மெய் வெளியில் ஒரு பாடம்!
- சாம் பிரதீபன் -இங்கிலாந்து
நாற்றமடிக்காத ஊத்தைகளின் சொந்தக்காரன் ஒருவனை
அப்போதுதான் முதன் முதலில் சந்திக்கின்றேன்.
அந்த வீதி வளைவைத் தாண்டியபின் அடுக்கடுக்காய் கடைகள் நிறைந்திருந்தன. லண்டனில் றிச்மண்ட் புகையிரத நிலையத்தில் இருந்து இரண்டு நிமிட நடைத்தூரத்தில் இருக்கும் அந்தப் பகுதியில் தான் நானும் அவனும் அப்போது அமர்ந்திருந்தோம்.
எனக்கும் அவனுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் அப்போது இருந்தது. வீதியோரம் போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன், அவன் தரையில் அமர்ந்தபடியிருந்தான்.
அவனுக்கு அருகில் “Help” என்று கையால் எழுதப்பட்ட பதாதை ஒன்றும், “Homeless”என்று எழுதப்பட்ட பதாதை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு அழுக்குப்படிந்த பழைய கைப்பைகள், உருட்டி மடிக்கப்பட்ட ஒரு துணி, அவனுக்கு முன்னால் அங்கும் இங்குமாகக் கிடந்த சில சில்லறைக் காசுகள். இவைகள் தான் அப்போது அவனைச் சுற்றி இருந்தன.
அவனுடைய கண்களிலே விசாலமான பெரும் கனவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
உடைகளிலும் அவனிலும் அழுக்கு வெளியே தெரிந்த அளவுக்கு துர்நாற்றம் ஒன்றும் வெளிவரவில்லை.
நாற்றமடிக்காத ஊத்தைகளின் சொந்தக்காரன் ஒருவனை அப்போதுதான் முதன் முதலில் சந்திக்கின்றேன்.
அந்த இடத்தில் சந்திக்க வருவதாகச் சொன்ன எனது ஊடக விளம்பரதாரர் ஒருவருக்காக அந்த கோப்பிக் கடையின் கண்ணுக்கெட்டும் தூரத்தில் போடப்படிருந்த அந்த இருக்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வாங்கிய McDonald Burger உடன் இன்னமும் உட்கார்ந்திருக்கிறேன். என்றும் இல்லாதவாறு காட்டுப் பசி ஒன்று என்னை துன்பப்படுத் தியபடி இருக்கிறது.
சாப்பிடலாம் என உணவை வெளியே எடுக்க முனையும் ஒவ்வொரு தடவையும், தரையில் இருந்தபடி அவன் என்னை குறு குறு என்று பார்த்தபடி இருந்தான். அவனுக்கு முன்பாக அந்த உணவை உண்ண முடியாதவாறு ஏதோ ஒன்று என்னைத் தடுத்தபடியே இருந்தது. என் காட்டுப் பசி தந்த துன்பம் ஒருபுறமும், அவனது குறு குறு பார்வை ஒரு புறமுமாக என்னைச் சங்கடப்படுத்தியபடியே இருந்தது.
“Hungry” என்ற பதாதையை அவன் வைத்திராதரால் அவன் பசியோடிருப்பதாய் நான் நம்பவில்லை. அத்தனை பரிதாபத்துக்குரியவனாயும் அப்போது அவன் எனக்கு தெரிந்திருக்கவில்லை.
அவனது பார்வையில் இருந்து என் பார்வையை விலக்கியபடி வேறு பக்கம் பார்த்தபடி சாப்பிடத் தொடங்கினேன். மின்னல் வேகத்தில் கையில் இருந்த உணவு எனது வயிற்றுக்குள் இறங்கியது.
ஒரு ஐந்து நிமிடங்கள் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் மெதுவாய் எழுந்து என் அருகே வந்தான். தனக்கு ஒரு டிரசபநச வாங்கித் தருமாறு கேட்கப்போகிறான் என்பதாகத்தான் நான் அப்போது நினைத்துக் கொண்டேன்.
“ஒரு இரண்டு நிமிடம் என்னுடைய பொருட்களை கண்காணித்துக் கொள்வாயா? இந்தக் கோப்பிக் கடைக்குள் சென்று மூத்திரம் பெய்துவிட்டு, குடிக்க ஒரு கோப்பியும் வாங்கிவிட்டு வருகிறேன்” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.
“இவற்றைக் கண்காணிக்க ஒருவன் தேவையா?” என நான் நினைத்திருக்கக்கூடும் என அவன் ஊகித்தானோ என்னவோ இரண்டு அடி கோப்பிக்கடையை நோக்கி நகர்ந்தவன் மீண்டும் என் பக்கம் திரும்பி “இவற்றுள் நீ நினைப்பது போல் பெறுமதியான பொருள் ஒன்றும் இல்லை. ஆனால் இவற்றுள் எவை இருக்கின்றனவோ அவை எனக்கு மிகப் பெறுமதியானவை” என்று கூறிவிட்டு தனது ஊன்றுகோலை ஊன்றி ஊன்றி கோப்பிக் கடை நோக்கி நகர்ந்தான்.
மிகச் சாதாரணமானவர்களாய் நாம் கருதுவோரிடம் இருந்துதான் மிகக் காத்திரமான விடயங்கள் அவ்வப்போது வந்து விழுகின்றன.
“பெறுமதி என்பது விலைகளில் இல்லை. தேவைகளில் இருக்கிறது”
என்பதை மிகச் சாதாரணமாய் ஒரு தெருவோரப் பிச்சைக்காரன் தெரிந்து வைத்திருக்கிறான்.
என் வயிற்றுக்குள் இறங்கிய டிரசபநச செமிபாடடையவில்லை என்று நினைக்கிறேன். வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு எரிவு வந்து போனபடி இருந்தது. நான் இப்போது அவன் கண்காணிப்புக்கு விட்டுப்போன பொருட்களை குறு குறு என்று பார்த்தபடி இருக்கிறேன்.
1,057 total views, 2 views today