தலைப்பு வேறு செய்தி வேறு
சில திரைப்படங்களுக்கு போஸ்டர் ஒட்டுவார்கள். பார்க்கும் போதே பிரமிப்பாய் இருக்கும். அதன் வடிவமைப்பும், ஒளிப்பதிவும், எழுத்துருவும் பார்வையாளர்களை வசீகரிக்கும். ஒரு அசத்தல் தலைப்பையும் போடுவார்கள். ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம் எனும் ஆர்வத்தை அது தூண்டி விடும். அதை நம்பி படத்துக்குப் போய் உட்கார்ந்தால் ஒரு மரண மொக்கை படத்தைப் பார்க்க நேரிடும். கற்ற வித்தை மொத்தத்தையும் போஸ்டர் செய்யவே செலவழிச்சாங்களோ என தோணும்.
‘ஏம்பா படத்தை மொக்கையா எடுத்தே பரவாயில்லை, போஸ்டரையும் அப்படியே எடுத்திருந்தா ஏமாந்திருக்க மாட்டோம்ல’ என டைரக்டரின் சட்டையைப் பிடித்துக் கேட்கத் தோன்றும்.
அதே போல தான் சில டிரைலர்கள். ஒரு பரபரப்பான திரில் படம் போல சில நிமிடங்கள் ஓடும் அந்த டிரைலர் இருக்கும். அதை நம்பி அந்தப் படத்தைப் போய்ப் பார்த்தால், நல்ல காட்சிகளெல்லாம் ஏற்கனவே டிரைலரில் பார்த்ததாகத் தான் இருக்கும். வேற சரக்கு ஒன்றுமே இல்லை என்பது புரியு வரும். அல்லது ஒரு பரபர திகில் படம் போல எடுக்கப்பட்ட டிரைலர், ஒரு சாதாரண நாடகம் போல மாறி நம்மை இம்சிக்கும்.
பார்வையாளர்களிடம் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி அவர்களை படம் பார்க்க வைப்பது தான் இதன் அடிப்படை சிந்தனை. இதில் விழுந்து விடுபவர்கள் எக்கச்சக்கம். கடைசியில் பார்வையாளர்கள் கடும் எரிச்சலிலும், கோபத்திலும் தான் படத்தை மூடி வைப்பார்கள்.
தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தமே இருக்காது.
இதே நிலை இன்று செய்தி தளங்களிலும் நுழைந்து விட்டது. அதிலும் சில ஆன்லைன் செய்திச் சேனல்கள் பண்ணும் அலம்பல் தாங்க முடிவதில்லை. அவர்களுடைய தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தமே இருக்காது. அல்லது செய்திக்கு போட்டிருக்கும் தலைப்பைப் பார்த்து விட்டு ஒரு பெரிய விஷயம் இருக்கிறது என போய் பார்த்தால் உப்பு சப்பில்லாத ஒரு மேட்டர் தான் இருக்கும்.
“ரமேஷ், ராணிய இருபது வருஷங்களுக்குப் பிறகு சந்தித்தான். பிறகு நடந்தது தான் ஹைலைட்டே ! “என தலைப்பு போடுவார்கள். அப்படி என்ன ஹைலைட் என அறிய வாசகர்கள் கிளிக்குவார்கள். ஆயிரம் விளம்பரங்களுக்கிடையே வாசித்தால், கடைசியில் ‘நாம சந்திச்சு இருபது வருஷம் ஆச்சா ?’ என ரமேஷ் ஆச்சரியமாகக் கேட்டான் என முடிப்பார்கள். ‘உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ?’ என கத்தத் தோணும்.
அந்தப் பெண் கேட்ட அதிரடிக் கேள்வி
அல்லது, “வழிமறித்து நின்ற போலீஸ், அந்தப் பெண் கேட்ட அதிரடிக் கேள்வி ! வெலவெலத்த போலீஸ் ’ என தலைப்பு இருக்கும். அப்படியே ஒரு ஆர்வத்தைத் தூண்டும். பரபரவென படித்தால், ‘ஏற்கனவே லேட்டாச்சு, இப்படி செக்கிங் பண்றீங்களே’ என்று கேட்டார். தைரியமாக அந்தப் பெண் கேட்டதும் போலீசார் வெலவெலத்தனர் ! என போடுவார்கள். இது தான் உங்க ஊர்ல அதிரடிக் கேள்வியாப்பா என கேட்கத் தோன்றும்.
நள்ளிரவில் முதலிரவு அறைக்குள் திடீரென நுழைந்த நபர்!
இதெல்லாம் ஆர்வத்தைத் தூண்டும் வகையறா என்றால், இன்னொரு டைப் உண்டு. வாசகரை விகல்பமாகச் சிந்திக்க வைத்து, கட்டுரைக்குள் இழுப்பது. உள்ளே இருப்பதென்னவோ நாலு காசு தேறாத ஒரு சப்பை மேட்டர் தான். உதாரணமாக ‘நள்ளிரவில் முதலிரவு அறைக்குள் திடீரென நுழைந்த நபர்’ என தலைப்பு போடுவார்கள். செய்தியைப் வாசித்தால், மறுநாள் முதலிரவு நடைபெறுவதாக இருந்த அந்த அறையில் ஏசி வேலை செய்யாததால் அதை பழுது பார்க்க ஒருவர் வந்ததாக அறிந்தபின் நிம்மதி ஏற்பட்டது என போடுவார்கள். ஒரு சின்ன அல்ப கிளுகிளுப்பைக் கிள்ளி விட்டு வாசகனை ஏமாற்றுவது இது.
பிரபல நடிகையில் கெஸ்ட் ஹவுசுக்குள் தனியே இருந்த பிரபல நடிகர்
அதே போல ‘பிரபல நடிகையில் கெஸ்ட் ஹவுசுக்குள் தனியே இருந்த பிரபல நடிகர்’ என போடுவார்கள். அது எந்த நடிகைடா ? அப்படி ஏது நடிகர்டா ? என வாசகன் வாயில் எச்சில் வழிய எட்டிப் பார்த்தால், உகாண்டாவிலுள்ள தொலைக்காட்சி நடிகை ஒருவர், நடிகர் ஒருவருடன் ஸ்டோரி டிஸ்கஷனில் இருந்தார் என முடிப்பார்கள்.
இன்றைக்கு யூடியூப் போன்ற சானல்களில் வருகைக்கு தக்கபடி வருமானம் என்பது உண்டு. அதனால் அதன் தலைப்புகள் இன்னும் வேற மாதிரி மக்களை இம்சிக்கும். ‘மரண அடி’ என தலைப்பு போடுவார்கள். உள்ளே சொத்தையாய் ஒரு செய்தியை நீட்டி முழக்குவார்கள்.
இத்தகைய தலைப்புகள்மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எரிச்சல் உண்டு. ஒரு தடவை, இரண்டு தடவை தான் ஒரு வாசகனை ஏமாற்ற முடியும். அதன் பிறகு அவனுக்கே தெரியும், ‘இவன் வெட்டியா ஒரு தலைப்பு போடுவான், மேட்டர் ஒண்ணும் இருக்காது’ என்பது. இதன் மூலம் அந்த பத்திரிகை தன்னுடைய இயல்பை இழந்து விடும். நம்பகத் தன்மையை இழந்து விடும்.
அதன்பிறகு ஒரு முக்கியமான செய்தி போட்டால் கூட வாசகன் அதை கவனிக்காமல், அல்லது நிராகரித்துக் கடந்து செல்லும் வாய்ப்புகள் மிக அதிகம். பத்திரிகை என்பது பளிச் என ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். தலைப்பு ஆர்வத்தைத் தூண்டலாம் தவறில்லை, ஆனால் விஷயத்தோடு ஒத்துப் போகவேண்டும்.
‘பெண்ணின் கேள்விக்கு அமைச்சர் அசத்தல் பதில்’
‘பெண்ணின் கேள்விக்கு அமைச்சர் அசத்தல் பதில்’ என போடலாம் தப்பில்லை. ஆனால் அமைச்சர் ஒரு பதிலை சொல்லியிருக்க வேண்டும், அது ரசிக்கும்படியான பதிலாய் இருந்திருக்க வேண்டும். அதே போல, ‘உகாண்டாவின் நடிகை’ என போடுவதில் என்ன இருக்கிறது ? ஒருவேளை அதை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவாய் இருக்கலாம். ஆனால் அந்த செய்தியை விரும்பும் வாசகர்கள் வாசிப்பார்கள் இல்லையா ?
ஒரு ஹோட்டலில் நல்ல உணவு இருந்தால் தான் தொடர்ந்து மக்கள் வந்து உண்பார்கள். மெனு கார்ட் மட்டும் சூப்பராக இருந்தால் ஒரு தடவை தான் ஏமாறுவார்கள். அல்லது முதல் தடவை வருபவர்கள் மட்டும் தான் ஏமாறுவார்கள். புத்தகத்தின் அட்டையை அட்டகாசமாய்ப் போடுவதில் தவறில்லை ஆனால் உள்ளே விஷயமும் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும்.
சும்மா ஒரு வசீகர பேச்சில் ஏமாற்ற நினைக்கும் பத்திரிகைகள் நிலைப்பதில்லை. சரியான தலைப்புகளுடன் சரியான செய்திகளைப் போடும் பத்திரிகைகள் தான் மதிக்கப்படும். காலப் போக்கில் அந்த பத்திரிகை நம்பகத் தன்மையையும் பெற்றுவிடும். எதை வாசிக்க வேண்டும் எதை வாசிக்க வேண்டாம் என்பதை வாசகன் எளிதில் தீர்மானிக்க முடியும். இதன்மூலம் வாசக அனுபவமும் மேம்படும் நேரமும் பயனுள்ள வகையில் செலவாகும்.
வெறுமனே ஒருவரை போக்கு காட்டி ஏமாற்றி உள்ளே இழுப்பதில் அர்த்தமில்லை. அப்படி இழுக்க, பத்திரிகை என்பது சர்க்கஸ் கம்பெனி அல்ல. அது சரியான செய்தியை, தெளிவாக, பயனுள்ள வகையில் பதிவிடுவது தான். இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும்.
உதாரணமாக அரை நூற்றாண்டு கண்ட வெற்றிமணியின் தலைப்புகளில் ஒரு இலக்கிய சுவை இருக்கும், ஒரு அழகியல் இருக்கும், அந்த கட்டுரையை முழுமையாய் வடித்துத் தருகின்ற சாரம்சத் தலைப்பு இருக்கும். செய்திகள் ஒவ்வொன்றும் அற்புதமான வாசக அனுபவமாய் இருக்கும். இது தான் தேவையானது. இது தான் ஒரு பத்திரிகையின் இயல்பாய் இருக்க வேண்டும்.
-சேவியர்
1,488 total views, 3 views today