யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற ( குறள் 300 )
உண்மையை விட சிறந்த அறம் ஒன்றும் இல்லை என்று வலியுறுத்தும் குறளை தாரகமாகக் கொண்டு இயங்கி வரும் வெற்றிமணியின் 300 ஆவது இதழ் என்பது வெள்ளி விழாக் கொண்டாட்டம். ஆர்ப்பாட்டம் இல்லாதா நாட்டம் , பத்திரிகையே பத்தினித் தெய்வம், எழுத்துக்களோடு சல்லாபம், தமிழே சுவாசம், எழுத்தாளர்களோடு உரிமை உறவு, கலை என்றால் நிலை மறக்கும் வேக விவேகம் என திரைக்குப் பின் நிற்கும் கண்ணனின் உழைப்பின் பெருமையை ஏட்டில் அடக்க முடியுமா ?.
பத்திரிகை த் துறையில் பிற்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் , இன்று கடைபிடிக்கும் பல தொழில்முறை யுக்திகளுக்கு முன்னோடியாகவும் விளங்கி, இந்தியா, சென்னை பாலபாரதா, புதுவை இதழ் விஜயா , கர்மயோகி, தர்மம், சூரியோதயம், சுதேசமித்திரன், சக்கரவர்தனி , யங் இந்தியா ஆகிய பத்திரைகளில் பணிபுரிந்த இதழியல் முன்னோடி பாரதியின் தீவர பக்தையாய் 360 பாகையில் வலம் வரும் பாரதியை மையப்படுத்தி “நின்னைச் சரணடைந்தேன்” என்னும் தலைப்பில் கட்டுரை வரைய ஏணியான வெற்றிமணிக்கு என் எல்லையற்ற அன்புகளும் நன்றிகளும்.
சுதேசமித்திரனில் எழுத முடியாதவற்றை எழுத சக்கரவர்த்தினி பயன்பட்டதென ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல வெற்றிமணியில் அடங்காதவை சிவத்தமிழாக வடிந்தன. அதிலும் சிவனை நைந்துருகிய போழ்தில் சில கட்டுரைகளை வரைந்த அனுபவத்தையும் பெற்றேன்.
” காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் ; இந்த
பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான் ;
ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்க
பேரறிவாளன் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே “
என பாரதி தாசன் குறிப்பிட்ட மெய்க்கூற்றை மெய்யெனக்கொண்டது வெற்றிமணி. சமூகத்தின் இருளகற்றி விழிப்புணர்வைக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு பத்திரிகைப் பணி.
பத்திரிகைகளில் பணி புரிவதே தியாக வாழ்க்கை தான் என்று மகாத்மா காந்தி குறிப்பிடுவது போல தன் வாழ்வை தானே செதுக்கிக் கொண்டிருக்கும் நம் அன்பிற்குரிய சிவகுமாரன் ஐயாவின் தியாகத்தை கவிபாடும் கண்கண்ட நட்சத்திரங்கள்.
ஊடகங்களில் ஒரு செய்தியை வரைய கூம்பு வடிவ கட்டமைப்பு இருக்க வேண்டும். அதாவது சொல்ல வரும் செய்தி இரத்தின சுருக்கமாக தரமானதாக முதல் பந்தியில் இடம்பெற வேண்டும். அதில் யார் ?, என்ன ?, எப்போது?, எங்கு ?, ஏன் ?, எப்படி ? போன்றவற்றின் அடிப்படையில் அமையும். தொடர்ந்து வரும் பந்திகளில் தேவைக்கேற்றப முக்கிய விடயங்கள் குறிப்பிடப் படும். இத்தனையையும் அடக்கியதாக ஒரு வரியில் செய்தியின் மைய கருத்து தலைப்பில் அமையும். இத்தகை வடிவமைப்பு சுட்டிக்காட்டிய முன்னோடி பாரதி. தலைப்பிடல் பாரதிக்கு முக்கியம். ” மகுடமிடல் ” என்றே குறிப்பிடுவார். அத்தன்மையை வெற்றிமணியிலும் காண்கிறோம். வெற்றிமணியில் தலைப்பிடலில் அதி கவனம் செலுத்தும் திரு சிவகுமாரன் ஐயாவின் திறனை பலமுறை வியந்திருக்கிறேன்.
பாரதியின் இதழியல் அறம் என்பது அலாதியானது. பகைவனுக்கு அருள்வாய் என்று பாடியவராயிற்றே. பத்திரிகை சமத்துவத்தை பேணினார். தெரிவித்தல், அறிவுறுத்தல், மகிழ்வித்தல்,விலையாக்கல் போன்ற பத்திரிகை நிர்வாகத்தையும் நெறிப்படுத்தி தந்தார். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை துணிந்து எழுதுமாறு தூண்டிப் புனைப் பெயர்களை வைத்து வெளியிட்டார். அவர்களை வெளியே இனம் காட்டாதும் இருந்தார். வேதாந்தி, நித்தியதீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ் , ராமதாசன், காளிதாசன், சாவித்திரி போன்ற புனை பெயர்களில் எழுதி புதுமை செய்த பாரதி போல நம் வெற்றிமணி பிரதான ஆசிரியர் எழுதும் புனைபெயர் கட்டுரைகளின் தரம் அதி சூட்சுமம்.
நூற்றாண்டுகளுக்கு முன்பே பத்திரிகையில் புதுமைகளை கொண்டு வந்த பாரதி கேலி சித்திரங்களின் முன்னோடி என்ற பெருமையை கொண்டு , சித்தரங்களினூடாக செய்திகளை வெளிப்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுத்து தமிழ் பத்திரிகைகளில் சித்திரங்களை அறிமுகப்படுத்தினார். அவரிட்ட வழி வெற்றிமணியில் எத்தனை எத்தனை அழகான சித்திரங்களை வாசகர்கள் கண்டு ரசிக்கின்றனர். பேசும் படங்களை கட்டுரைக்கு ஏற்ற வண்ணம் வரையும் ஆற்றல் இப்பத்திரிகைக்கே உரிய தனிச் சிறப்பு.
எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம் என்று போற்றிய பாரதியைப் போற்றிட, ஒரு இதழனாக என்னையும் வரைந்த வெற்றிமணிக்கு என் அன்புகளை நன்றிகளாய் சமர்ப்பிக்கிறேன்
872 total views, 2 views today