நேற்று,இன்று,நாளை! டிக்… டிக்… டிக்…

Dr.நிரோஷன் தில்லைநாதன்.யேர்மனி

இன்று காலை சாப்பிட்ட சாப்பாடு, நேற்று பள்ளியில் நடந்த புதினம், போன வாரம் வீட்டுக்கு வந்த விருந்தினர் சொல்லிய கடி ஜோக் போன்ற அண்மையில் நடந்த விஷயங்கள் நமக்கு நன்றாகவே நினைவில் இருக்கும். பொதுவாகச் சொல்லப்போனால், நமது வாழ்க்கையில் நடந்த, அனுபவித்த முக்கிய விஷயங்களை நாம் நினைவில் வைத்திருப்போம். சரி நமது வாழ்க்கையை விடுவோம். இந்த உலகில் வாழும் 790 கோடி மக்கள், அதற்கு முதல் வாழ்ந்த மக்கள், விலங்குகள் எல்லாம் இவ்வளவு காலமும் எதை எல்லாம் அனுபவித்துள்ளார்கள்? அதைப் பார்ப்போமா…?

டிக்… டிக்… டிக்… இதோ இந்த நொடியிலிருந்தே நமது பயணத்தைத் தொடங்குவோம். ஒவ்வொரு நொடியும் இந்த உலகில் எதாவது நடந்துகொண்டே இருக்கும். நொடிகள் சேர்ந்து நிமிடங்களாக, நிமிடங்கள் மணித்தியாலங்களாக, மணித்தியாலங்கள் நாட்களாக மாறி, வாரம், மாதம், வருடம் ஆகிவிடும். கடந்த ஒரு வருடத்தை எடுத்துக்கொள்வோம். அதில் என்ன தான் நடந்தது? எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஐந்து எழுத்துகளும் இரண்டு இலக்கங்களும் தான் – Covid19. ஆனால் இந்த நோய் நம்மை ஆட்டிப்படைத்தாலும் கடந்த ஒரு வருடத்தில் எத்தனையோ விஷயங்கள் நடைபெற்றன. ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளம், விண்வெளிக்குச் சென்ற தலைமை நிர்வாக அதிகாரிகள், கடமையேற்ற புதிய அமெரிக்க ஜனாதிபதி, Covid19 தடுப்பூசி,பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்து இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாம் ஒரு வருடத்தில் மட்டும் நடந்த நிகழ்வுகள் ஆகும்.

அடுத்து ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த 21ம் நூற்றாண்டை எடுத்துப் பார்ப்போம். 2000ம் ஆண்டில் பிறந்த ஒரு பிள்ளை இன்று 21 வயதை அடைந்திருக்கும். இருந்தும் இந்த 21 வருடங்களில் எவ்வளவோ நடந்து விட்டது. தீவிரவாதிகளால் தாக்கப் பட்ட அமெரிக்க twin towers ஆப்கானிஸ்தான் போர், ஈராக் போர், சீரியா போர் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, Wikipedia, YouTube, iPhone, Tesla Car போன்றவற்றை வெளிவந்ததும் இந்த நூற்றாண்டில் தான். 20ம் நூற்றாண்டைப் பார்த்தால், அதில் இரு உலகப் போர்களும், பனிப்போர், அணுகுண்டு தயாரிப்பு, சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் மற்றும் இணையத்தளம் பிறந்த நாள் ஆகியவற்றை நடைபெற்றன.

250 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி (industrial revolution) ஆரம்பித்து நமது உலகை நவீன உலகாக மாற்ற அடித்தளத்தை வைத்தது. உண்மை சொல்லப்போனால் இந்த கால கட்டத்தில் தான் பலரால் பேசப்படும் காலநிலை மாற்றத்துக்குக் காரணமான அடித்தளமும் வைக்கப்பட்டது. போன 500 வருஷங்களுக்குள் தான் சார்ல்ஸ் டார்வின் „theory of evolution“ பற்றியும் நியூட்டன் அவரது „theory of gravity“ பற்றியும் கூறினார்கள். தொலைநோக்கியுடன் வெகு தூரத்திலுள்ள நட்சத்திரங்களையும், நுண்ணோக்கியுடன் சிறிய கிருமிகளையும் பார்த்த காலம் அது.

இதுவே கடந்த 1.500 வருடங்களை எடுத்துக்கொண்டால், அதில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது மட்டுமில்லாமல், „black plaque“ என்று அழைக்கப்படும் நோய் உலகில் வாழ்ந்த 33மூ மக்களை அழித்தது. இதுவே கடந்த 4.500 வருடங்களை எடுத்துப் பார்த்தால், அதில் ரோமர் வாழ்ந்த காலத்தைத் தாண்டி பண்டைய எகிப்து கட்டிய பிரமிட்டுகளைக் காணலாம். 7000 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் எழுத ஆரம்பித்தார்கள். 12.000 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கோபுரங்களைக் கட்டி, விவசாயம் செய்யத்தொடங்கினார்கள்.

„Homo sapiens sapiens“ என்று அழைக்கப்படும் நவீன மனிதன் 200.000 வருடங்களுக்கு முன்பு தோன்றினான். 2.000.000 வருடங்களுக்கு முன்பு நவீன மனிதனுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம் நெருப்பைக் கண்டறிந்து, வேட்டைக்குத் தேவையான ஆயுதங்களையும், வேலைக்குத் தேவைப்படும் கருவிகளையும் உருவாக்கத் தொடங் கினான். 6.000.000 வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கும், மனித குரங்குக்கும் பொதுவான மூதாதயர் வாழ்ந்த காலம். எனவே இந்த உலகில் 6.000.000 வருடங்களாகத் தான் மனிதன் வாழ்ந்த காலமாகக் கருதப்படும்.

6,5 கோடி வருடங்களுக்கு முன்பு எனது செல்ல மகனுக்கு மிகவும் பிடித்த தொன்மா அதாவது டைனோசோர் ஆகிய விலங்குகள் அழிந்த காலமாகும். இந்த தொன்மா நமது உலகை சுமார் 16,5 கோடி வருடங்களுக்கு ஆண்டு வந்தன. இந்த உலகில் முதல் விலங்கு தோன்றிய காலம் 60 கோடி வருடங்களுக்கு முன்பு ஆகும். இதுவே ஒரே ஒரு உயிரணுவாலான உயிரினங்களை எடுத்துக்கொண்டால், இவை சுமார் 410 கோடி வருடங்களுக்கு முன்பு பூமியில் தோன்றியிருக்கக் கூடும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.

450 கோடி வருடங்களுக்கு முன்பு நமது சூரியன் உருவானது. இதைத் தொடர்ந்து 6 கோடி வருடங்களுக்குப் பின் பூமி உருவானது. இதுவே நமது பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால் அது சுமார் 1375 கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றியது. இதற்கு முதல் என்ன இருந்தது என்று கேட்டால் அது யாருக்குமே தெரியாது. எதிர்காலத்தில் தெரியுமோ என்று கூடச் சொல்லமுடியாது.

சரி… இத்துடன் நிறுத்துகிறேன். ஒரு சில நொடிகள் இடைவேளை எடுத்துக்கொள்வோம். இது தான் இந்த பிரபஞ்சத்தின் இறந்தகாலம் ஆகும். இனி நமது எதிர்காலத்தைப் பார்ப்போமா? இந்த உலகில் அடுத்த நொடி, நிமிடம், மணித்தியாலம், நாள், வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு என்ன நடக்கப்போகிறது என்று எனக்குச் சொல்லத் தெரியாது. அது எவராலும் முடியாது. ஆனால் இன்றைய ஆராய்ச்சிகளின்படி இன்றிலிருந்து 100கோடி வருடங்களில் நமது சூரியனின் வெப்பம் அதிகரித்து பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும். தொடர்ந்து 400 கோடி வருடங்களுக்குப் பின் சூரியன் அழிந்து விடும். அவ்வளவு காலத்திற்கு மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தால், அவை நமது பூமியை விட்டு வேறு ஒரு கிரகத்தையும் நட்சத்திரத்தையும் நோக்கித் தான் போகவேண்டும். அதற்குப் பிறகு என்ன நடக்கும்? அடுத்த 10.000 கோடி வருடங்களில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அணைந்து, நமது பிரபஞ்சமே அழிந்துவிடும். அவ்வளவு தான்!

அடடா… இதைக் கேட்கவே கொஞ்சம் பயங்கரமாக இல்லையா? அது சரி தான், ஆனால் இதில் உள்ள நல்ல விஷயம் என்ன தெரியுமா? நமது பூமி, சூரியன் மற்றும் பிரபஞ்சம் அழிவதற்கு இன்னும் எத்தனையோ கோடி வருஷங்கள் உள்ளன என்பது தான். எனவே இதை எல்லாம் நினைத்துக் கவலைப் படாமல், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு நொடி, நிமிடம், மணித்தியாலம், நாள், வாரம், மாதம், வருடம் அனைத்தையும் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் மிகவும் சந்தோஷமாகக் கழியுங்கள். நேரம் என்பது விலை மதிப்பற்றது. விட்டால் பிடிக்கவே முடியாது. எனவே அதைப் பயன் படுத்துங்கள்…
டிக்… டிக்… டிக்…

1,274 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *