காலத்தின் கருணை

— பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு

பறவைக் கூட்டங்கள்
எப்போதும் அழகுதான்!
பார்வைகளின் வேற்றுமைகள்
அவற்றைச் சீண்டாதவரை!
வேடர்களின் கைகளில்
புலாலாகி மரிக்காதவரை!
கூண்டுப் பறவையாகிச்
சுயம் இழக்காதவரை!
சூழ்ச்சிகளின் பின்னால்
சுதந்திரம் தொலைக்காதவரை!
பறக்கத் துடித்தவற்றின் சிறகுகள்
தீக்கிரையாக்கப்படாதவரை!

பிறர் வலிகளைக் கொண்டாடும்
வஞ்சக உலகில்
சிறகுகள் கருகிய பின்னும்
சிரித்தபடி பறப்பது
அத்தனை சுலபமில்லை!
கருகிய சிறகுகளையும்
வெட்டியெறிந்துவிட்டுச்
சிரிக்கச் சொல்வது -இங்கே
தன்னம்பிக்கையளித்தல்
என்பதாகின்றது!

எல்லாவற்றையும் தாண்டிப்
பறத்தலும் இங்கு
ஏளனப் பார்வைகளாகி
எரிந்த சிறகுகளைப்
பிடுங்கியெறிந்துவிட்டுப் பின்
அன்பெனும் பெயரோடு
தடவிக்கொடுக்கப்படுகிறது!

கரு(க்)கிய சிறகுகளும்
வெட்டப்பட்ட சிறகுகளும்
வேதனை கடந்தே
வந்ததெனப் புரிய முடியாதவர்க்குப்
பறத்தலின் பிழையெனச்
சாட்டை வீசுதல்
சாதரணமானதுதான்!

கால்களின் துணைகொண்டு
நடக்கச் சொல்லிவிட்டுப்
பாதைகள் தோறும்
கொடுமுட்களைப் பரப்பிச்
சிரித்துக்கொள்வதும்
இங்கே புதிதில்லைதான்!

பறப்பதே பறவையென்ற
அடையாளம் இழந்தும்
நடப்பதே நம்பிக்கையெனத்
துணிந்து முயல்கையில்
தூக்கி வீசிவிட்டுச்
சிரித்துக் கொல்லும்
இரக்கமற்ற மனிதர்களை
எப்போதுமே சகித்துக்
கொள்ள வேண்டியே
காலம் கட்டளையிடுகிறது!

சகித்துச் சகித்தே அவற்றின்
காலம் முடியக்கூடும்!
அன்றேல்
கருகிய சிறகுகளோடும்
பறந்தெழும் ஆற்றல்
பரவக்கூடும்!
மீண்டும் மீண்டும் அவை
மீளாத் துயரில் தள்ளப்படாதிருத்தலே
அவை வேண்டும்
காலத்தின் கருணையாகும்!

1,159 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *