கண்ணாடி வார்ப்புகள்
எனது நாடக அனுபவப்பகிர்வு – 10
— ஆனந்தராணி பாலேந்திரா
கடந்த இதழில் இலங்கையில் வெற்றிகரமாக மேடையேறிய எமது ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை லண்டனில் மீளத் தயாரிக்க ஆரம்பித்தது பற்றியும் அதில் என்னுடன் தர்ஷ்னி, வாசுதேவன், சிவசுதன் ஆகியோர் நடித்தது பற்றியும் எழுதியிருந்தேன்.
லண்டனில் இந்த நாடகத்தைச் சற்று வித்தியாசமாக பாலேந்திரா தயாரித்திருந்தார். இலங்கையில் மேடையேற்றியபோது அமெரிக்க நாடகத்தின் நேரடி மொழிபெயர்ப்பாக ‘கண்ணாடி வார்ப்புகள்’ அமைந்தது. லண்டனில் இதனைத் தமிழ்ச் சுழலுக்கு ஏற்றவாறு மாற்றி தமிழ்ப் பெயர்களுடன் தயாரித்தார். இலங்கையில் மகள் லோராவாக நடித்த நான் லண்டன் தயாரிப்பில் தாய் புவனாவாக நடித்தேன்.
எனது மகள் உஷாவாக நடித்த தர்ஷ்னி அப்போது லண்டனில் இருந்து தொலைவில் உள்ள bath பல்கலைக்கழகத்தில் Phd பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தார். நாங்களும் மற்றைய இரு நடிகர்களும் லண்டனில் வசித்தோம். சனி அல்லது ஞாயிறு லண்டனில் இருந்து நாங்கள் அனைவரும் Bath பல்கலைக்கழகம் செல்வோம். தர்ஷ்னி ஒரு விரிவுரை மண்டபத்தை ஒத்திகைக்காக ஒழுங்கு செய்து வைத்திருப்பார். காலை முதல் மாலை வரை ஒத்திகைகள் நடக்கும். பின்னர் இரவுச் சாப்பாட்டையும் ஒரு உணவுச்சாலையில் முடித்துக்கொண்டு லண்டன் திரும்புவோம். சில வார இறுதி நாட்களில் தர்ஷ்னி ஒத்திகைகளுக்காக லண்டன் வருவார்.
‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடக ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கும்போது நோர்வே நாட்டில் எமது நாடகமொன்றினை மேடையேற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தினரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தினை ஒஸ்லோவில் 28-08-1999ல் மேடையேற்றினோம். இதனைத் தொடர்ந்து லண்டனில் பல தடவைகள் மேடையேற்றினோம். கனடாவில் 2000ஆம் ஆண்டும் ஜேர்மனியிலும் 2003இலும் மேடையேற்றப்பட்டது.
2013ம் ஆண்டு இலங்கையில் நாடகப் பயணம் ஒன்றை எமது நாடகக் குழுவினருடன் நாம் மேற்கொண்ட போது யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ‘கண்ணாடி வார்ப்புகள்” சுருக்கிய வடிவமாக எமது மற்றைய நாடகங்களுடன் மேடையேறியது. முதன் முதலாக 78ஆம் ஆண்டு ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் நடித்த அதே மேடையில் மீண்டும் 35 வருடங்களின் பின்னர் நடித்தது எனக்கு அளவில்லாத சந்தோசத்தைத் தந்தது. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முன் நடித்தது இன்னும் கூடுதல் மகிழ்வைத் தந்தது. 2013ல் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை மேடையேற்றினோம். அங்கும் மகாஜனக் கல்லூரி, யூனியன் கல்லூரி மாணவர்கள் என சுமார் 1000 பேர்வரை வந்திருந்து பார்த்தார்கள்.
இலங்கையில் பாடசாலைகளில்;; ‘நாடகமும் அரங்கியலும்’ ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களிலும் இத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்கள். பாடத்திட்டத்தில் பாலேந்திராவைப் பற்றியும் எமது அவைக்காற்று கலைக் கழகத்தைப் பற்றியும் மாணவர்கள் கற்கிறார்கள். அதனால் எமது நாடகங்களைப் பார்ப்பதற்கு பெருந்திரளான மாணவர்களும் வந்திருந்தார்கள்.
எமது தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் 2018இல் 40ஆவது ஆண்டு நிறைவினையும், பாலேந்திராவும் நானும் நடத்தும் லண்டன் தமிழ் நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் முகமாக ஒரு பெரிய விழாவினை நடத்தத் திட்டமிட்ட போது பாலேந்திராவிற்கு ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை எமது நாடகப் பள்ளியின் இளையவர்களை வைத்துத் தயாரிக்கும் எண்ணம் வந்தது. இம்முறை மீண்டும் இலங்கையில் தயாரித்தது போன்றே நேரடி மொழிபெயர்ப்பாக இதனைத் தயாரித்தார்.
நான் தாய் அமென்டா பாத்திரத்தில் நடிக்க மகள் லோரா பாத்திரத்தில் சரிதா அண்ணாத்துரை நடித்தார். இவர் ஏற்கனவே 2013ல்; யாழ்ப்பாண மேடையேற்றத்தில் மகளாக நடித்திருந்தார். மகன் ரொம்மாக ஜெனுசன் ரொபின்சன், விருந்தாளி ஜிம்மாக சந்தோஷ் ஆனந்தன் ஆகியோர் நடித்தனர். இவர்கள் அனைவரும் புலம் பெயர் நாட்டில் பிறந்து வளரும் இளையோர். சிறுவர்களாக எமது சிறுவர் நாடகங்களில் பங்குபற்றியவர்கள். எமது லண்டன் தமிழ் நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் மேடையில் இயங்கும் முறைகள் அவர்களுக்கு இலகுவாக வந்தது.
தமிழ் ஓரளவு வாசிக்கத் தெரிந்திருந்த இவர்கள் ஆங்கிலத்திலும் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகப் பிரதியை வாசித்துப் பாத்திரங்களின் தன்மைகளை நன்கு உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்தனர். தமிழ் உச்சரிப்பைத் திருத்துவதற்குக் கூடிய நேரம் எடுத்தது. குறிப்பாக மகனாக நடித்த ஜெனுசனுக்கு அப்போது 19 வயதுதான். மிக நீண்ட தொடர் ஒத்திகைகளின் போது எல்லாரும் ஆர்வமாகப் பங்குபற்றினார்கள். 29-09-2018இல் லண்டனில் நடந்த எமது 40ஆவது ஆண்டுவிழாவில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ மூன்றாவது மீள் தயாரிப்பாக மேடையேறியது. நாடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட என்னுடன் ஈடு கொடுத்து இந்த இளையவர்கள் நன்றாக நடித்து எல்லோரது பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.
எமது 40ஆவது ஆண்டு நிறைவு நாடகவிழாவைப் பார்க்க வந்திருந்த இலங்கைத் தமிழ்ப் பாடசாலைகள் ஒன்றியம் – பிரான்ஸ் பாஸ்கரன், பிரான்ஸ்சில் இந்த நாடகங்களைத் தாம் ஒன்றியத்தின் நிதி சேகரிப்பிற்காக மேடையேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். 08-12-2018 அன்று பாரீஸ் புறநகர்ப் பகுதியில் எமது நாடகவிழா நடைபெற்றது. இதில் ;கண்ணாடி வார்ப்புகள்’ நாடகமும் மேடையேறியது. மஞ்சள் அங்கித் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்வேளையிலும் 600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ரசித்தார்கள். பாஸ்கரனும் அவரது குழுவினரும் எம்மை அரங்கிற்கு அருகிலேயே தங்க வைத்து, நன்றாக உபசரித்தது மறக்கமுடியாது. ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் 2013ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. இந்த நாடகம் 32 தடவைகள் மேடையேறிய ஒரு வெற்றி நாடகமாகும்.
1,009 total views, 6 views today