இலங்கை நாடகப்பள்ளியின் சர்வதேச இணையவழி அரங்கியல் கருத்தரங்கு 2020-2021

(ம.அருட்சயா,புதுமுக மாணவி,கிழக்குப் பல்கலைக்கழகம்)

நாடகப்பள்ளியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச அரங்கியல் கருத்தரங்கினை பா.நிரோஷன் ணுழழஅ செயலியினூடாக முன்னெடுத்திருந்தார். “அறிந்தவற்றையும் அனுபவத்தையும் கூறுவோம், அறியாதவற்றை செவிமடுப்போம்” என்ற அரங்க சிந்தனையில் ஈழத்தில் அரங்கியல் துறையில் பணியாற்றிய மூத்த அரங் கவியளாளர்கள் பலரை இணைத்து வாரம் ஒரு கருத்தரங்காக சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கு பற்றி நாடகப்பள்ளி இயக்குநர் பா.நிரோஷன் கூறுகையில்….

“கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் அரங்கப்பணியாற்றிய பல தமிழ் நாடக ஆளுமைகளை நாங்கள் மறந்து, அறியாமல் போனோம். அவர்கள் சார்ந்த அரங்கியல் விடயங்களை அறியச் செய்ய வேண்டி உலகெங்கும் உள்ள தமிழ் நாடக ஆளுமைகளை இணைத்து வாரம் ஒரு அரங்கியல் கருத்தரங்காக 18.12.2020 முதல் நடத்தினேன். அ.தாசீசியஸ் க.பாலேந்திரா, மாவை நித்தியானந்தன், இளைய பத்மநாதன், சி.மௌனகுரு போன்ற மூத்த ஆளுமைகள் இதில் பங்குபற்றினர்.எமது சிந்தனையை பரவலாக்கியதில் பெருமகிழ்ச்சி.”

அவர் கூறியது போன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பலரை நாம் மறந்து போனது வருந்தத்தக்கது. அத்தவறினை இனிவரும் இளந் தலைமுறையினர் செய்துவிடக்கூடாது. தற்போது அரங்கியல் துறைக்குள் இயங்கி வரும் இளந்தலை முறையினருக்கு மூத்த அரங்கியல் ஆளுமைகளின் அனுபவங்களும், திறன்களும் கடத்தப்படுகின்ற போது அது அவர்களை மேலும் வளப்படுத்தும் என்ற பா.நிரோஷனின் சிந்தனை போற்றுதற்குரியது.

மூத்த நாடக ஆளுமைகள் பலரின் சில செயற்பாடுகளை செவிவழியாகவும், பாடத்திட்டம் ஊடாகவுமே அறிந்து வந்தவர்களுக்கு அந்த ஆளுமைகளுடனேயே நேரடியாக உரையாடுவதற்கும் அவர்களின் செயற்பாடுகளை நேரடியாக முழுமையாக அறிந்து கொள்ளவும் இக்கருந்தரங்கு உதவியதாக பலர் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர் வரை இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மூத்த ஆளுமைகளின் விடுபட்டு போன பக்கங்களையும் அவர்களிடமிருந்தே கேட்டு அறிந்து கொண்டனர். ஈழத்தமிழர் பரந்து வாழ்கின்ற அனைத்து நாடுகளில் இருந்தும் பலர் இக்கருத்தரங்கில் பங்குகொண்டனர்..ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஆளுமைகளை இணைத்து செய்யப்பட்ட முதல் சர்வதேச இணையவழி கருத்தரங்காக இது பதிவாகிறது.

இக்கருத்தரங்கின் பின் “ஈழ நாடக வரலாறு” சார்ந்த பதிவுகள் கேள்விக்குரியதாக்கப்படுள்ள அதேவேளை சரியான, முழுமையான நாடக வரலாற்றை எழுத வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றது. துறைசார்ந் தவர்கள் இதனை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புவோம்.

பா.நிரோஷன் அவர்கள் குறுகிய காலத்தில் சர்வதேசமெங்கும் உள்ள மூத்த அரங்கியளாளர்களை இணைந்து சர்வதேச ரீதியில் அரங்கியல் கருத்தரங்கினை நடாத்துவதென்பது இலகுவான காரியமன்று. அவரின் அர்ப்பணிப்பு மிக்க செயலியக்கமும், தொடர் அரங்கியல் செயற்பாடும் தான் அதனை நடாத்தி முடித்திருக்கின்றது. இவர் ஏற்கனவே ஈழத்தில் முதல் முறையாக அரங்கியல் நூலகம் அமைக்கும் பணியை முன்னெடுத்து தொடர் முயற்சியால் அதில் வெற்றியும் பெற்றவர். வரும் இளம் கலைஞன் பா.நிரோஷன் அவர்களிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

1,122 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *