தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது.

மருந்துகளால் மாறாத இருமல்

“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”என்பது வாழ்க்கையின் அந்திம ஓரத்தில் இருக்கும் கலைஞர் அரசியல் ஜனன ஆரம்பத்தில் எழுதிய வசனம்…. பராசக்தியில் சிவாஜி பேசியது… ஆனால் தொடர்வது வேறு கதை. ..

“இருமினாள் இருமினாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமியவள்..”; கதை இது.

“என்னாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை..” அனுங்கிக் கொண்டே வந்த அந்தப் பெண்ணின் முகத்தில் சோர்வும், சோகமும் ஒட்டியிருந்தன. களைப்போடு வந்தவள் உட்கார்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்ள சில நிமிடங்களாயிற்று.
வயதானதால் ஏற்பட்ட களைப்பு அல்ல. இளம் பெண் 20-22 வயது மட்டுமே இருக்கும். சோர்ந்த கண்களைச் சுற்றி மடல்கள் சற்று வீங்கியிருந்தது. கண்களும் சற்றுச் சிவந்திருந்தது. இரண்டு வாரங்களாக இருமலாம். மிகக் கடுமையான இருமல். இருமி இருமி முடியாமல் சத்தியிலும் முடிவதுண்டாம். இதனால் சாப்பிடுவதும் குறைவு. சற்று மெலிந்தும் விட்டாளாம். மருந்தெடுத்தும் குறையவில்லை. இரண்டு வாரங்களுக்கிடையில் மூன்று வைத்தியர்களைக் கண்டும் குறையவில்லை.

சிறிய கட்டாக பரிசோதனை ரிப்போட்டுகளை என் முன் வைத்தாள். சரியாகத்தான் அவர்கள் ஆராய்ந்திருந்தார்கள். இரத்தம், சிறுநீர், சீனி, சளி, எக்ஸ் ரே என எதையும் விட்டு வைக்கவில்லை.

நிதானமாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது எந்த பிழைகளும் தெரியவில்லை. நியூமோனியா. சயரோகம், கட்டி, புற்றுநோய் எதற்கான அடையாளங்களும் கிடையாது. மிகக் கடுமையான அன்ரி பயரிக் மருந்துகள், ஆஸ்த்மாவிற்கான மருந்துகள், ஸ்டீரொயிட் என்று சொல்லப்படும் மருந்துகள், பல வகை இருமல் சிறப் மருந்துகள் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானித்தேன்.

தொண்டை, சுவாசப்பை, மூக்கு, காது என முக்கிய உறுப்புகளைப் பரிசோதித்துப் பார்த்த போது அவை யாவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது. “எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டு விட்டேன். ஒண்டும் பிரயோசனமில்லை. வயிறு ஊதி, வாய் கசந்து, சாப்பிட முடியாது போனதுதான் மிச்சம். வயிற்றையும் பிரட்டுகிறது. கொஞ்சமும் சுகமில்லை” என்றாள்.

உண்மைதான் மாறி மாறி மூன்று வகை அன்ரிபயோடிக் மருந்துகளையும் பிரட்னிசலோன் போன்றவற்றையும் உட்கொண்டால் வயிற்றில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியாதுதான். மருந்துகளுக்கு மேலாக ஆஸ்த்மாவுக்கான இன்ஹேலரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வேலை செய்யவில்லை. ஆஸ்த்மா இருந்தால்தானே அது வேலை செய்யும். “இது என்ன வருத்தம்” அவள் கேள்வி எழுப்பினாள்.

வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும், இருமல் வாந்தியில் முடிவதும், அது என்ன நோய் என்பதை எனக்கு ஓரளவு புலப்படுத்திவிட்டன. ஆயினும் நிச்சயப்படுத்தாது சொல்ல முடியாது.
நிச்சயப்படுத்துவதாயின் அவளது இருமல் எப்படியானது என்பதை அறிய வேண்டும்.

“எப்படியானது உங்கள் இருமல்? தொடர்ந்து வருமா, திடீரென வருமா, வந்தால்…” பீறிட்டு வந்தது இருமல். எனது கேள்வி முடிவதற்கிடையில். இருமினாள், இருமினாள், இருமிக் கொண்டேயிருந்தாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமினாள்.தொடர்ந்து இருமினாள். திடீரென ஒரு கேவல் சத்தம். உயிர் பிரியுமாற் போன்ற அவல ஒலி. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து. பயப்படாதீர்கள்! எதிர்பார்த்ததுதான்.

இவ்வளவு நேரமும் சுவாசத்தை உள்ளெடுக் முடியாது, இருமி இருமி வெளியே விட்ட காற்றைத் திடீரென ஒரே மூச்சில் உள்ளெடுத்ததால் பீறிட்டு எழுந்த சத்தம். Whoop அதுதான் அந்தச் சத்தம். அந்தச் சத்தத்தை வைத்துத்தான் அந்த நோயின் பெயரே வந்திருக்கிறது. அதை கொண்டே நோயை நிச்சயப்படுத்த வேண்டும். இருமல் எப்படியானது என்ற கேள்விக்கு விடை சொற்களாக அன்றி செயற்பாடாகவே வந்துவிட்டது. எனது வேலை சுருங்கியது. நோய் தெளிவானது.

வூப்பிங் கொவ் (Whooping Cough) என ஆங்கிலத்தில் சொல்வது, மருத்துவத்தில் Pertussis ஆகும். தமிழில் குக்கல் என்போம். இப்பொழுது பெருமளவு காணப்படுவதில்லை. காரணம் சிறுவயதில் போடப்படும் முக்கூட்டு ஊசிதான். இந்நோய் குணமடைய நீண்டகாலம் எடுக்கும். சுமார் 6 வாரங்கள் முதல் 2 மாதங்கள் எடுக்கும்.

ஆரம்பகட்டத்தில் மட்டுமே அன்ரிபயோரிக் மருந்துகள் உதவும். அதுவும் ஒரு குறிப்பிட வகை அன்ரிபயோடிக் மட்டுமே. இவள் சாப்பிட்டதில் அது இல்லை. வீணாக ஏனையற்றை உண்டதுதான் மிச்சம்.

நீண்ட நாள் தொடரும் இந் நோயைப் பற்றி விளக்கி, அன்ரிபயோரிக் மருந்துகள் நிறுத்தி, இருமலைத் தணிக்கும் சாதாரண மருந்துகளை கொடுத்தேன். தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது. எனது மருந்தால் அல்ல!

1,169 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *