அம்மாவின் கவிதைகள் -01
கவிதா லட்சுமி – நோர்வே
மகனுக்கு நான் எழுதிய முதற்கவிதை
முதல்முறை எமது
பிரிவு நிகழ்ந்தபோது
கருவறையிலிருந்து நீ
பிரசவித்துக்கொண்டிருந்தாய்
என் மார்போடு தூங்கிய நீ
புறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்ட
அந்த இரவின் தீப்பொறி போல்
பிரிவு நிகழ்தலின்
மனச்சலனம் தாக்கிய வடுக்கள்
முதல்முறை என்னுள் நுழைந்தது கண்ணே!
என் விரலினூடு நடந்த நீ
கைகளை உதறிக்கொண்டு
உலகை
தனியாக அளக்கத் தொடங்கிய அதிர்வும்
துளிர்க்கும் கண்களோடு
விடைபெறும் நீ…
அன்று திரும்பிப்பாராமல் ஓடிய நிமிடம்
என்மீது எறியப்பட்ட திகைப்பும்
கண்ணாடிச் சாரளத்தனூடு
தொடரும் உன் கையசைவுகள்
காணாமல்ப்போன நொடி துப்பிய
சலனமும்
தினமும்
நீ கேட்கும் முத்தம்
உனக்கு மறந்துபோன அந்நாளின் சடலம்
என் மீது வீழ்த்திய பாரமும்
உணர்த்தியது…
பிரசவத்தின் வலி எத்தனை சிறியது!
இப்படித்தான்
முதல்முறை எமது பிரிவு நிகழ்ந்தபோது…
என் கருவறையிலிருந்து நீ
பிரசவித்துக்கொண்டிருந்தாய் மகனே!
1,128 total views, 3 views today