அர்த்தமுள்ள அகவைத் திருநாள் அன்றும், இன்றும்

பத்து மாதங்களின் காத்திருப்பு, பத்தியம் பத்திரம் என பாதுகாத்த உயிர், விழிகளால் பார்ப்பதற்கு முன்னரே பாசப் போராட்டம் எப்பேற்பட்ட பொறுமை மற்றும் தவம் அத்தவத்தால் கிடைத்த வரம். இது என்ன சாதாரண நாளா? ஓர் உயிர் தன்னை பரிணாமித்துக் கொள்ள சிறந்ததொரு பயணத்தை தொடங்குகின்ற நாள். இந்த நாளை எப்படி எடுத்துக் கொள்வது.

நாள் கோள் கணக்குகளை திண்ணையில் இருந்து கணித்தனர் எம் முன்னோர்கள். ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து சுயமாக சுவாசிக்கும் தருணத்தில் அந்த சூழலில் காணப்படுகின்ற பேரண்டத்தின் அலைவரிசை, கிரகங்களின் கதிர்வீச்சு மற்றும் திசை, காலநிலை என்பனவற்றை வைத்தே அந்த குழந்தைக்கான ஜாதகம் உருவாகிறது. இது வாழும் காலம் வரை மாறாது. எப்பேற்பட்ட கதிர்வீச்சோடு அக்குழந்தை பிறக்கிறதோ அதற்கேற்றாற்போன்ற கதிர் வீச்சுக்களோடு இலகுவில் ஒத்திசையும். இதனால் தான் சோதிடத்தில் கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் அதிகமாக விழும் இடங்களையும், நாட்களையும் கண்டுணர்ந்து இந்த இந்த நட்சத்திரத்தை உடையவர் இந்த நாளில் இந்த தலத்திற்கு சென்று சிறிது இருந்து வரச் சொல்லியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே முன்பு பல வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டன.

இன்று பயனுள்ள பல விடயங்கள் வழக்கொழிந்து போனாலும் பல பயன்படாத விடயங்கள் உட்புகுந்துள்ளன என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது -என்தன்
இருவிழிக்குத் தே நிலவு
எப்பேற்பட்ட இனிய மங்கல நாள் இப்பூமியை தொட்ட திருநாள், இங்கு கூடி வாழும் பல்லுயிர்களோடு இங்குள்ள வளங்களை, அன்பை, பகிர்ந்து மகிழ்ந்து கொண்டாடும் நாள். பிறந்த பின் சிறந்து விளங்கிய விடயங்களையும் எண்ணிப் பூரிக்கும் நன்நாள். இது எவ்வாறு நினைவு கூரப்பட வேண்டும். இன்றைய நாகரிகத்தில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது.

கருவாக உருவாகி அந்த கரு பல்வேறு புற மற்றும் அக சூழல் காரணிகளால் சிதைவுறாது காக்கப்பட்டு பெரும் கனவுகளோடு காத்திருந்த அன்னையின் கையில் பொக்கிசமாக கிடைத்த ஒரு பிறப்பின் மகத்துவத்தை அதன் அடுத்து வருகின்ற அகவை திருநாளை கொண்டாடுகையில் இன்னொரு ஜீவனின் பிறப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் முட்டையின் கருக்களை சிதைத்து அதனோடு இன்னோரன்ன பொருட்களை சேர்த்த பின் வாய்க்கு இதமான பதார்த்தத்தை கேக் என்ற பெயரில் உருவாக்கி அதன் மீது மெழுகு வர்த்தியை ஏற்றி ஒளிரப்போகும் சுடரை ஊதி அணைத்து ஏதோ ஒரு அமங்கலமாக அதிர்வலை ஏற்படக்கூடிய செயல்களுடன் அற்புதமான பிறப்பின் நினைவுகள் இன்று உலகம் தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு எதிர்மறையாக உள்ளது. நாட்டுக்கு நாடு பல்வேறு கலாச்சாரங்கள் இருப்பினும் பழமை வாய்ந்த தமிழருக்கு என இருந்த அற்புத கலாச்சாரங்கள் அழிவடைந்து காரண காரியமற்ற வெறும் காட்சிக் கூத்துகளாக அரங்கேறி வருகின்றன.

மதுபானப் புட்டிகளில் நுரை சீறியடிக்க, வாழ்த்து சொல்ல வந்தவர் வாய்ச்சொல் குழற, பிறந்த நன்நாளில் உலகில் வாழ்வதற்கென சம உரிமையோடு வந்த சில பிராணிகள் மட்டும் துன்புற்று சட்டிகளில் இறந்து கிடக்கும், பிறப்பதற்கு மூலமான பிதா மாதாவையே வர வேண்டாம் என்று கூறிவிட்டு குட்டி கும்மாளத்தோடு குட்டிச்சுவராகி போய்விட்டது கொண்டாட்ட நிகழ்வு.கடா வெட்டி படையலிட்டு கொண்டாடியவர்களும் உண்டு.

தமிழர் மரபில் விளக்கை ஏற்றியே எந்த ஒரு நிகழ்வும் ஆரம்பிப்பது வழக்கம், அதனை அணைய விடாது பாதுகாப்பார்கள். மற்றும் அந்த விளக்கினையே பல சம்பவங்களில் சாட்சியாகவும் கொண்டிருக்கின்றனர். அக்கினி சாட்சி இல்லாமல் மங்கல நிகழ்வும் இருந்ததில்லை, புனிதமான மரணச் சடங்கும் இருந்ததில்லை. விளக்கு என்பது மங்கலமானது, உயிரோட்டத்தோடு தொடர்புடையது.

நெய் விளக்கில் இருந்து அதிகப்படியான பிராண ஆற்றல் வெளிப்படுகின்றது. இது அதன் சூழலை ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கும். அதிகப்படியாக உறவினர் ஒன்று கூடும் இடத்தில் இது மிகவும் பயனளிப்பதாக இருக்கும். அதிக பிராண ஆற்றல் வேண்டியே ஆலயங்களில் ஆற்றல் தரக்கூடிய எண்ணைகளை கண்டுணர்ந்து முன்னோர்கள் கூறிச் சென்றதால் அதனைக் கொண்டு விளக்கேற்றி பின்பற்றி வருகின்றனர். இவை பல்வேறு வாசனைகளும், வர்ணங்களும் ஊட்டப்பட்ட மெழுகு திரியில் இருப்பதில்லை. மாறாக இவை தன் சூழலை மந்த நிலைக்கு தள்ளிவிடும். சுவாசத்தினூடே உட்சென்று சுவாசப்பை ஓரங்களில் படிந்து காற்றின் பிராண சக்தி உடலுக்கு கிடைக்கும் விகித்த்தை குறைத்து விடுவதுடன் அதிகமான மெழுகு திரியின் அருகாமை நாளடைவில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் தன்மைக்கேற்ப அதிர்வலை உண்டு.

அன்று தொட்டு பிறந்த பொழுது எதுவென குறித்து வைத்து ஆங்கிலத் தேதியல்லாது வளர்பிறை, தேய்பிறை என நட்சத்திரத்தோடு நாளினை கண்டு பிடித்திடுவர். புத்தாடை எடுத்து தந்து கைகளில் பழம்தாம்பூலம் கற்கண்டோடு பூக்கள் நிரப்பி ஆலயம் சென்று வா என்பதோடு ஆரம்பிக்கும் அன்றைய அகவைத் திருநாள். சிறு பிள்ளை ஆனாலும், வயோதிபம் ஆனாலும் இதுவே வழிவந்த மரபு.

கட்டுக் கரும்பை கசக்கிப் பிளிந்து சாறெடுத்து பாகு செய்து, பனை வெல்லத்தோடு திணை போன்ற சத்துணவு பல சேர்த்து, நெய்யில் உருட்டிய லட்டு மினுமினுக்க பல்வகை பலகாரம் பழங்களோடு அகல்விளக்கில் நெய்யிட்டு தீபச்சுடர் எரிய, பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெற்று, வாழ்த்துப்பா ஒலிக்க வாழ்க வாழ்கவென நல்லதொரு நேர்மறையான அதிர்வலையோடு விழாவெடுத்து ஆரம்பிக்கும் அடுத்த அகவைக்கான நாட்கள்.
இனியாவது உலகம் எம்மையறிந்து பின்பற்றக் கூடிய உணர்வோடுடனான மரபுகளை நாமும் பின்பற்றி உலகுக்கும் சொல்லிக் கொடுப்போம். அகவைகள் பல கண்டு பல்லாண்டு வாழ்க!

-கரிணி

1,049 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *