உனக்கான எனது இரண்டாவது கவிதை

அம்மாவின் கவிதைகள் 02
ஒரு வைத்தியனைப்போல
வக்கீலைப்போல
விவசாயியைப்போல
நீ தொழிலாளியாகலாம்
அல்லது
விளையாட்டு வீரனாகவோ
முதலாளியாகவோ
கலைஞனாகவோ
எழுத்தாளனாகவோ
ஒரு தேசாந்திரி போல
இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோ
நீ உருவாகக்கூடும்
எனக்குத் தெரியவில்லை
இடதுசாரியாக
அகிம்சைவாதியாக
சோசலிசவாதியாக
கடும்போக்காளனாக
ஜனநாயகவாதியாக
சமூகப்போராளியாக
அல்லது
இவையற்ற வேற்றொரு
கொள்கையைக் கொண்டிருக்கலாம்
உனது தேர்வுகளில்
தடை நிற்பதற்கில்லை நான்
இந்துவாய்
கிருஸ்தவனாய்
இஸ்லாமியனாய்
பௌத்தனாய்
அல்லது
கடவுள் மறுப்பாளனாய்
மனிதத்தை முன்னிறுத்தி
மதங்கள் கடந்ததொரு மனிதனாய்
எதுவானாலும்
எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் உண்டெனக்கு
கோபக்காரனாய்
அன்பானவனாய்
தட்டிக்கேட்பவனாய்
நக்கல்காரனாய்
கருணைமிக்கவனாய்
பேராசைக்காரனாய்
வாழ்வின் அவதானியாய்க்கூட
வாழ்ந்துவிட்டுப்போகலாம்
நான் எதுவும் தெரிவிப்பதற்கில்லை
காதல்வயப்படாதவனாய்
ஓரினச்சேர்க்கையாளனாக
முன்றாம்பாலினமாக
அல்லது பிரபஞ்சத்தின்
மிகச்சிறந்த காதலனாக
நீ இருக்கலாம்
உனது உணர்வுகளை
உதாசீனப்படுத்துவற்கில்லை நான்
உன்னைப் பற்றிய
கேள்விகளுக்கெல்லாம்
தற்போது என்னிடம்
எந்தப் பதில்களுமில்லை.
சிறந்ததொரு சகமனிதனாய் இருப்பாய்
என்பதைத் தவிர
சமயங்களில்
ஒரு கவிதையின் இறுதியில்தான்
அதன் சாரமிருக்கக்கூடும்
என்பதை அறிந்துகொள்.
இனி
மீண்டுமொருமுறை
இக்கவிதையை வாசித்துவிடு.
– அம்மா