இலங்கை, மலையகத்தின் நாட்டாரிலக்கியம் – ஓர் அறிமுகம்
-மாலினி.மோகன்
தூரமடி தொப்பி தோட்டம்
தொடர்ந்துவாடி நடந்து போவோம்..
கலை என்பது பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.
கலை, அழகு, புலமை, அறிவு என்பன எங்கும் வியாபித்துள்ள தெய்வீக அம்சங்களாகும். அவற்றின் வெளிப்பாடு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது இடத்திலிருந்துதான் தோற்றம் பெற முடியமென்றில்லை. எங்கேயும் எப்படியும் அரும்பித் தோற்றமளிக்க முடியும். கல்வியறிவோ, பாடசாலை அனுபவமோ அற்ற பலரும் அவ்வப்போது தமது அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு தாம் வாழ்ந்து வந்த கிராமிய சூழலிலே கவித்துவ உணர்வு மிக்க கவிகளை யாத்து பிரமிக்க வைத்தனர். இதுவே காலம் காலமாக நாட்டாரியல் எனும் புதுமை இலக்கியங்களாக , வளர்ந்நு வந்திருக்கின்றன. நவீன இலக்கியங்களுக்கு இது மூலாதாரமாகவும் தோற்றம் பெற்றது எனலாம். பின்னர் நாட்டாரிலக்கியத்துறை தனி ஒரு அம்சமாக வளர்ந்து இன்று தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஒரு தனித்துவ துறையாக மிளிர்கிறது. நாட்டார் இலக்கியமானது, கிராமிய இலக்கியம், பாமரப்பாடல்கள், எழுத்தாக்கா கவிதைகள், வாய்மொழி இலக்கியம், மக்கள் மரபியல், பொதுப்புராணவியல், நாட்டுப்பாடல்கள் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
நீண்டதொரு இலக்கிய பாரம்பரியத்தையும் இலக்கண மரபையும் உடைய உயர் செம்மொழியாம் எம் தமிழ் மொழியில் நாட்டாரிலிக்கியம் எனபது பன்னெடுங்காலந் தொட்டே பரவி வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தவகையில் நாட்டாரிலக்கியம் பற்றி இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தினால் 1980 ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகள் ஓரளவு கருத்துரைக்கக் கூடியதாக இருந்தது. மேலும் 1995 இந்து சமய கலாசாத் திணைக்களத்தினால் நிகழ்த்தப்பட்ட இலங்கை நாட்டாரியல் பற்றிய கருத்தரங்கும் கோடிட்டுக் காட்டக்கூடியதாகும். மேலும் அண்மைய காலங்களில் உயர்கல்வியை பயில்வோர்களாலும், உயர் கல்வித் துறைகளிலும் நாட்டரிலக்கியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய கிராமப்புற வாய்மொழி இலக்கியங்களை ஆய்வுக்குரிய இலக்கியங்களாக அனைத்துலக கல்விப் புலத்திற்கும் கொண்டு வந்த பெருமை ஜேக்கப் கிரீம் என்ற ஜேர்மன் மொழியியலாளரையே சாரும்.
பொதுவாக எந்த ஒரு மொழியிலும் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும், கதைகளும் தோன்றி விட்டன எனக் கூறப்படுகிறது. அவ்வாறு தோன்றிய பாடல்,கதை, கவிதை வடிவங்களில் தோற்றம் பெற்றதுதான் இந் நாட்டாரிலக்கியங்கள் ஆகும்.
இலங்கையில் நாட்டார் இலக்கியத்தை மலையக நாட்டாரிலக்கியம், வடகிழக்கு நாட்டாரிலக்கியம் என பிரித்து நோக்கலாம். பொதுவாக வடகிழக்கு நாட்டாரிலக்கியங்கள் கடற்றொழில் பாடல்கள், தாலாட்டுப்பாடல்களாக இருக்கின்றது. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பே நாட்டாரிலக்கிய சாயலில் ஒலித்த பாடல்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் புதுவை இரத்தினத்துரையின் கவிகள் சில இதனை பறைசாற்றுகின்றன.
“ வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல்வீசுகின்ற காற்றில்உப்பின் ஈரம்
தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் – மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்
எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது…
இங்கிருந்து பாடுகின்ற எங்கள்
குரல் கேட்காது…”
என்று தொடங்கும் பாடலில் மிகுந்த ஆபத்துக்கு மத்தியில் கடலுக்கு சென்று மீண்டு வரும் மக்களின் வாழ்வினை உணர்வு பூர்வமாக சித்தரித்து காட்டுவதாக அமைகின்றது.
மலையகத்தின் நாட்டார் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்வை, உணர்வுகளை கலை கலாசாரத்தை பிரதிபலித்துக்காட்டும் கண்ணாடியாக திகழ்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. மலையகத்தில் அவ்வாறான நாட்டார் இலக்கியம் பின்வரும் பல வகைகளில் காணப்படுகின்றது.. பொன்னர் சங்கர் கூத்து, காமன் கூத்து, மதுரை வீரன் கதை, அர்ச்சுணன் தபசு, ஏர்ப்பாடல், தாலாட்டுப்பாடல், தொழிற்பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம்.
மலையக மக்கள் தென்னிந்திய தமிழ் கிராம பின்னணியை தமது தாயகமாக கொண்டவர்கள். தென்னிந்தியாவில் பாடப்பட்ட நாட்டார் பாடல்களை எவ்வாறு இலங்கை பெருந்தோட்ட சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்தார்கள் பின்வரும் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
“தென்னிந்தியாவில்..
ஏத்தமடி தேவிகுளம்
இறக்கமடி மூணாறு
தூரமடி நைநாக்காடு
தொடர்ந்துவாடி நடந்து போவோம்..
என்ற பாடல்
இலங்கையில்…
ஏத்தமடி பெத்தராசு
இறக்கமடி இராசா தோட்டம்
தூரமடி தொப்பி தோட்டம்
தொடர்ந்துவாடி நடந்து போவோம்..
இதன் மூலம் தமது புதிய சூழ்நிலைக்கு அவர்கள் வாழ்க்கை முறை மாற்றமடைந்ததை எடுத்துக்காட்டுகின்றது.
அதாவது ஒவ்வொரு நிகழ்வின் மீதும் பொதுமக்கள் கொண்டிருக்கின்ற உணர்வினை எடுத்துச் சொல்கிறது.
“தண்டுக்கல தோட்டத்திலே
திண்டு முண்டு கணக்கப்பிள்ளை
துண்டு துண்டா வெட்டிட்டாங்க” என செல்லும் இப்பாடல் ஹட்டன் பகுதியில் தண்டுக்கலா என்ற தோட்டத்தில் நடந்த சம்பவத்தை ஆதாரமாக கொண்டு ஜில் சுல்தான் என்பவரால் எழுதப்பட்ட பாடலாகும்.
பிறந்த மண்ணை துறந்து புகுந்த மண்ணில் தம் வாழ்வை அமைத்த போது. அவர்கள் உணர்வுஉ பின்வருமாறு உருவெடுத்தது.
“கூனி அடிச்ச மலை
கோப்பி கண்ணு போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி…
எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடஞ்சி நிக்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே
வேலையத்த கங்காணி…………..”
என தொடர்ந்து செல்லும் இவ்வரிகள் மூலம் மலையக மக்கள் மீதான உழைப்பு , சுரண்டல், வேதனை என்பன எடுத்துக்காட்டப்படுகின்றன. என்றாலும் தமது துன்ப துயரங்களுக்கு குரல் கொடுத்த மலையக மக்கள் அடக்கு, ஒடுக்கு முறைக்கு எதிராக தமது போர்க்குணத்தையும் வெளிக்காட்டும் வகையில் நாட்டார் பாடல்களை பாடியுள்ளனர்.
“ ஆனை வாரத பாருங்கடி
ஆனா அசைஞ்சி வாரத பாருங்கடி
ஆனா மேல வரும் சின்ன தொரய
அதட்டி சம்பளம் கேளுங்கடி…”
தன் குழந்தையை பாச உணர்வு பொங்க உறங்க வைக்கும் ஏறாளமான தாலாட்டுப் பாடல்களை கிராம மக்கள் தமது நாட்டுப்புற வாசத்துடன் அள்ளி இறைத்துள்ளனர். உதாரணமாக,
“முத்தே பவளமே என்
முக்கனியே சக்கரையே…
கொத்து மரிக்கொழுந்தே என்
கோமளமே கண்வளர்வாய்… என தொடங்கும் பாடலைக் கூறலாம்.
ஏர்பூட்டி வேலை செய்யும் விவசாயிகள் தமது தொழிலை முன்னிறுத்தி சில நாட்டார் பாடல்களை பாடியுள்ளனர்.
“ சார் பார்த்த கள்ளனடா – செல்லன்
தாய் வார்த்தை கேளேண்டா
பாரக்கலப்பையடா செல்லனுக்கு
பாரமெத்தத் தோனுதடா…. என தொடங்கும் பாடல் ஏர்பாடலாக எடுத்துக்காட்டப்படுகின்றது.
மேலும் மலையக நாட்டாரிலக்கியத்தின் பாடல் மெட்டைப் கொண்டு எழுத்தாளர்களும் தங்கள் கவிகள், பாடல்களை படைக்கின்றனர். உதாரணம் சி.சிவசேகரம் எழுதிய
“ கும்மியடி தோழி கும்மியடி – மலை
நாடு விழித்தெழ கும்மியடி எனத் தொடங்கும் கவிதையை குறிப்பிடலாம்.
இவ்வாறாக செவிவழியாக வந்நு, வாய்வழியாக வளர்ந்நு வரும் நாட்டார் இலக்கயங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டுருந்தாலும் பல சிதைந்தும் போயுள்ளது. எனவே இப்போது இருக்கின்ற
எம்மலையக நாட்டார் இலக்கியத்தை கட்டிக்காக்கவே எழுத்தாளர்கள் தம் பணிகளை ஓர் புறம் நாட்டார் இசையை தழுவி பாடல் கவிகள் எழுதி வர, பாரம்பரிய கலையாகிய மண்ணின் மணம் வீசும் நாட்டார் இலக்கயங்களை உலகுக்குள் எடுத்துசெல்ல, அதனை பேணிக்காக்க இலங்கை அரசாங்கமும் தமது பணிக்கு சில நாட்டார் இலக்கியங்களை கல்வித்துறையில் பாடத்திட்டங்களுக்குள் புகுத்தி வருகிறது. சாதாரண தர, உயர்தர மாணவர்களின் பாடத்திட்டங்களில் மட்டுமன்றி தமிழ்மொழித்தின போட்டிகளின் போதும் நாட்டார் இலக்கியத்தை போட்டி நிகழ்ச்சியாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
மலையகத்தின் நாட்டார் இலக்கியங்களை மனித சமூகத்தின் சிகரத்தை எட்டிப் பிடித்து அழியா வண்ணமாய் தடம் பதிக்க ஆய்வாளர்களும் தமது கடின உழைப்பை வழங்க வேண்டும். வளர்ந்து விட்ட தாக சொல்லப்படுகின்ற எந்தவொரு சமூகத்திலும் ஒர் நாட்டார் இலக்கியம் அடித்தளமாய் ஓடிக்கொண்டிருக்கும் அதை வற்றாது பாதுகாப்பதன் மூலமே மனிதத்தின் வேரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
1,236 total views, 3 views today