“அப்பா பப்படம் உடைத்துத் தானே சாப்பிட வேண்டும்”

நாம் கடந்து செல்லுகின்ற பாதையிலே சின்னச் சின்ன நிகழ்வுகள் எம்மை அன்று முழுவதும் மகிழ்ச்சிக்; கடலில் ஆழச் செய்துவிடுகின்றது. கள்ளங்கபடமற்ற பிஞ்சுக் குழந்தைகளின் வார்த்தைகளும் நடத்தைகளும் எம்மை மீறி எம்முடைய மனதால் அவர்களை கட்டியணைத்து முத்தமிடச் செய்து விடுகின்றன. அவை இலக்கியத்தில் இடம்பிடித்து விடுகின்றன. இல்லாவிட்டால் பாரதியார்

“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!”

என்று பாடியிருக்க மாட்டார். குழந்தைகள் சொல்லும் செயலும் போதையைத் தரும் என்பது அனுபவித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பிள்ளைகளை கண்ணன் விம்பம் என்பார்கள். கோகுலத்தில் கண்ணன் செய்த திருவிளையாடல் வாலிப வயதிலும் கூட வந்தது. கண்ணன் குறும்புகளைப் பெரியாழ்வார் அழகாக வர்ணிப்பார்.

“புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக் கன்றே”

அதாவது கண்ணன் புழுதியில் விளையாடும் போது உடம்பில் வியர்வை உண்டாகும். அந்த வியர்வையால் நிலம் சேறாகும். வியர்வை படாத இடம் புழுதியாக இருக்கும். அந்தப் புழதியோடும் சேறோடும் தாயை வந்து அணைத்துக் கொள்வான். அப்படியே சென்று தாய்க்குத் தெரியாமல் வீட்டிலிருக்கும் தயிரையும் வெண்ணெயையும் உண்பான் என்று பாடுகின்றார்.

பிள்ளைகள் செய்கின்ற காரியங்கள் பெற்றோரை அறிவு பெற்றோராகவும், பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதற்கும் பாடம் கற்பிப்பனவாகவும் இருக்கின்றன.

ஒரு சிறுவன் ஒரு திருமண விழாவுக்கு தன்னுடைய ஓடுகின்ற விளையாட்டு பொம்மை சிற்றூந்தை(உயச) கொண்டு வந்து விளையாடுகின்றார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி ஓடி வந்து அந்த சிற்றூந்தை தரும்படிக் கேட்கின்றாள். முடியாது என அந்தச் சிறுவன் மறுக்கும் போது தன்னுடைய முதலாவது கலையை அச்சிறுமி கையாளுகின்றாள். அவனை இழுத்து முத்தம் கொடுக்க எத்தனிக்கின்றாள். முத்தம் அந்தச் சிறுவனை மயக்கும் என்று நம்பினாள் போலிருக்கின்றது. ஆனால், அவனோ எதற்கும் இசைவதாக இல்லை. இரண்டாவது கலையாக இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி அந்த சிற்றூந்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றாள். பணிவாகக் கேட்டுப் பார்ப்போம் என்று அதீத 2 வயது மூளை சிந்தித்திருக்கின்றது. குறிப்பாக அந்தச் சிறுமிக்கு வயது 2 தான் இருக்கும். அதுவும் பலிக்கவில்லை. மூன்றாவதான கலையாக அடம்பிடித்து அழுகின்றாள்.

“சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!”

தாய் ஓடி வருகின்றாள். சிறுவனின் தந்தை ஒருவாறாக சிறுவனைச் சமாதானப்படுத்தி அந்த விளையாட்டுப் சிற்றூந்தை அச்சிறுமியிடம் கையளிக்கின்றார். விளையாட்டுப் பொருள் கைமாறப்பட்டது. ஆனால், உரிமைக்காரனோ தந்தையை உசார்படுத்திக் கொண்டே இருந்தார். திரும்பவும் இந்த பொம்மை உரிமைக்காரனிடம் வருகின்றது. திரும்பவும் பிள்ளை அடம்பிடிக்கின்றாள். கோபம் கொண்ட சிறுவன் அடிப்பேன் கொய்யாளா, பைத்தியம் என்ற வார்த்தைகளை வெளியிடுகின்றார். சினிமாவின் தாக்கம் பிள்ளையில் வெளிப்படுகின்றது. புலம்பெயர்வில் பெற்றோர் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சினிமா கற்றுக் கொடுக்கின்றது. அது எதைக் கற்றுக் கொடுக்கின்றது என்பதில்தான் பெற்றோரின் கவனம் இருக்க வேண்டும்.

