முரண்களே பகையை கட்டமைக்கின்றன மன்னிப்பின் சாமரமா ? பகையின் ஆயுதமா ?
பகை ! வாழ்க்கையின் ஆனந்தங்களில் கண்ணி வெடி வைக்கும் கொடூரமான ஆயுதம். மகிழ்வின் விளை நிலங்களில் களையாய் முளைத்து, பயிர்களை மட்டுமல்லாமல் நிலத்தையே அழிக்கின்ற ஆபத்தான விஷயம் தான் பகை !
வாழ்க்கை நமக்குப் பகைக்கச் சொல்லித் தருகிறது. ஏதோ ஒன்றை நாம் பகைத்துக் கொண்டே இருக்கிறோம். அது காதலாகட்டும்,நட்பாகட்டும், வெறுப்பின் தீப்பொறியில் அது ஆரம்பமாகிறது. பின்னர் ஒரு காட்டுத் தீயாய் நமக்குள் பற்றி எரிகிறது. நமக்குள் எரியும் நெருப்பு நம்மையும் எரிக்கும் எனும் உண்மை தெரியாமல் பகையோடு நாம் பழகிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு சிறு கரப்பான் பூச்சியில் தோன்றும் வெறுப்பு, பின்னர் சக மனிதனை நோக்கி நீள்கிறது. வெறுப்பின் வாள் கொண்டு நாம் ஒருவரை வெற்றி வீழ்த்தும் போது, நமது வெற்றியின் பக்கங்களில் நாம் ஒரு பதக்கத்தைக் குத்தி வைக்கிறோம். ஆனால் அது நம்மைக் காயப்படுத்துவதையும், நாம் அதே பகையின் கரங்களில் நாம் பலியாவதையும் உணர மறுக்கிறோம்.
ஏதோ ஒரு பறவையின் எச்சம் முளைப்பித்த முள் மரமாய், பகை ஏதோ ஒரு வகையில் நமக்குள் வந்து விழுந்து விடுகிறது. அது பின்னர் அங்கே வளர்ந்து, கிளைவிட்டு, சிலாகித்து தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொள்கிறது. வெறுப்பின் முளையை நறுக்க மறுத்து நாம் பயணிக்கும் போது, பகையின் ஆலமரம் நமக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது.
நாம் பகைக்கவேண்டியது, மனிதர்களையல்ல பகையை !
இருளை இருளால் விரட்டி விட முடிவதில்லை. பகையை பகையால் விரட்டி விட முடியாது. இருள்களின் மல்யுத்தத்தில் இருளே வெற்றியடையும். அதில் எந்த இருள் சிறந்த இருள் என்று பிரித்தறிவது சாத்தியமில்லை. இருள், இருள் தான் ! எந்தப் பகை நல்ல பகை என யாரும் சொல்ல முடியாது, காரணம் நல்ல மோசம் என எதுவுமே இல்லை.
முரண்களே பகையை கட்டமைக்கின்றன. சிந்தனைகளின் முரண், சித்தாந்தங்களின் முரண், நிலங்களின் முரண், சாதீய முரண், நம்பிக்கைகளின் முரண் என ஏதோ ஒரு முரண் பகையை நமக்குள் வளர்க்கிறது. ஒரே வகையான பகைகள் எல்லாம் சேர்ந்து பேரணி அமைக்கின்றன. அவை இன்னொரு பகையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்கின்றன. வெறுப்பின் நெருப்பில், வெற்றிகள் கிடைப்பதில்லை சாம்பலே மிஞ்சும். அந்த உண்மையை உணரும் போது, படுக்கையோ சாய்வு நாற்காலியோ சம்மை இறுகப் பற்றிக் கொள்கிறது. அதற்குள் அடுத்த தலைமுறை நமது பகையின் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.
பகையை வெல்ல வேண்டுமெனின், வெறுப்பின் விதைகளை அழிக்க வேண்டும்.
பகையை வெல்ல வேண்டுமெனில், வெறுப்பின் நீரூற்றை நிறுத்த வேண்டும் !
வேர்களை வளர விட்டு விட்டு இலைகளை நறுக்குவதால் பகை அழிவதில்லை. வெட்ட வெட்ட வளரும் வாழையாய் அது தழைக்கும். அது அனுமர் வால் போல வளர்ந்து கொண்டே இருக்கும், அந்த வாலில் பரவும் அக்கினிக்கு நல்லவர் கெட்டவர் தெரிவதில்லை. எல்லாரையும் சேர்த்தே அழிக்கும் !பகையை அழிக்க வேண்டுமெனில் நாம் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் அன்பு மட்டுமே. அந்த அன்பு மட்டுமே வெறுப்பின் வீதிகளிலும் புன்னகையின் பூ மரங்களை நட முடியும்.
அன்பு கொண்டுவரும் இலவச இணைப்பு தான் மன்னிப்பு. அன்பு இல்லாதவர் மன்னிக்க முடியாது. மன்னிக்க முடியாதவர் அன்பு உடையவராய் இருக்க முடியாது. அன்பின் மரம் தரும் அற்புத கனி தான் மன்னிப்பு. இருட்டை இருட்டு விலக்காது, ஆனால் ஒரு துளி வெளிச்சம் அதை விரட்டி விடும். ஒரு துளி அன்பில் ஒளிந்திருக்கும், மனுக்குலத்தையே புரட்டிப் போடும் நெம்புகோல்.
