லண்டன் தமிழர்களிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு திறந்த மடல்
வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமையோடு உறுப்புரிமை வகிக்கும் லண்டன் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறியவே இல்லை என்பதை நேவகடiஒ ல் இப்போது வெளியாகியுள்ள உங்கள் படம் ஜெகமே தந்திரம் நிரூபித்திருக்கிறது.
2016ல் வெளியான உங்கள் படம் -இறைவி- பலரின் மனதையும் தொட்டது. வெவ்வேறு தொழில்களைப் புரியும் வெவ்வேறு பெண்கள் அவர்களின் கணவரால்,காதலனால்,சரியாக மதிக்கப்படவில்லை என்பதை நீங்கள் காட்டியிருந்த விதத்தினால் பட ரசிகர்கள் மனதில் நீங்கள் உயர்ந்து நின்றீர்கள். அவர்கள் ஒவ்ருவருமே ஒரு இறைவி (பெண் தெய்வம்) என்று நீங்கள் காட்டியிருந்தீர்கள் அபாரம். இத்தனைப் புகழையும் பாராட்டையும் உங்கள் இப்போதையப் படம் ஜெகமே தந்திரம் தவிடு பொடியாக்கியிருக்கிறது.
இந்தியா-பிரிட்டன் ஆகிய இரண்டு பெரிய நாடுகளையும் சம்பந்தப்படுத்தி ஒரு கதையை உருவாக்கும் போது, அது பற்றி நீங்கள் எந்தவிதமான ஆய்வும் செய்ததாகத் தெரியவில்லை. மும்பை திரையுலகத்தினரோ, ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களோ இப்படியொரு கதையைப் படமாக்கும் முன்னர் சுநளநயசஉh- கதை ஆராய்ச்சிக்காக கணிசமாகச் செலவிட்டிருப்பார்கள். ஆனால், நீங்களோ உங்கள் தயாரிப்பாளர் சசி காந்த் அவர்களோ கதை ஆய்வுக்கென எவ்வித நேரத்தையோ, பணத்தையோ செலவிட்டதாகத் தெரியவில்லை. இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழ் அகதிகளை தோணிகளில் ஏற்றிவந்து இலண்டன் கடற்கரைகளில் இறக்கிவிடும் புனித கைங்கரியத்தை செய்து வருகிறார் சிவதாஸ் என்ற ஒரு இலங்கைத் தமிழர். இலங்கை தமிழர்களைக் கடத்திக் கொண்டுவந்து பிரிட்டனில் இறக்கி விடுவது மட்டுமல்ல, அவர்கள் வாழ்வதற்கு வழிகள் புரிந்து தமது மீன்பிடி வள்ளங்களிலும் வேறு இடங்களிலும் இந்த இலங்கை அகதிகளை சிவதாஸன் பயன்படுத்துகிறார்.
கடத்தல் மன்னன் சிவதாஸமும் அவரது இலங்கைத் தமிழ் அகதிகளும் பொஸ்னியா, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு வள்ளங்களில் போய் மீன் வியாபாரம் என்ற போர்வையில் இயந்திர துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் தங்கம் போன்றவற்றை மீன்களோடு கொண்டுவந்து இங்கு பிரிட்டனில் இறக்குகிறார்கள். முதிய குஜராத்தி மனிதர் ஒருவர் இறந்ததும் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு சிவதாஸன் அமரர் ஊர்தி ஒன்றை அனுப்புகிறார். அந்த வண்டியில் கூரைக்குள்ளும் சவப்பெட்டிக்கு அடியிலும் ஆயுதங்கள், தங்கம் ஆகியவை கடத்தப்படுகின்றன. இலங்கை அகதிகளை வைத்து இப்படியாகக் கடத்தல் செய்து இலங்கையர் சிவதாஸனை முறியடித்து அவரது வர்த்தகத்தை கைப்பற்ற விரும்பினார் ஒரு பிரிட்டிஷ் வெள்ளைக்கார தாதா-பெயர் ஜேம்ஸ். இதற்காக தமிழ்நாடு மதுரையிலிருந்து (உங்கள் சொந்த ஊர் மதுரை என்பதும் எமக்குத் தெரியும்) ஒரு தமிழக ரவுடியை (தனுஷ்) இங்கே லண்டனுக்கு வரவழைக்கிறார் ஜேம்ஸ்.
ஒரு குஜராத்தி மனிதரின் இறுதிச் சடங்கை சிவதாஸனும் அவரது இலங்கை தமிழ் அகதிகளும் செய்துவிட்டு அவரது சடலத்தை தமது அமரர் ஊர்தியில் ஏற்றுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு வேலை செய்யும் தனுஷ் அமரர் ஊர்தியை வழிமறித்து சடலத்தை வெளியே எடுத்துவிட்டு அமரர் ஊர்தியை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து ஆயுதங்களையும் தங்கத்தையும் கைப்பற்றுகிறார்கள். பட்டப்பகலில் ஒரு இறுதி ஊர்வலம் இடைநிறுத்தப்பட்டு சடலம் பலவந்தமாக வெளியே எடுக்கப்படும் போது, ஐயா அந்த பிரிட்டன் வீதியில் ஆள் நடமாட்டமோ பொலிஸ்காரர்களோ கிடையாது.
ஐயா கார்த்திக், நீங்கள் நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலப் படங்களைப் பார்த்திருந்தாலும் அவற்றுக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அவதானித்திருக்க மாட்டீர்கள். அமெரிக்காவில் ஒரு கடையில் போய் சாக்லெட், பிஸ்கட், துப்பாக்கி ஆகியவற்றை யாரும் பணம் கொடுத்து வாங்கலாம். இந்த உரிமை அமெரிக்க அரசியல் சாசனத்தில் அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் மக்களின் இந்த உரிமையில் கைவைக்கத் துணிய மாட்டார். ஆனால் இங்கு பிரிட்டனில் கதையே வேறு. இங்கு யாருமே துப்பாகி வைத்திருக்கக் கூடாது. பொலிஸ்காரர்கள் கூட காவல் கடமைக்குச் செல்லும் போது துப்பாக்கியை எடுத்துச் செல்ல மாட்டார்கள். பிரிட்டிஷ் பொலிசாரின் தோளில் ஒரு சிறிய வானொலி தொடர்பு சாதனம் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பொலிசாரும் அந்த வானொலி மூலம் பொலிஸ் தலைமையகத்தை அழைத்து பலநூறு பொலிசாரையும் ஆயுதங்களையும் வரவழைக்க முடியும். ஆனால் அப்படி நடப்பது மிகவும் அரிது. நெருக்கடியான ஒரு சூழலைச் சமாளிக்கச் செல்லும் பொலிஸ் வீரர்கள் குழுவில் ளுவநn புரn எனப்படும் மின் துப்பாகி இருக்கும். அதனைச் சுட்டால் குண்டுகள் எதுவும் வெளிவராது. 5000 வோட்ஸ் மின்சாரத்தை அது உமிழ்ந்து எதிரியைச் செயலிழக்கச் செய்து வீழ்த்திவிடும். ஆனால் அவரை இது கொல்ல மாட்டாது.
உங்கள் வீட்டிற்குள் ஒரு திருடன் வந்துவிட்டால் பொலிஸாரை அழைக்கலாம். பொலிஸ் குழு உடனே வரும். திருடன் கையில் துப்பாக்கியுடன் வந்தான் என்று நீங்கள் சொன்னால் அடுத்த விநாடி உங்கள் வீட்டைச் சுற்றி கவச உடை தரித்த ஆயுதப் பொலிஸார் ஹெலிகாப்டர் மூலம் அங்கு வருவார்கள். உங்கள் சுற்றாடலிலுள்ள வீடுகளில் எல்லோர் கதவிலும் தட்டி மக்கள பாதுகாப்பாக வெளியேற்றுவார்கள். முதலுதவி சிகிச்சை வழங்க வண்டிகள் தயாராக நிற்கும். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்த மாபெரும் தீவில் துப்பாக்கிகளையே அனுமதிப்பதில்லை. யாரும் அவற்றை பயன்படுத்தவே முடியாது. இது உங்கள் படத்திலுள்ள மாபெரும் ஓட்டை. துப்பாக்கிகளை கடத்திக் கொண்டு நாட்டிற்குள் கொண்டு வருவதே இங்கு வாழும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள்தான் என்று படத்தில் நீங்கள் காட்டியிருப்பது மதுரை தமிழரான உங்களுக்கு இழுக்கு. பிரிட்டிஷ் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அவமானம். நீங்கள் செய்திருப்பது மாபெரும் துரோகம்.
இந்தியாவில் தமிழகத்திற்கு வடக்கே உள்ள அதிகாரிகள் யாரோடு பேசினாலும் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். இத்தனைக்கும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. எனவே ஆங்கிலம் தமிழ் ஆகியன அவர்களுக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் பயங்கரவாத, சட்ட விரோத கும்பல் என்று வட இந்தியாவில் நிலவும் தப்பான கருத்தை உங்கள் திரைப்படம் உறுதிப் படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் பற்றிய அடிப்படை அறிவு உங்களுக்கும் உங்களது படக் குழுவினருக்கும் சூனியம் என்பதால் தான் இலங்கைத் தமிழர்கள் மீது இவ்வளவு மோசமான அழுக்கை நீங்கள் பூசியிருக்கிறீர்கள். அன்னை திரௌபதியை கொடிய கௌரவர்கள் துகிலுரிந்தது போல நீங்கள் செய்திருக்கிறீர்கள்; எங்களை நிர்வாணப்படுத்தியிருக்கிறீர்கள்.
பிரிட்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் காலை முதல் இரவு வரை வெயிலென்றும் பனி மழையென்றும் பாராமல் ஓடியோடி உழைக்கிறார்கள். தங்கள் இளைய தலைமுறை, தாங்கள் பெற முடியாமல் போன உயர்கல்வியை, பட்டங்களைப் பெற வேண்டும் என்று தீராத அவா கொண்டு உழைக்கிறார்கள். தமக்கு தமது அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட பட்டப்படிப்பு வாய்ப்புகளை இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற உயர் கல்விக் கூடங்களில் தமது பிள்ளைகளாவது பெற வேண்டும் என்ற வேட்கையோடு குழந்தைகளை வளர்க்கிறார்கள். அதில் அமோக வெற்றியும் கண்டு வருகிறார்கள். மருத்துவர், கணக்காளர், வழக்கறிஞர், பொறியியல் நிபுணர், வானவியல் நிபுணர், பங்குச் சந்தை முதலீட்டுத் தரகர் இப்படி பல்வேறு துறைகளில் சித்தி பெற்று, பிரிட்டனில் தனியாகவும் அரசாங்கத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்து வருகிறார்கள். ஓய்வு நேரத்தில் தமிழ் பள்ளிக்கூடங்கள், இசை நடனப் பயிற்சிகள், அரங்கேற்றங்கள் என்று அவர்களின் நேரம் செலவிடப்படுகிறது. விடுமுறை நாட்களில் தாயகம் சென்று மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும் தொண்டு அடிப்படையில் பணியாற்றி பாராட்டுகளையும் பத்திரங்களையும் பெற்றுக் கொண்டு பிரிட்டன் திரும்புகிறார்கள்.
பிரிட்டனின் இளம் தமிழ் யுவதிகள் பலர் லண்டனின் இரண்டடுக்கு சிவப்பு பஸ் வண்டிகளில் ஓட்டுநர்களாக பிரிட்டனின் தெருக்களில் ஓட்டி வருவதே ஒரு அழகு. இப்படியாகக் கஷ்டப்பட்டு வேலை செய்யும் பிரிட்டிஷ் தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக இலங்கை அகதிகள் -கடத்தல்காரர்கள், துப்பாக்கிதாரிகள் என்று முத்திரை குத்தி ஜெகமே தந்திரம் என்ற பெயரில் நீங்கள் பிரச்சாரப் படமெடுத்திருப்பது வட இந்திய அதிகாரத் துறையின் சில இனத்துவேஷவாதிகளின் ஆலோசனையின் பெயரிலா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
வெள்ளையின தாதாவாக நடிக்கும் ஜேம்ஸ் காஸ்மோ ஆப்ரிக்க கறுப்பினத்தவர் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் இனவெறி ஆங்கிலத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இங்கு பிரிட்டனில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஆங்கிலேயர்கள் இந்த சாக்கடை ஆங்கிலம் பேசுபவர்கள் கிடையாது. ஏனென்றால் அது இங்கு சட்ட விரோதம்.
கடைசி கட்டத்தில் வில்லன் ஜேம்ஸ் காஸ்மோவை தனுஷ் குழுவினர் கொல்லவில்லை. மாறாக அவரது பிரிட்டிஷ் கடவுச் சீட்டை பறித்துக் கொண்டு மாட்டுத்தாவணி கடவுச் சீட்டு ஒன்றை அவரது கையில் திணித்து தோணி ஒன்றில் ஏற்றி முன்பின் தெரியாத இரான்ஃஈராக் அருகே ஒரு பாலைவனத்தில் இறக்கி விடுகிறார்கள்.
பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய காந்தியடிகள் பற்றி ரிச்சர்ட் அட்டன்பரோ தயாரித்த படம் லண்டனில் வெளியான அன்று முதல் நாள் முதல் காட்சிக்கு நானும் போயிருந்தேன் ரசித்தேன். படத்தின் முடிவில் பட ரசிகர்கள் எவரும் பஸ் பிடிப்பதற்காக அவசரமாக எழுந்து போகவில்லை. ஆனால் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று மிக நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பினார்கள். அந்த கரவொலி அடங்க பல நிமிடங்கள் பிடித்தன. அதே போல பி ஆர் பந்துலு அவர்கள் தயாரித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம், தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஆங்கில மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஜெகமே தந்திரம் என்ற இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை வெள்ளையினத்தவர்கள் குறைந்தது 25 பேருக்காவது உங்களால் திரையிட்டு காட்ட முடியுமா? அமைதியை விரும்பும் பிரிட்டன் வாழ் தமிழ் இனத்தவர்கள் உங்கள் ஜெகமே தந்திரம் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள மன வலியை, வேதனையை மறக்க மாட்டார்கள். எமது தாயகத்தில் முன்னணி தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரும், இலங்கையில் வெற்றி பெற்ற முதல் தமிழ் படமான புதிய காற்று படத்தை தயாரித்த திரு வி.பி கணேசனின் மகனுமான மனோ கணேசன் அவர்கள் உங்களின் இந்தப் படம் பற்றி சலிப்புடன் விமர்சித்துள்ளார். அதிலிருந்து சில வரிகள். இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாறார் என தெரிகிறது. ஆனால், என்ன சொல்ல வருகிறார் என்பது கடைசிவரை சரியா புரியலை. தனுஷ், ஜேம்ஸ் கொஸ்மோ, ஜோர்ஜ், ஐஷ்வர்யா. நடிகர்களின் திறமை வேஸ்ட். கடைசி காட்சி அபத்தத்தின் உச்சம்.
இன்றைய தமிழ்த் திரையுலகம் புலம் பெயர்ந்த மக்களின் ஆதரவிலேயே தங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. திரைப்படம் என்பதில் கற்பனைக்கும் இடமுண்டு, விருப்பமிருந்தால் பார்க்கலாம், யாரையும் பார்க்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை,படம் பார்ப்பது அவர்களது விருப்பம் மற்றும் உரிமை என்று நீங்கள் எதிர்வாதம் செய்யலாம். ஆனால் ஒரு படத்தை மட்டுமல்ல, அந்தப் படைப்பாளியின் எதிர்காலப் படைப்புகளையும் படங்களையும் புறக்கணிக்கும் உரிமையும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை.
1,389 total views, 3 views today