சின்ன மூளைக்குள் நடந்த ஒரு சம்பவத்தை தந்தை எடுத்துச் சொல்லுகின்றார். பப்படம் கடையிலே வாங்கி வந்த போது அந்தப் பப்படம் இரண்டாக உடைந்து விடுகின்றது.அந்தச் சிறுவன் இந்தப் பப்படத்தை ஒட்டித் தாருங்கள் என்று அடம்பிடித்து அழுகின்றான். சமாளிக்க முடியாத தந்தையும் கையிலே ஒட்டுகின்ற செல்லோடேப்பை கொடுத்து நீயே ஒட்டிவிடு என்று கொடுக்கின்றார். சிறுவனும் கையில் வாங்கி ஒட்டும் போது பப்படம் சுக்குநூறாக உடைந்து விடுகின்றது. அந்தக்கணமே “அப்பா பப்படம் உடைத்துத் தானே சாப்பிட வேண்டும்” என்று சொல்லி சத்தமில்லாமல் சாப்பிடுகின்றார்.

இதேபோன்று தம்முடைய பிழைகளைச் சமாளிப்பதற்கு சின்ன வயதிலே தெரிந்து கொள்ளுகின்ற சிறுவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கின்றோம். பிள்ளையின் கையில் இருக்கும் பொருளை வாங்குவதற்கு பெற்றோர் என்ன கலைகளைப் பயன்படுத்துகின்றார்களோ. அதே கலையை அப்பிள்ளையும் மற்றவர்களிடம் பயன்படுத்துகின்றது. அடம்பிடித்துப் பெறுகின்ற உரிமை தவறு என்னும் பட்சத்தில் பிள்ளை தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ளப் பழகுகின்றது. பலர் கூடுகின்ற இடத்திற்கு சில பொருள்களைக் கொண்டு செல்வதில் உள்ளசங்கடங்களைப் பெற்றோர் கற்றுக் கொள்ளுகின்றார்கள்.

ஒரு பிள்ளை தாயிடமிருந்து அதிகமான அறிவுத்திறனைப் பெற்றுக் கொள்ளுகின்றது என்பதையே தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்ற பழமொழி எடுத்துக் காட்டுகின்றது. கொடூரமான உணர்வுகள் தாய் தந்தையிடமிருந்து கடத்தப்படும் போது பிள்ளைகளின் மரபணுக்களையே மாற்றிவிடுகின்றன. பிள்ளைகளின் வளர்ச்சியிலே அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

பரம்பரை மூலக்கூறுகளின் பதிவுகளையும், சூழல் கற்றுத் தரும் பாடங்களையும், பாடசாலைக் கல்வி கற்றுத் தரும் பாடங்களையும் மனித வளர்ச்சியில் மூளை உள்வாங்கி பதிவுப் பலகையில் போட்டுவிடுகின்றன. அவை தலைமுறை தாண்டி வளருகின்ற சமுதாயம் ஒரு படி மேலான அறிவு பெறுவதற்குக் காரணமாக அமைகின்றன. பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கடமைக்காகவே பிறக்கின்றான். இதனையே அப்துல்கலாம் தன்னுடைய வரிகளில் “பிள்ளைகள் உங்களுக்கூடாக வந்தவர்கள் என்பதற்காக உங்களுடைய ஆசைகளை அவர்களிடம் திணிக்காதீர்கள்” என்கிறார்.

எனவே இயற்கையிலேயே கடத்தப்படும் நுண்ணறிவுத் திறன்களும், பரம்பரை அலகுகளும் முக்கியமாகச் சூழலும் ஆட்சி செய்யும் ஒரு கூட்டுச் சக்தியே பிள்ளைகள் என்பதைப் பெற்றோரும் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும்

1,218 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *