பச்சை மிளகாய்


ஜூட் பிரகாஷ் -அவுஸ்திரேலியா.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும். பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது ஊஐஆயு காலத்தில் நண்பனான ரஜீவ் தான்.

சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய். என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார். பச்சை மிளகாயின் அருமை எங்களில் பலருக்கு தெரிவதில்லை. அதனால் பச்சை மிளகாயை எங்கள் சாப்பாடுகளில் நாங்கள் சேர்ப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.

டின் மீன் சம்பலுக்கு பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். ஸ்ரீலங்காவில் இருந்து வரும் துயஉம ஆயஉமயசநட டின் மீனை, அப்படியே பச்சையாக கொட்டி, பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் நறு நறுவென நறுக்கிப் போட்டு குழைத்து, பாணோடோ ரொட்டியோடோ சாப்பிட்டால் சும்மா அந்த மாதிரி இருக்கும். முட்டை பொரியலிற்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். என்னதான் முட்டையோடு இணைந்து வதங்கும் வெங்காயம், முட்டைப் பொரியலைத் தூக்கி தந்தாலும், பச்சை மிளகாய் கடி படாத முட்டைப் பொரியல் கடைசி வரை திறமான முட்டைப் பொரியலாக இருக்கவே முடியாது.

பச்சை மிளகாய் எங்கட பண்டைய தமிழர் சமையலில் பயன்படுத்தப்படாத ஒரு திரவியம் என்று அண்ணர் ஒருத்தர் கூறினார். “அதடாப்பா.. பச்சை மிளகாய் அந்தக் காலத்துல மெக்சிகோவில் இருந்து மொரோக்கோவுக்கால மதுரைக்கு வந்து இங்கால மாந்தோட்டத்தில இறங்கினது” இன்று தென் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பச்சை மிளகாய் பயணித்த கதையின் வரலாற்றை அண்ணர் சுருக்கமாக கூறினார். சீனர்களின் பட்டுப் பாதைக்கு (ளடைம சழயன) எதிர்த் திசையில் நடந்து கொண்டிருந்த பண்டைய உலக வர்த்தகப் பாதையைப் பற்றி அறியும் ஆவலையும் பச்சை மிளகாய் கதை சொன்ன அண்ணர் தூண்டி விட்டார்.

பால் சொதிக்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். வெள்ளை வெளீரென்ற சொதியில், பச்சை மிளகாய் மிதக்கும் அழகே தனி அழகுதான். பச்சை மிளகாய் போட்ட சொதியோடு, இடியப்பத்தைக் குழைத்துச் சாப்பிடும் போது, வாய்க்குள் வெடிக்கும் பச்சை மிளகாய்க் காரம் தரும் கிக்கை அனுபவியாதவன் எல்லாம் மனிசனே இல்லை.
பச்சை மிளகாய் கடிபட வேண்டிய இன்னொரு திரவம் மோர். வெக்கை நாட்களில் உடம்பிற்கு இதமாக மட மடவென மோர் குடிக்கும் போது, மோரோடு சேர்த்து வாய்க்குள் விழும் பச்சை மிளகாய்க்கும் தனிப் பெறுமதி இருக்கும்.
மரவெள்ளிக் கிழங்கை அடுப்பில் வேக வைத்து, கொஞ்சமாக தேங்காய்ப் பாலும் விட்டு, கட்டிக் கறியாக வைக்கும் போது, கடைசியில் உஞ்சூண்டு பச்சை மிளகாய் சேர்த்து விட்டால், மரவெள்ளியின் சுவை வேற.. வேற… வேற ரேஞ்சிற்கு போய் விடும்.

பழஞ் சோறு சாப்பிடுவதென்றால் கட்டாயம் கடிப்பதற்கு பச்சை மிளகாய் இருந்தே ஆக வேண்டும். ஒரு கையில் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு, மறுகையில பழஞ் சோற்று உருண்டையை எடுத்து சாப்பிட்ட யுத்த கால நினைவுகளை யாராலும் மறக்கவே முடியாது.

பச்சை மிளகாய்க்கு மகுடம் சூட்டுவது அரைத்த பச்சை மிளகாய் சம்பல் தான். பச்சை மிளகாய் சம்பல் என்றால் கட்டாயம் அரைத்த சம்பலாகவே இருக்க வேண்டும், இடிக்கிற வேலைக்கு எல்லாம் போகக் கூடாது.
ஊரில் ஆட்டுக்கல்லில் அரைத்த பச்சை மிளகாய் சம்பலின் சுவையே ஒரு தனி சுவை தான். ஆட்டுக்கல் சம்பலின் தனித்துவமான சுவையை எந்த திறமான கிரைன்டரோ மிக்ஸியோ தரவே முடியாது.
சுடச்சுட சுட்ட உளுந்து வடை யோடு அரைத்த பச்சை மிளகாய் சம்பலைத் தொட்டுச் சாப்பிட்டால், சொர்க்கம் பக்கத்தில் வந்து இருந்து இளையராஜா பாட்டு பாடிக் கொண்டிருக்கும். பச்சை மிளகாய் ஒரு சுவையூட்டி மட்டுமல்ல, அதனுள் நிறைய ஊட்டச்சத்துக்களும் இருப்பதாக கிட்டடியில் எங்கோ வாசித்தேன். உடல் எடையைக் குறைக்கவல்ல சமாச்சாரங்கள் எல்லாம் இந்த உறைப்பான பச்சை மிளகாய்க்குள் இருப்பது, உடல் எடையை குறைக்க விரும்பும் அன்பர்களிற்கு நிட்சயம் இனிப்பான செய்தியாகவே இருக்கும்.
பச்சை மிளகாய்: உறைப்பு உணவு விரும்பிகளின் உண்மையான உறவுக்காரன்.

இன்றுவரை யாழ்ப்பாணத்து விவசாயிகளின் காதலியாகக் கருதப்படும் சிறிமா பண்டாரநாயக்காவின் ஆட்சியில், யாழ்ப்பாண குடாநாட்டில் மலர்ந்த விவசாயப் பொற்காலத்தில், பணம் கொழிக்கும் பயிர்களில் ஒன்றாக பச்சை மிளகாயும் திகழ்ந்தது.
கடந்த நல்லாட்சியில் யாழ்ப்பாணம் வந்து நொங்கு குடித்து மகிழ்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அதிகத்தடவை யாழ் வந்து போன ஜனாதிபதியான மைத்ரிபால சிரிசேனவிற்கும், யாழ்ப்பாணத்தாரின் உறைப்பான பச்சை மிளகாய் சம்பல் சாப்பிட கொடுத்திருந்தால் அவயல் கொழும்பில விறைப்பாக ஆட்சி நடத்தியிருப்பினமோ என்னவோ.

801 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *