மூச்சுத் திணறலுக்கு மருந்தில்லாத சிகிச்சை
‘மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.’
ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது உதவித் தாதிதான்.
வேலையைக் குழப்பினாள் என்று கோபிக்க முடியாது. அவசர நோயாளிக்கு முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டும்.
அவசர நோயாளிகளை பார்வையிடும் அடுத்த அறைக்குள் நுளைந்த போது அழகிய பொம்மை ஒன்று பாடசாலை வெள்ளைச் சீருடையில் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது. சுவாசிக்கும் வேகம் அதிகமாக இருந்தது
வேர்வை ஆறாகப் பெருகி ஓடியது. கழுவிய முகத்தின் ஈரத்தைத் துடைக்காதது போல வழிந்தோடியது. வெள்ளை சீருடையானது தோய்த்து உலராத ஆடை போல ஈரலிப்பாக இருந்து. சற்று அதிக நேரமாகவே இவ்வாறு மூச்சுவிட சிரமப்பட்டிருப்பாள் என்பதற்கு அவை போதுமான சாட்சிகள் அல்லவா?
பக்கத்தில் தந்தை செய்வதறியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார். பாடசாலையில் இருக்கும்போது இவளுக்கு திடீரென இவ்வாறு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அதிபர் தனக்குப் போன் பண்ணியதாகவும், தான் உடனடியாகவே பிள்ளையை இங்கு அழைத்து வந்ததாகத் தெரிவித்தார் தந்தை. பார்க்கப் பரிதாபமாக இருந்தாள்.
பார்த்த உடனேயே ஆபத்தான நிலை அல்ல என்பது தெரிந்தது. அது ஆஸ்த்மா வும் இல்லை, இருதய வழுவல் நோயுமல்ல என்பது புரிந்து விட்டது. இருந்தபோதும் அவளது பிரஸர் இருதயத் துடிப்பு, சுவாச நிலை ஆகியவற்றை அவசரமாக பரிசோதித்து அவளது நோயை நிர்ணயம் செய்து முடித்தேன்.
“இவவுக்கு மருந்துகள் ஒன்றும் தேவையில்லை” என்று நான் சொன்னதும் தந்தையின் முகம் துணுக்குற்றது. போனமுறை இவவுக்கு இப்படி வந்தபோது பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனனாங்கள்.
“அவையள் உடனடியாக அவசரப் பிரிவில் நிற்பாட்டி ஊசியும் போட்டு காஸ்சும் பிடித்தவை”.காஸ் என அவர் கூறியது ஆஸ்த்மாவிற்கான மருந்தை ஆவியாகப் பிடிப்பது- நெபுலைஸ் (நேடிரடணைந)- செய்வது என்பதை புரிந்து கொண்டேன்.
“மருந்து தேவை இல்லை என்று சொன்னது சிகிச்சை தேவையில்லை என அர்த்தப்படாது. ….. ஒரு பயிற்சி செய்தால் எல்லாம் சுகமாகும்” என்றேன்.
‘இந்தளவு மூச்சு எடுக்க சிரமப்படுபவளுக்கு பயிற்சியா?’ …. டொக்டருக்கு மூளை கெட்டுப் போச்சா?’
அவரது முகத்தில் ஆச்சரியத்தின் ரேகைகள். இருந்தாலும் கேட்கவில்லை.
“பிள்ளை கவனமாகக் கேட்டு நான் சொல்லிறதைச் செய்யுங்கோ. வலது மூக்கை அழுத்திப் பிடித்துக் கொண்டு இடது மூக்கால் ஆழமாகச் சுவாசியுங்கோ. ஐந்து தரம் அவ்வாறு செய்யுங்கோ”
அவள் சொன்னதை சரியாகச் செய்தாள். நான் ஊசி போடவில்லை என்பதால் அவளது முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியதாக உணர்ந்தேன். ஐந்து தடவைகள் முடிய அவளது சுவாசத்தில் முன்னேற்றம் ஏற்படுவது தெரிந்தது.
இனி இடது மூக்கை அழுத்திப் பிடித்துக் கொண்டு வலது மூக்கால் ஆழமாகச் சுவாசியுங்கோ. முன்னரைப் போல 5 தடவைகள் என்றேன். நம்பிக்கையோடு செய்தாள்.
“கொஞ்சம் சுகமாக இருக்கோ” பிள்ளையைக் கேட்டேன். ஓம் என்று சொல்லுமாப் போல மேலும் கீழுமாக தலையாட்டினாள். மேலும் இரண்டு மூன்று தடவைகள் செய்ய அவளது மூச்சுத் திணறல் முற்றாக நின்றுவிட்டது.
இது என்ன யோகசனத்தில் செய்யிற சுவாசப் பயிற்ச்சி போல கிடக்கே என்று நீங்கள் கேட்டால் நான் அதை மறுக்க மாட்டேன். எங்கிருந்து வந்தாலும் அது நன்மையாக இருந்தால் அதை மருத்துவத்தில் பயன்படுத்துவதில் பிழை இல்லை. நானும் முறையாக யோகாசனப் பயிற்சிகளைக் கற்றிருக்கிறேன். இரத்தினசோதி மாஸ்டரிடம் யோசனப் பயிற்சிகளை சிவன் கோவில் மண்டபத்தில் பயின்ற நினைவுகள் வந்தன. அவருக்கு என் நன்றிகள்.
உண்மையில் அவளது நோய் என்ன எதற்காக இந்த சிகிச்சையை நான் தேர்ந்தெடுத்தேன் என்று நிச்சயம் கேட்பீர்கள். மருத்துவத்தில் Hyperventilation என்று சொல்வார்கள். மிகை சுவாசம் என்று சொல்லலாம். இது ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். குறைந்தது 15 மருத்துவ காரணங்களாவது இருக்கும்.
Respiratory,alkalosis, Diabetic Ketoacidosis, Heart failure, Pulmonary embolism, Sepsis, Pneumonia போன்ற ஆபத்தான காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பயப்பிராந்தி (Panic disorder) உளநெருக்கீடு (Stress) மனப்பதற்றம் (Anxiety) போன்ற உளம் சார்ந்த காரணிகளும் உள்ளன.
இவளது மூச்சுத் திணறல் உளவியல் ரீதியானதே ஒழிய ஆபத்தான நோய்களால் வந்தது அல்ல என்பதை எந்த மருத்துவராலும் சுலபமாக கண்டறிய முடியும். வகுப்பில் எப்பொழுதுமே முதற் பிள்ளையாக இருக்கும் இவளுக்கு என்ன உளவியல் தாக்கம் என்பதை என்னால் உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.
தந்தையாலும் காரணத்தை கண்டறிய உதவ முடியவில்லை. இருந்தாலும், போட்டி மனப்பான்மை, அடுத்தவள் தன்னை முந்திவிடுவாளோ என்ற அச்சம், படிப்பதில் உள்ள நெருக்குவாரம் போன்ற பலவும் காரணமாகலாம். அவளுக்கு தீவிர மருந்துகள் எதுவும் தேவைப்படாது. உள ஆற்றுப்படுத்தல் முறைகள் நல்ல பலன் கொடுக்கும். அதன் முதற்படியாகத்தான் இந்த மூச்சுப் பயிற்சி அவளுக்கு மூச்சுப் பயிற்சியோடு யோகாசனம், சாந்தியாசனம் போன்றவற்றையும் பழக்கும்படி ஆலோசனை வழங்கினேன்.
1,003 total views, 3 views today