சீரடி சாய் சத்சரிதம்
அகத் தேடலுக்கு வழி சமைக்கும் அற்புத சாதகமாய் நாட்டியம் இருப்பதாலோ தெரியவில்லை அவ்வப்போது சவால்களையும் சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சமயத்தில் சீரடி சாயியின் அருளுக்குள் அறிமுகமானேன்.
படைப்பின் பரப்பில் கொட்டிக்கிடக்கும் உணர்வுபூர்வமான விடயங்களை நாட்டியத்தோடு இணைத்துப் பார்க்கும் தன்மை என்னிடம் எப்போதும் இருந்ததால் சாயியின் அன்பினில் ஆட்கொண்ட நாள் முதல் அவரது சத் சரிதத்தினை நாட்டிய படைப்பாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவ்வெண்ணத்தை எவ்வாறு நிகழ்த்த வேண்டுமோ அவ்வாறு நிகழ்த்தி தருமாறு பாபாவின் பாதத்தில் சத் சரித புனித நூலினை வைத்து சரண் புகுந்தேன்.
3 ஆண்டுகள் கடந்தன. மாமழையென அருளினார் பாபா. இந்நிகழ்வினை நடாத்த துணையாக இருக்க கூடியோரை தக்க தருணத்தில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார்.
முதலில் இசை மேதை லால்குடி புதுசு கிருஷ்ணன் அவர்களின் அறிமுகம் கிட்டியது. அவரை சந்திக்க சென்ற பொழுது சீரடி பாபாவின் மிக பிரமாண்டமான உருவப் படத்தை வீதியில் தரிசிக்கவும் நேர்ந்தது. அன்று வியாழக் கிழமை. அன்று அறிந்திருக்க வில்லை சாயி சத்சரித இசை அவராலேயே நிகழ்த்தப்படும் என்று.
சில மாதங்களின் பின் சமூக சேவையாளரும் பிரபல வர்தகருமான தெ. ஈஸ்வரன் அவர்களின் நட்பு கிட்டியது. அவருடனான முதல் சந்திப்பிலேயே சாயி சத்சரிதம் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தை எதேச்சையாக வெளிப்படுத்தினேன். அக்கணமே கண்ணீர் மல்க , சீரடி ஆலயம் ஒன்றினை அவிஸ்ஸாவள என்னும் இடத்தில் அமைக்க வேண்டும் என்ற முயற்சிகளை எடுத்து வருகிறோம். சீரடி ஹசாயியின் மூல ஆலயத்திற்கான நிதி சேகரிப்பு நிகழ்வாக இந்த நாட்டிய நாடகத்தினை அமைத்து தருவீர்களா என்று விண்ணப்பித்தார். இந்த நிகழ்வினை தயாரிப்பதற்கு மிக்க பொருத்தமான ஒரு ஆளுமையை சாயி தந்ததை எண்ணி வியந்தேன்.
அன்றிலிருந்து மிக துரிதமாக நம் பணிகள் ஆரம்பித்தது. சாயி சத்சரித நூலினை பவித்திரமாக கையில் எடுத்து முழுவதுமாக படித்து சாரமாக்கி இயலாக்கம் செய்ய ஆரம்பித்தேன். அவ்வேளை மேலும் பல நூல்களிலும், இறுவட்டுக்களிலும், காணொளிகளிலும் இருந்து தகவல்களைத் திரட்டி முழுநேரமும் சாயியின் கருணையில் திளைத்தவளாய் இருந்தேன்.
சென்னையில் சத்திய சாயி பாபாவின் பரிபூரண ஆசிகளை பெற்ற சாய் ஷ்ரவணம் என்னும் கலைஞனின் ஒலிப்பதிவு கூடத்தில், செவிகளில் சேரச் சேர விழிகளை நனைத்து மெய்சிலிர்க்க வைக்கும் லால்குடி கிருஷ்ணன் ஐயாவின் இசையில் 90 நிமிட நாட்டிய படைப்பு உருப்பெற ஆரம்பித்தது. அவ்விசை வழங்க பங்குபற்றிய அனைத்து கலைஞர்களும் இப்படைப்பினூடாகவே அறிமுகமானார்கள். அதில் யாவருமே சாய் பக்தர்கள் என்பதை அறியும் போது மிக மிக ஆச்சரியமாக இருந்தது.
தன் சரிதத்தை தாமே செதுக்கிக் கொண்டிருந்த சாயியின் மற்றொரு லீலை இப்படைப்பில் பங்குபற்ற இந்தியாவில் இருந்து இரண்டு நடனப்பள்ளிகள் தாமாக முன்வந்து இணைந்து கொண்டனர். ஒன்று திருச்சியில் வெள்ளி விழா கண்ட நடனப்பள்ளியாக இயங்கி வரும் திருமதி சுப்ரியா ரவிக்குமார் அவர்களின் ஸ்ரீப்ரியா நடனப்பள்ளி இரண்டாவது வேலூரில் உள்ள திருமதி மஹாலக்ஷ்மி கார்த்திகேயன் அவர்களின் லாஸ்ய நடனப்பள்ளி. இவர்களும் சாயி பக்த்தர்களே.
படைப்பிற்கு மேலும் அழகு சேர்க்க ஒளி ஒலி அமைப்பினை வழங்க சாயி பக்தரான முருகன் கிருஷ்ணன் அவர்கள் சென்னையில் இருந்து வருகை தந்தார். இவ்வாறாக முதன் முதலில் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் 24ஃ06ஃ2021 அன்று மேடையேற்றினோம்.
சாயி நாதரின் பரிபூரண அருளை அரங்கில் நிறைய செய்த அன்றைய மாலை பலரது கண்களை நனையச் செய்தது. மாண்புமிகு சபாநாயகர் திரு கரு ஜெயசூரிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க , மாண்புமிகு ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட பல பிரமுகரகளுடன் சீரடி நிலைய தலைவர் திரு தெ.ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
சாயி நாதர் உறுதியாய் சொன்ன மதங்களின் நல்லிணக்கத்தை காட்டி இறைவன் ஒருவனே எனக் காட்டும் விதத்தில் வாசல் கோலம் அமைந்திருந்தது. முத்தமிழால் பணிந்து சீரடி சரண் புகும் இப் படைப்பைக் காண்போரும் கற்றோரும் கருதியோரும் நற்பலன் பெறட்டும் என்ற இறைவணக்கத்தோடு ஆரம்பித்தது நாட்டிய நாடகம்.
மேடையை சீரடி என நிர்ணயித்து அரங்கிற்கு வெளியிலிருந்து கல்யாண கோஷ்டியோடு பிரவேசித்த பாபா மிகத் த்த்ரூபமாக சாயி பாத்திரத்தை ஏற்றிருந்தார். நம் வாழ்க்கையில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய விடயங்கள் உள்ளடக்கியதாய் மிக இலகுவில் சபைக்கு எடுத்துச் செல்லும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருந்து. நன்கு தேர்ச்சி பெற்ற அபுநயஷேத்ரா கலைஞர்களின் இயல்பான அபிநயமும் , ஒருங்கிணைந்த ஈடுபாடும் மேடைக்கு ஆரோக்கியம் சேர்த்தது.
எக்காலத்திற்கும் உகந்த வகையில் தத்துவ விடயங்களையும், உண்மை விளக்கங்களையும், பக்தியின் மேன்மையையும் சொல்லி சொல்லி சென்றிருக்கும் சாயியின் முக்கிய இரு விடயங்கள் நெஞ்சாள்ந்து நிறைந்தால் எந்நாளும் துன்பம் இல்லை . ஒன்று பொறுமை மற்றொன்று நம்பிக்கை .
முதன் முறையாய் சாயி சத்சரிதத்தை நாட்டிய வடிவத்தில் அமைத்ததோடு, இயலாக்கம் , நட்டுவாங்கம், நடன அமைப்பு , ஒருங்கிணைப்பு , தயாரிப்பு என அத்தனையும் ஒருவாராய் நின்று இயக்கிய திவ்யா சுஜெனின் கடுமையான முயற்சியால் அவிசாவளை ஆலய நிர்மாணப் பணிக்கான நிதி எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைக்கப்பெற்றது என ஆலய சபையினரும் சாயி பக்தர்களும் ஆனந்தம் பொங்காத தந்த வாழ்த்துகளில் ” எத்தனை கோடி இன்பம் வைத்தாய் “
1,403 total views, 2 views today