அன்று ஸ்ரீமா! இன்று கொரோனா!! சில நன்மையும் கிட்டும்!!!
-மாதவி
அன்று வீட்டில் முருங்கை இலை வறை, முருக்கங்காய் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு பாவற்காய் என்று சமைத்தால், நாம் சப்பிடமாட்டோம் என்று சும்மா எரிஞ்சு விழுவோம், எந்த நாளும் அம்மா ஒன்றையே சமைக்கிறா என்று.
ஆனால் இவை இங்கே இல்லாதமையால் தேடுகின்றோம். பாவற்காய் கசக்கும் என்று, பாடசாலையிலும், அன்று பாடம் நடக்கும். ஆனால் இன்று பாவற்காய் கீரை,பூசணி,கத்தரிக்காய் பயித்தங்காய், என்று பாய்ந்து திரிகிறோம், அது மட்டுமல்ல பயிரிடுகிறோம்.
2018 ஆண்டு ஊருக்கு போனேன். பிள்ளையள் காசு அனுப்பினார்கள், விட்டைச்சுற்றி கல்லுப் பதித்துவிட்டேன், வந்த நீங்கள் பாருங்களேன், வாருங்கள் காட்டுகிறேன் என்றான் என் பழைய நண்பன். தண்ணிக்கு பஞ்சமில்லை மோட்டார் போட்டால் தண்ணிபாயும் என்றார். குளிக்கிற தண்ணி போதுமே நான்கு வாழை, ஒரு தோடை, இரண்டு பப்பாசி, வைத்தால் மணியாய் காய்க்கும் என்றேன். நண்பன் என்ன எனக்கு விசரோ என்றான். விடிய காலை படலைக்குள் மணியடிப்பான் போய்ப் பார்த்தால் நீங்க சொன்னதெல்லாம் வாசலுக்கே வரும். சும்மா தோட்டமும் துறவும் என்றான்.
ஆனால் வெளிநாட்டில் கோடைகாலம் வந்தா வைகாசி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் முடிவடையும் வரை வீட்டுத்தோட்டம்தான். இடம் உள்ளவை வீட்டுக்கு பின்னாலும், இல்லாதவை பல்கனியிலும், தொட்டிகளிலும், வாளியிலும், மண் நிரப்பிச் செய்வார்கள். யோர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து டென்மாரக், சுவிஸ், கனடா, என்று எங்கும் வீட்டு தோட்டம் தான்.
அதிலும் கனடா குளிர் என்றால் குளிர்! வெய்யில் என்றால் வெய்யில்!!. வீட்டு தோட்டத்திற்கு கேட்கத்தேவை இல்லை. நம்ம ஊரை மிஞ்சிவிடும். அத்தோடு கொரோனா வந்து எங்கும் லொக்டவுண். வழமைய விடவும் வீட்டு தோட்டம் அதிகம்.
முன்னாள் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் (1970) மிளகாய்க்கு இறக்குமதித் தடை விதிக்க, தமிழன் மிதி மிதி என்று தூலாமிதிச்சு, மிளகாய் உற்பத்தியில் வீடு வீடாக் கட்டினான்.
அதுபோல கனடாவிலும் ஐரோப்பாவிலும் இம்முறை நல்ல விளைச்சல். சிலசமயங்களில் சில விசயங்களுக்கு ஸ்ரீமாவும், கோரோனாவும் தான் சரி.
இங்கே படத்தில் காணப்படும் மரக்கறிகள், சுன்னாகம் மருதனார் மடச்சந்தையிலோ, திருநெல்வேலி சந்தையிலோ எடுத்தது அல்ல. இது கனடாவில் வசிக்கும் திரு.பொன்னையா சுந்தரலிங்கம். அவர்களது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த மரக்ககள். இவர்கள் சொந்த, ஊர் அனலைதீவு 7ம் வட்டாரம். கொக்குவில் கிராமத்தில் வசித்தவர்கள். இவர்களைப்போல் பலர் வீட்டுத்தோட்டம் செய்து பொழுதை பயனுள்ளதாகச் செய்கிறார்கள். இவர்களை வாழ்த்துவோம். ஊரிலே நிலம் இருந்தும், உறங்கி கிடப்பவர்கள் இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்த, உங்கள் அறுவடையை அவர்களுடன் சமூகவலைத்தளங்களில் பகிருங்கள். முடிந்தால் அவர்களும் விதைக்க விதை கொடுங்கள்.
832 total views, 3 views today