என் மகனின் காதலிக்கு!
கவிதா லட்சுமி – நோர்வே
……..
கதவுகள் கழற்றிய சுவர்கள் இவை
எங்கினும் விரிந்திருக்கிறது
உனது வார்த்தைகளுக்கான
பிரபஞ்சவெளி
எல்லைகளற்ற காற்றினைப்போல
உன் உடல் காணப்போகும்
சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது
மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லை
பேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிது
நட்சத்திரத் தூவலைப்போல
முத்தம் கொட்டிய முற்றமிது
ஒவ்வொரு மாலையும்
அது நிகழும் இயற்கையென
உயிர்ப்பசி தீர்க்கவே நாடிவருவான்
பிறவேர்களில் நீர்உறிஞ்சும் செடியல்ல மகளே
உன் காலச்செடிகளை தொலைவுகாணப் படரவிடு
அவன் நதிகளைக் கண்டவன்
மழைத்துளியின் புதல்வனவன்
அருவியும் பறவையும் கடலும் சுடுமணலும் அறிவான்
சிறகுகளை அவன்
பார்வையில் கொண்டிருப்பான்
கைவசப்படும் – இந்தக்
காதலினோடான சுதந்திரம் உனக்கு
கூன்முதுகுக்கூட்டத்துக் குத்தல்களின்
பிடரியிலேறி,
தூரப்பறக்கும் இறகுகளை
ஒவ்வொன்றாய் தன்னில் ஏற்றி,
கனவுகளைக் கொய்து சூடி,
தனது நிழல்களைத் தானே அள்ளி,
அந்தக் கறுப்பினில் கவிதை நெய்து,
ஆடிக்களைத்ததொரு தாயினை முத்தமிட்டவன்
ஆயிரம் உதடுகளோடு நீ வந்தாலும்
வாழ்வுதனைச் சமைத்தளிப்பான்
மகளே!
1,099 total views, 3 views today