பொட்டு குறும்படம்! புட்டு புட்டுச் சொல்லும் செய்தி என்ன!

  • நவயுகா,இயக்குநர்.பொட்டு

நமது கலாசாரமும் பண்பாடும் ஒரு தலைப்பட்சமானவை என்பதை உணரும் பொழுது, அவை தொடர்பில் கேள்வி கேட்கவும் மாற்றவும் முன்னிற்க வேண்டியது எமது கடமை. ஏன் எதற்காக என்று தெரியாமல் யாரோ செய்தார்கள் என்பதற்காக சில சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் அனுட்டானங்களையும் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
“பொட்டு” ஒரு பெண்ணின் அழகிற்கு மேலும் மெருகூட்டும் அடையாளம், பிறந்தது முதல் அவள் அணிந்து வரும் அணிகலனாக இருப்பதனால் தமிழ்ப் பெண்களுக்கு பொட்டின் மீது அளவுகடந்த விருப்பும் பற்றும் இருந்துகொண்டே இருக்கிறது . ஒரு பெண் தன்னைத் தானே வெகுவாக ரசிப்பவள், நேசிப்பவள், கொண்டாடுபவள், அழகாய் இருக்க ஆசைப்படுபவள். இந்த ஆசையை ஓர் மார்க்கமாகப் பயன்படுத்தி “பொட்டு” எனும் எண்ணக்கருவிற்குள் அவளைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவள் அறிய மறுக்கிறாள்.

திருமணத்தில் அணிவிக்கப்படும் குங்குமம் கணவன் இழந்ததும் அழிக்கப்படுகிறது. “அந்தக் காலம் மலை ஏறிப் போய் விட்டது” என்று நீங்கள் சொல்கிறீர்களா? இல்லை, இன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் கிராமப்பகுதிகளில் கணவனை இழந்த பெண்ணிற்கு வெள்ளைப் புடவை அணிவித்து இறந்த கணவனின் கையால் பொட்டழிப்பது வரை நடந்து கொண்டே இருக்கிறது. கணவனை இழந்த பெண்களை பொது இடங்களில் அவமரியாதை செய்தல், அவர்கள், இந்த சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து சுயமாக இயங்க முற்படும் பொழுது அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுதல், அவமரியாதை செய்தல், பொது இடங்களில் நிராகரித்தல் போன்றன நகரங்களில் கூட இன்றும் மிக அதிகளவாகக் காணக்கூடிய மோசமான அடி முட்டாள்த்தனமான நடத்தைகளாக இருக்கின்றன. மனைவியை இழந்த ஆண்களைக் கூட அதிஷ்டமற்றவர்களாகக் கருதி நிராகரிக்கின்றதையும் காண முடிகிறது.
பெண்களில் சிலர் தடைகளை உடைத்தெறிந்து பயணிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இது வெகு சிலரால் மட்டுமே முடிகிறது. பெரும்பாலான பெண்கள் சமூகத்தின் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அவப் பெயர் உருகாகி விடுமோ என்று பயந்து, பின்பற்றத் தொடங்குகிறார்கள். பல பெண்கள் தாமாகவே சமூகத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்கிறார்கள்.

கணவனின் இழப்பில் உடைந்து போயிருப்பவள், கேள்வி கேக்கப் போவதில்லை என, இழப்பின் மேல் திணிக்கப்பட்டிருக்கும் சமூகத் தடைகளும் அவளுக்கான இனிவரும் வாழ்வை இருட்டாக்குவதற்கான முயற்சிகளும் கலாசாரத்தின் கையாலாகாத தனம் என்றே கருதமுடியும். பெண்ணைப் பொட்டு எனும் அடையாளத்திற்குள் தந்திரமாகச் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே எனது கருத்து! “பொட்டு ” என்பதற்குப் பின்னால் பெண்களின் அடிமைத்தனம் வேர் விட்டு விழுதெறிந்து தாண்டவமாடிக் கொண்டிருப்பதை ஏனோ அவள் அறிந்தும், அறியாதது போலிருக்கிறாள் . ஆண்கள் அடிமைப்படுத்துகிறார்கள் என்று குரல் கொடுக்கும் சில சமயங்களில் பெண்களும் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள், என்பதைப் பற்றிப் பெரிதளவு பேசாமல் இருந்து விடுகிறார்கள். தேவையற்ற சடங்குகளின் கடத்திகளாக பெண்கள் இருக்கிறார்கள். பொட்டழிக்கும் இந்தச் சடங்குகளைப் பெண்களே நடத்துகிறார்கள். ஆக நாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் கண்மூடித்தனமாக நடக்கும் இந்த நடத்தைக் கோலங்களை, நம் படித்த சமுதாயம் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றதா?

வடக்கு கிழக்கில் இறுதிப் போரில் மட்டும் 89000 கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலும் யுத்தம் தவிர்ந்த வேறு காரணங்களினால் கணவனை இழந்த பெண்கள் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட துணையை இழந்த இவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடியில் வாழ்வாதாரத்தைப் பற்றிச் சிந்திப்பதா? இல்லை இந்த அடக்கு முறைகளில் நொந்து போய் முடங்கிக் கிடைப்பதா? நமது சமூகம் பின்னடைந்து போவதை நாம் சந்தோசமாகப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா?

இந்தக் கேள்விகளை நான் என்னை நோக்கியும், என் சார்ந்த சமூகத்தை நோக்கியும் கேட்பதற்காக “பொட்டு” எனும் தலைப்பில் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி வெளியீடு செய்திருக்கிறேன். இதைப் “பொட்டு” யூட்டியூப் தளத்தில் பார்வையிட முடியும். படத்தின் உருவாக்கத்தில் அதிகளவாக பெண்களே ஈடுபட்டிருக்கின்றனர். தயாரிப்பு , இயக்கம் ஒளிப்பதிப்பு, ஒலியமைப்பு , ஆடை வடிவமைப்பு , ஒப்பனை , உதவி இயக்கம் , தயாரிப்பு மேற்பார்வை , தயாரிப்பு முகாமை , புகைப்படம், நடிப்பு போன்றவற்றில் பெண்கள் பங்காற்றியிருந்தனர். இது கணவனை இழந்த ஓர் பெண்ணின் போராட்டத்தைப் பற்றிப் பேசுகிறது.

நாம் அனைவரும் எழுந்து பேச எத்தனிப்போம், மாற்றங்கள் நிச்சயம் நிகழும்! ஒரு பெண் கணவனை இழந்த பின் தனக்கான, தன் குழந்தைகளுக்கான தேவைகளையும் எதிர்காலத்தையும் அழகான திருப்தியான வாழ்வையும் தனி மனிதியாக நின்று தைரியத்தோடு உருவாக்க முனைகிறாள் என்றால், அவளை விட மங்கலமானவள் வேறு யார் இருக்க முடியும்? அவளோடு தொடங்குங்கள், உங்கள் விடியல் விழாவாயிருக்கும்!

1,713 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *