ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால், ஒன்றாகவா வாழுகின்றார்கள்? என்ற கேள்வியுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கின்றது.

ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை என்று சொல்லுகின்றார்கள். ஒன்றாக இல்லை என்பதற்காக அதனை வெட்டி எறிந்துவிட முடியாது. அதனால், சமாளித்து சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஒன்றை உயர்த்திப் பார்க்க ஆசைப்படுகின்றோம். வேண்டிய சக்தியை தாரை வார்க்கின்றோம். ஆனால், அங்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றால், வைத்த பற்றும் இணைந்து பயணித்த அனுபவங்களும் எம்மை மௌனமாக வழிநடத்த அடுத்தவர் கண்களுக்கு ஒன்றாக வாழுகின்றோம். ஆனால், மனதால் ஒன்றாகவா வாழுகின்றோம்?

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள். கணவன் மனதுக்கு ஏற்ற மனையாளாக வாழ மனைவிக்குத் தெரியவில்லை. அவன் விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தெரியவில்லை. அவனைப் புரிந்து நடக்கத் தெரியாது போகத் தானும் வாழாது கணவனையும் மகிழ்ச்சியுடன் வாழ விடாது மனைவி வாழுகின்றாள். இதேபோல் மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத மனிதனாக கணவன் வாழுகின்ற பட்சத்தில் போட்டிபோட்டுப் போராட்ட வாழ்க்கையைக் காலம் முழுவதும் இருவரும் வாழ்கின்றனர். குடும்பத்தை வழிநடத்த புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் தேவை. பெற்றெடுத்த வாரிசுகளின் நலன், சமூகப் பார்வை போன்றவை எழுதப்படாத சட்டங்களாக இருக்க குடும்பங்கள் ஒன்றாகக் காட்சி தருகின்றன. ஒன்றாகவா வாழுகின்றார்கள்?

அக்கால இலக்கியங்களில் காணப்படும் இவ்வாறான நிலைமைகளை எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. பரத்தை ஒழுக்கம் நாடி கணவன் செல்கின்றான் என்று தெரிந்தும் மனைவி அவனுடன் ஒன்றாகவே வாழுகின்றாள். கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூடையில் சுமந்து சென்ற மனைவியின் கதை எமக்கு எதைப் போதிக்கின்றது? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்னும் தத்துவத்தையா? இல்லை. மனதை அடக்கிக் கணவன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையா? வாழ வழியில்லாத பேதையர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இல்லை ஒன்றாகவே வாழுகின்றார்கள் என்பதையா?

“மந்தப் பரத்தையோடும் வருமொழியாரோடும்” சேர்ந்து கோவலன் தன் பொருள் இழந்தான். மாதவி சேர்க்கையின் பின் கோவலன் வணிகர் கடமையாகிய பொருளீட்டல் தொழிலைச் சரிவரச் செய்யவில்லை. மன்னர்களுக்கே கடன் கொடுக்கக் கூடிய தனவந்தனாக இருந்த கோவலன் தன்னுடைய செல்வங்களையெல்லாம் இழக்கின்றான்.

பாடமை சேக்கையுட் புக்குத் தன்பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

என்று கூறிக் கோவலன் கண்ணகியைச் சரண்புகுகின்றான். இத்தனையும் அறிந்திருந்தும் கண்ணகி கோவலனுக்காக வாழ்ந்தாள். கோவலனைப் பிரிந்த வருத்தம் இருந்தாலும் அறச் செயல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், வாழ்ந்தாள். அக்காலப் பெண்கள் அறம் செய்வதாக இருந்தாலும் கணவன் மனைவியுடன் இணைந்துதான் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இராமனும் சீதையும் வனவாசம் செய்த காலகட்டத்தில் இராமன் இல்லாத சமயத்திலே அறச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால், இராவணனால் சீதை கடத்தப்பட்டாள் என்று உரைக்கிறது இராமாயணக் காட்சி.

காரைக்காலம்மையார் சிறந்த இலக்கியவாதியாக இருந்த போதிலும் கணவன் பரமதத்தனுடன் ஒன்றாக வாழ்ந்தாள். சிவபக்தர்களைப் போற்றும் பண்புள்ளம் கொண்ட காரைக்காலம்மையார் மாங்கனி விடயத்தில் கணவன் அறியாது சிவபக்தனுக்கு உணவளித்த அறச் செயலை மறைக்க இறைவனை வேண்டி மாங்கனி பெற்றாள். பரமதத்தனுடன் வாழ்ந்தாலும் மனதளவில் அவள் வாழ்க்கை எதனை நாடியது? ஒன்றாகவே வாழ்ந்தாள். ஆனால், ஒன்றாகவா வாழ்ந்தாள்?

புத்தரைத் திருமணம் செய்த போதே தன்னை விட்டுப் பிரியப் போகின்ற ஒரு ஞானியுடனேயே நான் குடும்பம் நடத்துகின்றேன் என்று யசோதரை தெரிந்துதான் புத்தருடன் வாழ்ந்தாள். புத்தரை குடும்ப வாழ்க்கைக்குள் அமிழ்த்திவிட முயன்றாள். ஆனால், புத்தர் ஒன்றாக வாழ்ந்தார். வாழ்க்கை முழுவதும் துறவற சிந்தனையுடன் வாழ்ந்தார். ஒன்றாகவா வாழ்ந்தார்? இறுதியில் 29 வயதில் யசோதரையை விட்டு சென்றார்.

நிடத நாட்டு மன்னன் நளனை கலி பிடித்து ஆட்டுகின்றது. அரசாட்சி துறந்து தமயந்தியுடன் கானகம் புகுந்தான். ஒன்றாக வாழந்தான். ஆனால், தன்னோடு தன் மனைவி தமயந்தி கானகத்தில் அவலங்களை அனுபவிப்பதை நாளும் பொழுதும் அவதானித்தான். கலியின் சூட்சியினால் தன் ஆடை இழந்த வேளையிலே தன் மனைவியின் ஆடைக்குள் தன் மானத்தைக் காப்பாற்றினான். இதனால், நடுநிசியில் ஆடையைக் கிழித்து இரவில் தனியே அவளை விட்டுச் சென்றான்.

“கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்
போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று
சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்”

தான் இல்லாவிட்டால், தன் மனைவி தன்னுடைய தந்தையிடம் சென்றுவிடுவாள் என்று எண்ணம் கொண்டான். இங்கு கானகத்தில் நளன் தமயந்தியின் அர்ப்பணிப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது.

இராமகிருஸ்ண பரஹம்ஸர் தன் மனைவி சாரதா அம்மையாருடன் ஒன்றாக வாழ்ந்தார். காமத்தின் சாயல் கூட இல்லாது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.
இவற்றைவிட மன்னன் தலைமையில் அவைக்களப் புலவர்களாக கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார் சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் ஒன்றாகவே அவையிலே வீற்றிருந்தார்கள். ஆனால், ஒன்றாகவா இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இடையில் புலமைப் போட்டிகளும் அரண்மனை பஞ்சாயத்துகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.
தவறு கண்ட இடத்தில் எழுத்தாணியால் தன் தலையிலே குத்திக்கொள்ளும் சீத்தலைச்சாத்தனார் போலே எத்தனையோ பேர் பொருந்தாத உறவுக்குள், அமைப்புக்குள், குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு ஒன்றாகவே வாழுகின்றார்கள். இது எழுதப்படாத சட்டம்.

1,262 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *