காட்டில் புலி வேட்டையும் புகைப்பட வேட்கையும்!


(பயண அனுபவம்)
எம். லோகேஸ்வரநாதன்
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன்-யேர்மனி

வனங்களோடு அளவளாவி, வாழ்க்கை நடத்தும் விலங்குகளை காணவும்; ஆபிரிக்காபோகப்புறப்பட்டேன். புகைப்படக் கலை எனது வியாபார நோக்கையும் தாண்டி உயிர்மூச்சு என்று சொல்லலாம். பரந்து கிடக்கும் இந்த உலகின் வனப்பையும் அதன் அதிசயத்தையும் என் கண்வழியாக கண்டு அதன் அழகை ஆர்ப்பரிப்போடு அனுபவித்திட வேண்டும் என்பது மாத்திரமன்றி கண் வழி கண்ட அழகை பொக்கிஷப்படுத் தவும் எண்ணியே ஆப்பிரிக்கா நோக்கிய எனது பயணம் ஆரம்பித்தது.

ஆபிரிக்காவின் மசைமரா வின் (கென்யா) (Masai Mara Kenya) லொறியான் சபான் முகாமிலே (Lorian safari Camp) 7 நாட்கள் தங்கினேன். அன்று விடியற்காலை, இதனமான குளிர் (16ழஉ) தான். போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உறங்க மனம் இடம்கொடுக்கவில்லை. கடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். மணி 4 காட்டியது. கடகடவென்று 5 மணிக்கு பயணப்படத் தொடங்கினேன்.
உலகின் பெரும் மிருகங்களான சிங்கம், புலி, யானை, ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் போன்றவற்றின் வாழிடமே இந்த கென்ய மசை மரா காடுதான். என் காட்டுவழிப் பயணத்திற்கு ஒரு சிறு வாகனமும், அனுபவம் மிக்க சாரதி ஒருவரையும் வழங்கினார்கள். என்னுடைய இந்த பயணத்திற்கும் எனது பொக்கஷங்களான புகைப் படங்களிற்கும் இந்த சாரதியின் பங்கும் பெருந்து துணைபுரிந்தது என்றால் மிகையாகாது.
சூரிய உதயம் காணவே அதிகாலையிலே காடுநோக்கிப் புறப்பட்டேன். கென்யா நேரப்படி காலை 6.30 இருக்கும். கதிரவன் மெல்ல மெல்ல தன் பொன்நிற கதிர்களை வானவெளியில் பரவவிட்டான். ஆகா! என்ன அழகு. அந்த நேரத்தில் எங்களுக்கு வந்த தொலைத் தொடர்பு சாதனத்தின் அழைப்பு மணி ஒரு செய்தி சொன்னது. புலிகள் வேட்டைக்காக கிளம்பிவிட்டது என்பதே அச்செய்தி.
சிவங்கை புலி (Cheetaths) இனத்தை சேர்ந்த 05 புலிகளில் (Five Brothers) 04 வேட்டைக்கு தயாராகி உள்ளன என்றதும் காற்றைக் கிழித்துக் கொண்டு விரைந்தது வண்டி. வண்டியை முந்திக் கொண்டு என் எண்ணங்கள் அந்த இடத்துக்கு சென்றன. எப்படியெல்லாம் விதவிதமாக புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று கற்பனையில் சிந்தித்துக் கொண்டே போனேன். நேரம் காலை 7.00 ஐ தொட்டுக் கொண்டிருந்தது.
புலிகள் ஒரு நாள் உணவு உண்டால் அடுத்த நாள் எதுவும் உண்ணமாட்டாதாம். இந்த புலிகள் இரண்டு நாட்களின் முன்புதான் தம் உணவை உண்டார்கள் என சாரதி கூறினார். எனவே இன்று வேட்டை உறுதி என்பதை நான் தீர்மானித்துக் கொண்டேன். (கிட்ட தட்ட 72 மணித்தியாலயங்கள்தான் இவைகளால் உணவு உண்ணாமல் இருக்க முடியும்).

அன்று புலி வேட்டையை பார்க்க என்னைப் போலவே 13 வண்டிகள் தொடர்ந்தன. காலை 7 மணியளவில் மிருகங்களைத் தேடி நடக்கத் தொடங்கின புலிகள். உயரமான மண் மேடுகளில் ஏறி நின்று நாற்திசையும் நோட்டம் விட்டன.
20 இலிருந்து 30 நிமிடங்கள் வரை நடக்கும், பின் 15 நிமிடங்கள் உயரமான இடங்களில் ஓய்வெடுக்கும். நானும் புலிகளோடு சலிக்காமல் 50மீற்றர் இடைவெளியில் பின் தொடர்ந்து கொண்டே இருந்தேன்.

இதில் இன்னுமொரு சுவாரசியமானதும் விசித்திரமானதுமான சம்பவம் நடந்தது. நடக்கும் புலிகள் தங்கள் எல்லையை அடையாளப்படுத்திக் கொண்டன. 07 இடங்களில் ஒவ்வொரு முறையும் 04 புலிகளும் சேர்ந்து ஒவ்வொரு மரத்தையும் சுற்றி சிறுநீர் கழித்தன. தங்கள் எல்லையை நுகர்ந்து பார்த்து பிரித்தறியும் எல்லை போட்டார்கள். மிருகங்களுக்கும் உள்ள அறிவின் விந்தையை பார்த்து வியந்து நின்றேன்.

நேரம் காலை 11 மணி. 35 வண்டிகள் வலம் வந்தன. காட்டை சூரியன் தனது வெப்பக்கரங்களால் விசிறிக்கொடுத்தான். சூடு அதிகரிக்க தொடங்கியது. 12மணி, 1 மணி நேரம் கடந்து கொண்டிருந்தது. புலிகள் களைத்து விட்டன. நானும்தான். புலிகள் நித்திரை கொள்ளத் தொடங்கின. என் சாரதியின் காவலில் நானும் ஒரு சிறு தூக்கம் போட்டேன். கிட்டத்தட்ட 18 கிலோ மீற்றர் காட்டின் பகுதியை கடந்து விட்டோம். புலி வேட்டை இன்னும் இல்லை.

இப்போது பிற்பகல் 2 மணி. புலிகள் தூக்கம் கலைத்து நடக்கத் தொடங்கின. உயரமான மேட்டில் நோட்டம் விட்ட புலிகள் திடீரென ஓட ஆரம்பித்தன. என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. பரபரப்புடன் தொலை நோக்கு கருவியை எடுத்துப் பார்த்தேன். பார்த்தபோது ஏதோ சில மிருகங்கள் மட்டுமே தெரிந்தன. கிட்டத்தட்ட 2 கிலோ மீற்றருக்கு அப்பால்.

நிலைமையை உணர்ந்த சாரதி மின்னல் வேகத்தில் செயல்பட, மீண்டும் ஒரு தடங்கல். அனுமதி வழங்கப் பட்ட பாதையை விலகி வண்டி ஓடியே ஆகவேண்டும். காட்டு பாதுகாவல் படையினரிடம் முன் அனுமதிப் பத்திரம் பெற்றால் மட்டுமே பாதையை விலகி வண்டி ஓட்டலாம். அசுர வேகத்தில் தொலைபேசி மூலம் ஒரு தொகைப் பணத்தை செலுத்தி உடனே அனுமதியைப் பெற்றேன்.

இப்போது வெறும் 06 வண்டிகள் தான் நின்று கொண்டிருந்தன. சில பொறுமையிழந்து திரும்பிச் சென்று விட்டன. சில தொலைக்காட்சி நிறுவனங்களின் வண்டிகள் ஒன்றிரண்டு மீண்டும் இணைந்தன.
புலிகள் ஓடிய திசையை அவதானித்த சாரதி, புலிகளை விட வேகமாக வண்டியை ஓட்டி குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கு மாடு, எருமை, மான், தொம்சங்கல், பன்றி, வான்கோழி, வரிக்குதிரை போன்ற விலங்குகள் தம் பாட்டிற்கு மேய்ந்து கொண்டிருந்தன. பக்கத்திலே ஆறு ஒன்று அமைதியாய் ஓடிக் கொண்டிருந்தது. மாடுகள்கிட்டத்தட்ட 20 இற்கும் மேலே மந்தையாக மேய்ந்து கொண்டிருந்தன. கண்ணுக்கு எட்டியதூரம் வரை புலியை காணவில்லை. நான் அங்கும் இங்கும் புலிகள் இருக்கின்றனவா என தேடினேன். புலிகளை காணவேயில்லை. அப்போது புதர்களுக்குள் ஏதோ மின்னியது. உன்னித்துப் பார்த்தேன். ஒரு புலியின் ஒரு ஜோடி கண்கள் இரையை வேட்டையாட கூர்மையாக கவனித்த பார்வையை அது. அதன் அருகருகே மற்றைய புலிகளையும் கண்டாச்சு. என்னைப் போலவே மேய்ந்து கொண்டிருந்த விலங் குகளும் புலியை கண்டுவிட்டு வெருண்டு ஓட ஆரம்பித்தன.
புலிகள் சுதாகரித்துக் கொண்டன. தந்திரமாக இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்து சிறிது நேரம் பதுங்;கி பக்கவாட்டால் வந்து ஓடுகின்ற மாட்டு மந்தையை இடைமறித்தது. புலிகளின் இலக்கு சிறு விலங்குகள் இல்லை. பெரிய விலங்குகளின் பின்னே பாய்ந்து கலைக்கத் தொடங்கின. 120 கிலோமீற்றர் வேகத்தில் புலிகள் ஓடுகின்றன. அவற்றின் முன்னே மாட்டுமந்தையும், வரிக்குதிரையும் உயிரை காப்பாற்ற வேகமாய் ஓடின. புலிகள் எந்த மிருகத்தை வேட்டையாடப் போகின்றன என்று உணர வெறும் 03 செக்கன்தான் எனக்கு எடுத்தது. மாட்டு மந்தைகளைத் தான் வேட்டையாடப் போகின்றன என உணர்ந்த அடுத்த கணமே என் கண்களும் கைகளும் புகைப்படக் கருவியை இயங்கத் தொடங்கின. என் சாரதி எனக்கேற்ற நிலையில் வண்டியை தயார் செய்தார். மாட்டு மந்தைகளை நோக்கிய புலிகளின் நுண்ணறிவை பாருங்களேன். கடைசியாக ஓடிய மாட்டை விட்டுவிட்டு புலி பாய்ந்து ஓடி முதன் முதலில் ஓடிய பசு மாட்டை தொண்டைப் பகுதியில் கவ்வியது. பசுவும் விடவில்லை. உயிர்வலியல்லவா? திமிறி ஓட முற்பட்டது. புலியோ பிடியை விடவில்லை மடக்கி விழுந்தியது. பசுவின் அலறலால் ஒரு நொடி காடே அதிர்ந்தது. இப்போது மற்ற புலிகளும் இணைந்து பசுவை மடக்கின. 3 நிமிட போராட்டத்தின் பின் பசு புலிகளின் இரையாகியது.

என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகைப்படங்களை எடுத்தேன். இப்படியான புகைப்படங்கள் என் வாழ்வின் பெரும் பொக்கிஷங்களே. என்னால் எடுத்த படங்களை சரிபார்த்துக் கொள்ள அப்போது நேரம் இருக்கவில்லை.

புலி வேட்டை முடிந்தது. இப்போது அவைகள் தங்கள் உணவை உண்ண தொடங்கின. பசுவின் முலைப் பகுதியையே முதலில் கடிக்கத் தொடங்கின. அங்கு மென்மையான இறைச்சி என்பதனாலே. உணவு உண்ட புலியொன்று நிமிர்ந்து வாயோரம் இரத்தம் சொட்ட ஆக்ரோசமாய் இருந்த நிலையை பதிவாக்கிக் கொள்ளவும் நான் தவறவில்லை. என் புகைப்பட கருவியை வருடிய படி, கண்முன்னே ஒரு பசுமாடு பரிதவித்த காட்சி மனதை இறுக்கினாலும், இது இயற்கையின் நியதியே என மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.

869 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *