழிமறித்து நிற்க நின்றவள், நான் விலக விரைந்து செல்கிறாள். அதற்கு சுற்றும் முற்றும் கண்கள். அதனால் தான் இந்த ரோபோவைப் பெண் என்றேன். இல்லை என்றால் இவ்வளவு பாதுகாப்பாக தெரிவில் எப்படி வரமுடியும்.
அவளுக்கு இடைஞ்சல் செய்தால் உடன் ஒரு சத்தம் போடுவாள்.நான் நினைக்கிறேன் அவள் மேலிடத்திற்கு என்ன படத்துடன் அறிவித்துவிடுவாள் என்று. அதனால் அவளை நகரவிட்டு காதலியை பின் தொடர்ந்து நல்லபடி பேசி பேசிக்கொண்டு நடந்தேன். தெருவைக் கடக்கவேண்டும். நின்றுவிட்டாள், இருபுறமும் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு தெருவைக் கடந்தாள். நான் தொடர்ந்து சென்றேன். ஒரு இடத்தில் சிறிய படி இருந்தது உடன் அவள் சிறிது பின்னே சென்று “வெள்ளத்திற்கு பாவாடையை கொஞ்சம் உயர்த்தி நடப்பவள் போல் ” அவளும் தன்னை உயர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றாள்.
செல்லவேண்டிய இடம் வந்ததும் நின்றாள். ஒரு பெண் வந்து அவள் முதுகில் உள்ள கோட் வேட்டில் ஸ்கேன் பணி பொருட்களை எடுத்து சென்றாள்.
நான் அப்போ ரிவுஷன் முடிந்தது வரும் காதலியுடன் பேசிப் பேசிப் போக காத்திருக்கும் காதலன் போல் மறைந்து நின்றேன். நான் இன்னும் அவளை பின்தொடர்வேன் எங்கு இருந்து புறப்படுகிறாள். இடர்களை எப்படி எல்லாம் எதிர்கொள்கிறாள். அவள் இயங்க என்ன சக்தி பயன் படுத்துகிறார்கள். அவளுக்கு வழியில் ஒரு ஆபத்து என்றால் என்னைவிட யார் உதவுவார்கள். இவை எல்லாம் அறிய நான் அவளைப் பின் தொடர்வேன். (வேறு ஒரு காதல் பிறக்கும் வரை)
பி.குறிப்பு.இப்படி 5500 ரோபோக்கள் இங்கிலாந்தில் பரீட்சார்த்த சேவையில் விடப்பட்டு உள்ளது