அதுவும் ஜீவகாருண்யமே!
- மாதவி
தினமும் காலையோ மாலையோ சூரியன் அழைத்தால் உடன் புறப்பட்டு செல்ல ஒரு ஆற்றங்கரை.எனது இல்லத்திற்கு மிக அருகில் உள்ளது.
ஆறு என்றதும் தாயகத்தில் மலை உச்சியில் இருந்த வீழ்ந்து பல பாறைகளை மோதி எந்த வித வலியோ சலிப்போ இல்லாமல் ஆடி பாடிப் பாயும் ஆறுபோல் இது எனக் கற்பனை செய்யவேண்டாம்.
இது செயற்கை ஆறு. பல நூறு வருடங்களுக்கு முன் வெட்டப்பட்டது. ஒரு கப்பல் ஒன்றை ஒன்று விலக்கும் அளவுக்கான அகலம் மட்டுமே.அருகே இரு புறமும் நடை பாதையும் சைக்கிள் பாதையும் உண்டு.
இப்பாதையில் நில்லாமல் ஓடுபவர்கள் அதிகம். அப்படி அவர்கள் நின்றால் அவர்களது நாய் காலைத்தூக்குது என்று அர்த்தம்.
ஆற்றில் அனுமதி பெற்றவர்கள் மட்டும் மீன்பிடிப்பார்கள். பறவைகள் பல நீரிலும் இறங்கும் விமானம் போல் அடிக்கடி இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தன. இருந்தாலும் வாத்துக்கூட்டமே அங்கு அதிகம்.
ஒடுபவர்களைத் தவிர என்னைப் போல் அமைதியாக நடப்பவர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
அவர் நடக்கும் போது ஆற்றில் உள்ள தாராக்களுக்கு உணவு கொடுத்தும் மகிழ்வார்கள்.
சிலரைத் தினமும் சந்திப்பதால் எதோ ஒரு உறவு நமக்குள் உருவாகும். முன்பெல்லாம் அதனைக் காதல் என்றுதான் எண்ணுவோம். ஆனால் இப்போ காதலுக்கும் அப்பாலும் அழகான பல உறவுகள் தெரிகின்றது. பலரைத் தினமும் காண்பதால் அவர்கள் புன்சிரிப்போடு நடந்தனர். சிலர் நின்று கதைக்கவும் செய்தனர்.
உங்கள் பிள்ளைகள் எங்கு வேலை செய்கிறார்கள்.
சொந்த வீட்டில் இருக்கிறீங்களா? தனி வீடா அப்பாட்மென்ரா?
கார் என்ன வைத்திருக்கிறீங்கள். நீங்கள் இந்த நாட்டு சிற்றிசனா?
இப்படியான எங்கள் வளமையான பல கேள்விகளில், எந்தக் கேள்வியும் இருக்காது.
யாவும் இயற்கையை ஒட்டியே இருக்கும்.
சரி இப்போ கதைக்கு வருகிறேன்.
ஒருவர் ஆற்றங்கரையில் தாராக்களுக்கு உணவு போட்டுக்கொண்டு இருந்தார்.
என்னைக் கண்டதும் புன் சிரிப்புடன் தாராக்களின் மகிழ்ச்சியைப் பார்த்தீர்களா? தினமும் நான் மீன் பிடித்து வீடு திரும்பும் போது இதனைச் செய்வேன் என்றார்.
உண்மையில் தாராக்கள் நன்றி சொல்வது அதன் சத்தத்தில் தெரியும். எந்த மொழிக்காரருக்கும்; புரியும்.
கூட்டமாக ஓடிவந்து உண்ணும் அழகே தனி.
இப்படி ஆர்வமாக உண்கிறதே என்ன உணவு கொடுக்கிறீர்கள் எனக்கேட்டேன்.
உடன் சொன்ன அவர் பதில் என்னை……..!
பதில் இதுதான்;:
மீன் பிடிக்க தூண்டிலில் செருகிய உயிர் புழுக்களை, மீன்பிடித்த பின் வீணாக்காமல், தாராக்கு போடுகிறேன் என்றார்.
நான் சட்டென்று சொன்னேன், ஏன் வீண் என்று நினைப்பான், அந்தப் புழுக்களை மீண்டும் மண்ணில் போட்டு வாழ விடுங்களேன்! அதுவும் ஜீவகாருண்யம் தானே என்றேன்.
என்னை யார் என்று தெரியாது! என்ன இனம்!! என்ன மதம்!!! எதும் அறியார்.
பட்டென்று மண்ணைக் கிளறி புழுக்களை போட்டுவிட்டு புன்னகைத்தார்.
இப்படியான புன்னகை மனிதரின் முகத்தில் மிக அரிதாகவே பூக்கின்றது. இதுவும் ஜீவகாருண்ய மே!
பக்கத்தில் காத்திருந்த ஒரு பெண் அந்த தாராக்களுக்கு கொடுக்க கைநிறைய தானியங்களுடன் காத்து நின்றாள்.
1,265 total views, 3 views today