யேர்மனியில் 20 தமிழர்கள் நாடு கடத்தல் தனி விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 தமிழர்கள் 09.06.2021 இரவு தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். யேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் இந்த 20 தமிழர்களும் பலவந்தமாக தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை எதிர்த்து மனித உரிமை அமைப்பும், ஏனைய சில அமைப்புகளும் இணைந்து போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு எதிரில் தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இந்தக் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் ஒன்று தடுப்பு முகாமுக்கு உள்ளே வந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு விமான நிலையம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.