ஈழத் தமிழர் விவகாரத்தை மேற்கு நாடுகள் கைவிட்டுவிடும் ஆபத்து?
திருமலையில் கால் பதிக்கப்போகின்றதா அமெரிக்கா? திருமலை துறைமுகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அமெரிக்காவுக்குக் கொடுக்கப்படவிருப்பதாக செய்தி ஒன்று வெளிவந்திருக் கின்றது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்களத் தேசியவாத அமைப்பினர்தான் இந்தச் செய்தியை வெளியிட்டு கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். உத்தியோகபூர்வமாக இது தொடர்பில் செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், இது போன்ற செய்திகள் இவ்வாறு கசியவிடப்படுவது வழமையானதுதான். திருமலை துறைமுகத்தின் மீது அமெரிக்காவுக்குள்ள அக்கறை இரகசியமானதல்ல. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடத்தில் இருக்கும் திருமலை துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில், 1970 களின் பிற்பகுதியில் இருந்தே அமெரிக்கா ஆர்வமாக இருந்திருக்கின்றது. அமெரிக்கா – சோவியத் யூனியன் பனிப்போர் உச்சத்திலிருந்த அந்தக் காலத்தில், ஆசியப் பிராந்தியத்தில் தமது தளங்களை அமைப்பதில் அமெரிக்கா அக்கறைகாட்டி வந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
1977 இல் அதிகாரத்துக்கு வந்த ஜெயவர்த்தன அமெரிக்கா சார்பான ஒருவராகவே இருந்தமை அதற்கு வாய்ப்பாக இருந்தது. திருமலையை அவர் அமெரிக்காவுக்குக் கொடுக்கப்போகின்றார் என்ற கருத்துக்கள் பரவலாக வெளிவந்த அதேவேளையில், புத்தளம், இரணவில பகுதியில் வோய்ஸ் ஒப் அமெரிக்காவுக்கு ஜெயவர்த்தன இடமளித்திருந்தார். இவை அப்போது இந்தியாவுக்குத்தான் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கையில் இதன் பிரதிபலிப்பையும் அவதானிக்கலாம். அதாவது, வெளிநாட்டுப் படைகள் தளம் அமைப்பதற்கு இலங்கை இடமளிக்கக்கூடாது என உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது இருந்த பனிப்போர் நிலை இப்போது மாறிவிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான சோவியத் யூனியன் தலைமையிலான முகாமில் இந்தியா அப்போதிருந்தது. அந்த முகாம் இப்போது இல்லை. உலக ஒழுங்கு மாற்றமடைந்திருக்கும் பின்னணியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது. சீனாவை எதிர்கொள்வது என்ற நிலையில்தான் இந்தியா இன்று அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுகின்றது. இலங்கையில் தன்னால் நேரடியாகச் செய்யமுடியாத சிலவற்றை அமெரிக்காவின் மூலமாகச் செயற்படுத்துவதற்கு இந்தியா முற்பட்டிருப்பதும் தெரிகின்றது. இலங்கையில் முகாம் அமைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை 1980 களில் கடுமையாக எதிர்த்த இந்தியா இப்போது அவ்வாறு எதிர்க்கும் நிலையில் இல்லை. அதிகரித்துள்ள சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு இதனை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா தயாராகவுள்ளது. திருமலையில் உள்ள பாரிய எண்ணைக்குதங்கள் தற்போது இந்தியாவிடம்தான் உள்ளது. இந்த நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை திருமலையில் முழுமையாகத் தவிர்த்துக்கொள்வதற்கு அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவுகள் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தமை வெளிப்படை. குறிப்பாக, அமெரிக்க காங்கிரஸில் அண்மையில் கொண்டுவரப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் பின்னணியும் இதுதான். பொறுப்புக்கூறல் உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்தப் பிரேரணை அமைந்திருந்த போதிலும், தமது பூகோள அரசியல் இலக்குகளை அடைவதற்கான உபாயமாக தமிழர்களுடைய பிரச்சினையை அந்த நாடுகள் பயன்படுத்தியிருக்கின்றன என்பதே உண்மை. இந்த வகையில், திருமலையை நீண்டகால குத்தகையில் அமெரிக்காவுக்குக் கொடுப்பதன் மூலம், மேற்குலகின் அழுத்தங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது இலங்கையின் உபாயமாக இருந்திருக்கலாம்.
மோசமடைந்துள்ள இலங்கையின் மேற்கு நாடுகளுடனான உறவுகளைச் சீரமைக்கக்கூடிய ஒன்றாகவே பஸில் ராஜபக்ஷவின் அரசியல் மீள்வருகை எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கப் பிரஜாவுரிமையையும் பெற்றிருக்கும் பசில் ராஜபக்ஷ, மேற்குலகுடனான உறவுகளைச் சீரமைக்கக்கூடிய ஒருவராக மட்டுமன்றி, மோசமடைந்திருக்கும் நிதி, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய ஒருவராகவும் பார்க்கப்படுகின்றார். அமெரிக்காவில் ஒரு மாத காலம் தங்கியிருந்த அவர், கொழும்பு திரும்பி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றிருக்கும் நிலையில்தான் திருமலையை அமெரிக்காவுக்குக் கொடுப்பது குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றது.
அதிகாரத்திலுள்ள ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில் கோட்டாபயவும், மஹிந்தவும் ஏதோ ஒரு வகையில் போர்க் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள். அதனைவிட, சீனாவுடன் நெருக்கமானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள். ஆனால், பஸில் ராஜபக்ஷ அவ்வாறானவர் அல்ல. மேற்குலகுடன் மட்டுமன்றி, இந்தியாவுடனும் நெருக்கமான உறவைக்கொண்டிருப்பவர். அந்த வகையில், இந்தியாவுடனும், சீனாவுடனுமான உறவுகளைச் சீராக்கக்கூடிய ஒருவராகவே பஸில் ராஜபக்ஷ அடையாளம் காணப்படுகின்றார்.
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் திட்டமிடப்பட்டு அமெரிக்காவின் மிலேனிய உடன்படிக்கை பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட சூழலிலேயே இலங்கையுடனான அமெரிக்க உறவும் பெரும் நெருக்கடிக்குள் நகர்ந்தது. அதனையடுத்தே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்திருந்தன. இந்நிலையில்தான், திருகோணமலை துறைமுக உடன்படிக்கை தற்போது எட்டப்பட்டுள்ளது. இது மில்லேனிய உடன்டிபடிக்கைக்கு மாற்றானதாக அமையலாம் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுக உடன்படிக்கை எனத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் செய்துகொள்ள உத்தேசித்துள்ள உடன்படிக்கையானது ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கம் செய்துகொள்ளவிருந்த எம்.சி.சி உடன்படிக்கையை விடப் பயங்கரமானது” எனக் குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கதது. இது அமெரிக்காவுடான உடன்படிக்கையாக இருந்தாலும், இந்தியா, ஜப்பான் ஆகியனவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதை முன்முயற்சிக்கு எதிராக அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட இந்தோ பசுபிக் தந்திரோபாயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவலை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் 3000 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுப் பெறுமதியாக இந்த உடன்படிக்கை செய்யப்படவுள்ளது என்று ஜூலை 12ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார். திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்தச் செய்தி சரியானதாக இருந்தால், அமெரிக்க இலங்கை இடையே 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சீராக்குவதற்காக இலங்கை அரசு முன்னெடுத்துள்ள முக்கிய நகர்வாக இது இருக்கும்.
இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீரமைக்க இது உதவும் என்றாலும், இதன் மறுபக்கத்தில் மற்றொரு பிரச்சினையும் உள்ளது. அதாவது, ஈழத் தமிழர் விவகாரத்தை மேற்கு நாடுகள் கைவிட்டுவிடும் ஆபத்தும் இதன் பின்னணியில் உள்ளது.
847 total views, 3 views today