மிருகமும் பறவையும் பல நேரங்களில் மனிதனைவிடவும் உயர்வானவை!


-கௌசி.யேர்மனி

மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. ழுடலஅpயைn டியவள என்று சொல்லப்படும் வெளவாள்கள் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு 2018 கிலோ மீற்றர் பறந்து போயிருக்கின்றதாம். இவை காலநிலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன என அறிவியலாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஒரு பறவை மனிதன், விலங்குகளுடைய தலைமயிரை எடுத்து பிறக்கப் போகும் குஞ்சுக்காக கூடு கட்டுகின்றது. பஞ்சுமெத்தை தேடிக் குஞ்சுக்குப் பஞ்சணை அமைக்கின்றது. இதேபோல் புலி இறந்த உடலை உண்ணாது. சிங்கம் தன் பசிக்கு மேலதிகமாக வேட்டையாடிய மிருகத்தை உண்ணாது. மிகுதியை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடும். இவ்வாறு பண்புகள் கொண்ட உயிரினங்களை இலக்கியங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன.

புலவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு உவமையாக பிற பொருளை எடுத்துக் காட்டுவது வழக்கம். சொல்லாதததை சொல்லிக் காட்டுதல் அவற்றில் ஒற்றுமை,அறிவியல், தகவல்களும் காணக்கிடக் கின்றன.

சங்க காலப் புலவர்களில் ஒருவர் சத்திமுத்தப் புலவர்;. சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று பாண்டியமன்னனை கண்டு அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற மதுரைக்கு வந்தார். வருகின்ற வழியிலே குளத்தங்கரையில் குளிரில் வாடிக் கொண்டிருந்தபோது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் சங்கப்பாடல்களில புறநானூற்றுத் தொகுப்பிலே காணக்கிடக்கிறது.

“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

முதலிலே ஒரு ஏவல் செய்ய வேண்டும் என்றால், அவர்களை புகழ்ந்து தள்ள வேண்டும். அந்தப் பாணியிலேயே நாரைக் கொக்கின் வாய் பனங்கிழங்கைப் போன்று நுனிப்பகுதி கூராக இருக்கின்றதாகவும் பவளம் போன்ற நிறத்தில் இருப்பதாகவும் கால்கள் சிவந்த நிறத்தில் அழகு செய்வதாகவும் புகழ்ந்து தள்ளுகின்றார். அதன் பின் நீ போகின்ற பாதை தானே என்பது போலவும் திருத்தல யாத்திரை செல்பவர்கள் தம்முடைய மனைவியுடன் தெப்பக் குளங்களிலே நீராடிச் செல்வது வழக்கம். அதனால், நீ உன் மனைவியுடன் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு வந்து காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வணங்கி தலயாத்திரை முடிக்கும் சமயத்திலே அந்த சமயத்தில் திரும்பும் போது மதுரையில் மழைநீர் வடிந்த ஓலை வீட்டுச் சுவரிலே பல்லி எப்போது நல்ல செய்தி சொல்லும் என்று காத்துக் கிடக்கின்ற என் மனைவியிடம் ஆடை இல்லாமல் வாடைக்காற்றிலே மெலிந்து கைகளால் உடம்பைப் பற்றிக் கொண்டு கால்களால் உடலைத் தழுவியபடி பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள். என நாரையைத் தூது அனுப்புவதாக இப்பாடல் வருகின்றது.

பல்லி சொல்லுதல் நல்ல சகுனம் என்பது தமிழர்கள் நம்பிக்கை. இந்நம்பிக்கையையும், நாரை நீண்ட தூரப் பயணம் செய்யும் என்னும் செய்தியையும், சிறிய துளையூடாக பார்வையைச் செலுத்தக்கூடிய திறனை நாரைக் கொக்கு பெற்றிருக்கின்றது என்னும் அறிவியல் உண்மையையும் இப்பாடல் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே வீட்டினுள் கூரையைப் பார்த்திருக்கும் தன் மனைவியை இந்நாரை கண்டு கொள்ளும் இச்செய்தியைக் கொண்டு சொல்லும் என்று தூதாக நாரையை சத்திமுத்துப் புலவர் அனுப்புகின்றார்.

குறிஞ்சி நிலத்திலே விலங்காக குரங்கும், பறவையாக மயிலும். முல்லைநிலத்திலே விலங்காக கரடி, முயல் போன்றனவும், பறவையாகக் கிளியும். மருத நிலத்து விலங்காக எருமை பறவையாக நாரை, நெய்தல் நிலத்து மீன், கடற்காகம், பாலை நிலத்து யானை, கழுகு போன்ற உயிரினங்களை வகைப்படுத்திய பாடல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. இதேபோல சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உயிரினங்களை தம்மிடம் பாடற்சுவையூட்ட பாவலர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
நளன், தமயந்தியைக் காட்டில் விட்டுச் செல்கின்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைப் பாடப்புகுந்த புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக தற்குறிப்பேற்ற அணியிலே கூறுகிறார்.

“தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்”

கடுந்தோட் கரவீரனார் என்னும் புலவர் தோழி கூற்றாக சங்க இலக்கியத்திலே ஒரு பாடல் பாடுகின்றார்.

“கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே”

கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்தால், இக்கவலையைத் தாங்காத பெண்குரங்கு மரம் ஏறுதலை கற்று அறியாத வலிய குட்டியை சுற்றத்தாரிடத்தில் ஒப்படைத்து விட்டு, உயர்ந்த மலையிலே தாவி தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்; சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ நள்ளிரவில் வரவேண்டாம்;.
அப்படி நீ வந்தாயானால், நாம் வருந்துவோம். என்று இப்பாடலில் குரங்கினத்தின் வாழ்க்கையை எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறு இலக்கியங்களில் பிற உயிரினங்கள் அழகாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

1,249 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *