வெற்றிமணி சாதனை! 300
பொன்.புத்திசிகாமணி.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சாதனை என்பது எங்கிருந்தும் வருவதில்லை.இது தனக்குள் இருந்து வருவது. சிலருக்கு சின்னவயதிலிருந்தே இதற்கு அத்திவாரம் இடப்படும். ஆர்வம்,கனவு,ஆசை,இலட்சியம்,இவைகளுக்கான முயற்சி இந்த சாதனையைச் சாதிக்க வைக்கிறது. இந்த மாதம் முன்னூறாவது இதழாக வெளிவந்திருக்கும் “வெற்றிமணி”க்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டு மென்கிற ஆர்வத்தினால் இந்த ஆய்வை மனம் தேடியது.
நாம் உடுத்துக்கொள்ளும் உடை,அணிந்து கொள்ளும் நகைகள்,வாங்கி ஓடும்,வாகனங்கள்,வீடு இன்னும் பல என்று சொல்லிக்கொண்டே போகலாம்.இவையாவும் முதலில் எங்களுக்குப் பிடித்திருக்க வேணும்.அதனால் மனம் பூரிப்படைகிறது. நல்ல சேட் போட்டிருக்கிறாய்,அழகான நகை அணிந்திருக்கிறாய்,நல்ல கார் வைத்திருக்கிறாய், அழகான வீடு கட்டி இருக்கிறாய் என்று மற்றவர்களால் பெருமையாய் பேசும்போது தான் மனம் மகிழ்ச்சியில் இரட்டிப்பாகிறது.
“வெற்றிமணி”யின் வெற்றி வரலாறும் இத்தகையதே. இதன் ஆசிரியர் திரு.மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் ஆசையும்,ஆர்வமும்,அதனால் எழுந்த விடாமுயற்சியும்,அதற்கான கடின உழைப்புமே இந்த முன்னூறாவது இதழ்வரை ,வெளிவந்து சாதனை நாயகனாக்கி இருக்கிறது. தான் விரும்பியதை மற்றவர்களுக்குக் கொடுத்து அவர்களால் விரும்பியதை இன்று பாராட்டாகப் பெறுகிறார்.
முதலில் அவர் தன்னைத்தானே தட்டிக் கொடுத்திருப்பார். முகத்தில் ஒரு மலர்ச்சி தோன்றியிருக்கும். சாதிச்சுவிட்டாயடா சிவகுமாரா! இன்னும் சாதிக்க ஆயத்தம் செய். என்று எழுந்து,கம்பீரமாக நின்றிருப்பார். இதனையே மற்றவர்களும் புகழ்ந்து பாராட்டும் போதுதான் கால்கள் அந்தரத்தில் நடப்பது போல் தோன்றும்,மனம் பூரிப்படையும்.இது எனது கற்பனை.ஆனாலும் நிதர்சனம்.
இது ஒரு சாதனை தான்.இதற்கான வேதனைகளும் அதிகம் இருக்கும்.தந்தையால் ஆரம்பிக்கப் பட்டு தனையனால் வளர்க்கப்பட்ட இச்சஞ்சிகை பல எழுத்தாளர்களை உருவாக்கி அலங்கரித்திருக்கிறது.இன்னும் பலரை உருவாக்கக் காத்திருக்கிறது. இலங்கையில் பல மாவட்டங்களில் தன்னை வளர்த்துக் கொண்டு,உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் பறந்து சென்று “வெற்றிமணி”யாக ஒலித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையை வாழ்த்துவதில் எமக்குமே பெருமைதான்.
ஓவியனாக,இலக்கிய வாதியாக,ஒளிப்பதிவாளனாக,எழுத்தாளனாக,பேச்சாளனாக,கலைஞனாக என்று பன்முகத் திறமைகொண்டவர்.ஆசிரியர் திரு.மு.க.சு.சிவகுமார் அவர்கள். தான் மாத்திரமல்லாது தனது குடும்பத்தையும் இதற்குள் இணைத்துப் பெருமை கொள்ள வைத்தவர். எனது ஆக்கங்களையும் பிரசுரித்து மகிழவைத்தவர். அவருக்கு எனது நன்றிகள். வெற்றிமணி” ஆசிரியர் என்றில்லாமல்.”சிவத்தமிழ்”ஆசிரியராகவும் இன்று மிளிர்கின்றார்.மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் இந்த மணி ஓங்கி ஒலிக்க இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.
1,138 total views, 3 views today