தன் மகளைக் கொன்ற ஒரு கொலைகாரனை, சிறைச்சாலையில் சென்று சந்தித்து ‘நான் உன்னை மன்னித்து விட்டேன், குற்ற உணர்வை விட்டு வெளியே வா’ என்றாள் ஒரு கருப்பினப் பெண். அவள் சுமந்து சென்றது வெறுப்பின் தீப்பந்தமல்ல, அன்பின் அகல் விளக்கு. அது ஒரு கொலையாளியை மனிதனாய் மாற்றியது. மன்னிப்பு, தியாகத்தின் ஆழத்தில் வேர்விடுகிறது. அதனால் தான் அது பகைவனை மனிதனாய்ப் பார்க்கிறது. அவனை அழிப்பதை விட, அவனுக்குள் இருக்கும் பகையை அழிக்கப் பார்க்கிறது.
வாழ்கை என்பது கண்ணாடி போன்றது. ஒருவரை வெறுக்கும் போது, அவரும் அதையே பிரதிபலிக்கிறார். ஒருவரை பகைக்கும் போது அவரும் அதையே பிரதிபலிக்கிறார். ஒருவரை நேசிக்கும் போது அவரும் அதையே பிரதிபலிக்கிறார்.
பகை மனிதர்களுக்கிடையே மதில் சுவரைக் கட்டி எழுப்புகிறது. அது நீளமாகவும், அகலமாகவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் இரு பக்கமும் மனிதர்கள் கோபத்தில் தகித்துக் கொண்டே இருக்கிறார்கள். மன்னிப்பு, வாய்க்கால் வெட்டுகிறது. அதில் அன்பின் நீர் ஒழுக ஆரம்பிக்கிறது. அதிக மக்கள் மன்னிக்க மன்னிக்க, அது மெல்ல மெல்ல வளர்ந்து பெரு நதியாகவோ, ஒரு மாபெரும் ஆழியாகவோ உருவெடுக்கிறது. அதில் மானுடம் நீந்தி விளையாடுகிறது.
மன்னிப்பு எனும் வார்த்தை மனுக்குலத்துக்கே உரிய மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில் தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால் தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது. மன்னிப்பை உடுத்த வேண்டுமெனில் ஈகோவைக் கழற்ற வேண்டும். அது தான் மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. காரணம் மக்களுக்கு இரக்கத்தின் இருக்கைகளை விட, கர்வத்தின் கிரீடங்களே பிரதானமாய்த் தெரிகிறது.
ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும்போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. இரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது. ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்து விட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும்.
மன்னிப்பு தோல்வியின் அடையாளமல்ல, அது தான் வெற்றியின் அடையாளம். உண்மையில் பகையும் வெறுப்பும் எளிதாய் வரும். மன்னிப்பே கடினமானது. உயர்ந்த மனிதர்களால் தான் மன்னிக்க முடியும். வலிமையான மனிதர்களால் தான் மன்னிக்க முடியும். சிறந்த மனிதர்களால் தான் மன்னிக்க முடியும். வெறுப்பு எவருக்கும் வரும். அது எளிதானது, மன்னிப்பு நல்லவர்களுக்கு மட்டுமே வரும், அது நல்ல நிலத்தின் செடி. மன்னிக்க வேண்டுமெனில் நமது இதய நிலம் நல்ல நிலமாய் இருக்க வேண்டும்.
பகையை விலக்க வழி, பகைவனை விலக்குவதல்ல. அவனை அன்பினால் நெருங்குவது. அவனை அன்பினால் நெருங்க ஒரே வழி பகையின் வேர்களை பிடுங்கிப் போடுவது. அதற்கான ஒரே ஆயுதம் மன்னிப்பு மட்டுமே. சாக்கடைகளை மலர்களால் மூடி வைப்பதால் பகை அழிவதில்லை. அது உள்ளுக்குள் அசுத்தமாய் நகர்ந்து கொண்டே இருக்கும். மனதார மன்னிக்க வேண்டும். அப்போது தான் வெறுப்பு தன் சுவடுகளையும் எடுத்துக் கொண்டு விடைபெறும்.
“நீங்கள் ஒரு நபர்மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகிவிடும்” என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள். அதே நேரம் மன்னிக்கும் பழக்கமுடையவர்கள் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறார்கள் என்கின்றன பல ஆய்வுகள். காரணம், மன்னிப்பு நம் பாதைகளையல்ல, பாதங்களையே சரி செய்கிறது. மன்னிப்பு பிறரை அல்ல, நம்மையே சரி செய்கிறது.
ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்” என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை “அல் கஃபிர்” என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம். “மன்னிக்க மறுப்பவர்கள் விண்ணகம் செல்ல முடியாது” என்கிறது கிறிஸ்தவம். ஆனால் மதங்களைப் பின்பற்றும் நாடுகளில் நாடுகளில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது ? நமக்கு விருப்பம் பகையோடு சகவாசம் கொள்வது தானா ? மன்னிப்பின் மலர் மாலையை விட பகையின் முள் கிரீடம் தான் நமக்கு பிரியமா ?
பகைவர்களை மன்னிக்கும் போது, அவர்கள் நண்பர்களாகிறார்கள். எதிரிகளை மன்னிக்கும் போது அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள். பகைவர்களை மன்னிப்பதால் பகை வளர்வதில்லை. நெருப்பை அணைப்பதால் நெருப்பு படர்வதில்லை. கழுவுவதால் ஒரு பொருள் அழுக்காவதில்லை.
உலகில் விலைமதிப்பற்ற பலவும் இலவசமானவையே ! தூய்மையான தாயன்பு, மழலையின் புன்னகை, ஏழையின் சிரிப்பு, நெகிழ்வின் கண்ணீர் என உன்னதமானவற்றின் பட்டியலில் மன்னிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இலவசமாய் இதயங்களை புரட்டிப் போடும் வலிமை அதற்கு உண்டு. பகையை பகைப்போம்,பகைவனை நேசிப்போம்
1,332 total views, 2 views today